For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

700 அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களுடன் செம்மொழி கண்காட்சி!

By Chakra
Google Oneindia Tamil News

Tamil Conferance
கோவை: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று பொக்கிஷங்களுடன் மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் நாளை வியாழக்கிழமை (ஜூன் 24) பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் 700 அரிய வகை கலைப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அரங்கில் பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் நாகரிகம், தொல்லியல், தமிழ் இலக்கியம் ஆகிய சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அரங்கில் 700 அரியவகை கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தை குறிக்கும் வகையில் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட குளியல் தொட்டி, கட்டிடங்கள் மற்றும் விளக்கப் படங்கள் இன்றைய இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரங்கில் வைத்துள்ளனர்.

1012-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பார்வதி சிலை, ரிஷபாந்திகர் சிலை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, பழங்கால துர்க்கை சிலை, தமிழர்களின் பண்டைய கால இசை கருவிகள், ஓலைச் சுவடிகள், அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொருட்கள், பழங்கால நாணயங்கள் என 26 பெரிய அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. தமிழர்கள் அனைவரும் பார்த்து மகிழக்கூடிய வகையில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி அரங்க திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கிறது. மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இந்த கண்காட்சி அரங்கைத் திறந்துவைக்கிறார். மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி முன்னிலை வகிக்கிறார்.

பொதுமக்கள், மாணவர்களின் பயன்பாடு கருதி மாநாடு முடிவடைந்த பின்னரும் இந்த கண்காட்சி அரங்கை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக கண்காட்சி

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி 500 ஆண்டுகளுக்கு முந்தயவை உள்பட பல்வேறு அரியவகை புத்தகங்களும் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியினை மாலத்தீவு அரசின் பண்பாட்டுதுறை இணையமைச்சர் அகமது நசீர் திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலை வகிக்கிறார்.

6 அடி உயர திருக்குறள் புத்தகம்

இந்த கண்காட்சியில் தமிழ் சார்ந்த ஏராளமான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கண்காட்சியில் 6 அடி உயரத்தில் பிரமாண்ட அளவில் திருக்குறள் புத்தகம் தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது. வி.ஜி.பி. தமிழ்ச்சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த திருக்குறள் 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டது.

தண்ணீர் பட்டாலும் நனையாத அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்தியேக தாள்களில் அந்த புத்தகம் செய்யப்பட்டு உள்ளது. புத்தகத்தின் எடை 11/4 டன் ஆகும். அந்த புத்தகத்தில் 1,330 திருக்குறளும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X