இலவசம் பெறுவதை தவிர்க்கவேண்டும்-திருவாடுதுறை ஆதீனம் அறிவுரை

மயிலாடுதுறை: பிறரிடம் இலவசங்களை பெறும் பழக்கத்தை மக்கள் கைவிடவேண்டும். அதேபோல், தானம் தர விரும்புவோர் தங்கள் சொந்த உழைப்பில் கிடைத்ததை தரவேண்டும் என திருவாடுதுறை ஆதீனம் கூறினார்.

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான கோமுத்தீசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது.

திருஞானசம்பந்தர் பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் ஊர்வலமாக வீதியுலா வந்தார். இதைத் தொடர்ந்து, கோயிலில் 15க்கும் மேற்பட்ட ஒதுவார்கள் திருப்பதிகம் பாடினர்.

பொற்காசுகளை கோயில் பலிபீடத்தில் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, திருஞானசம்பந்தர் உலவாக்கிழி பெறும் காட்சி நடைபெற்றது.
விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியர் கலந்துகொண்டு பேசுகையில்,

குறைந்த உழைப்பில் அதிக பொருளை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், குறுக்கு வழியில் செல்வத்தைச் சம்பாதிக்க பலர் ஆசைப்படுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.

பல்வேறு தரப்பினராலும் இலவசமாக தரப்படும் பொருள்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். தன்னுடைய உழைப்பின் மூலம் கிடைத்த பொருளையே அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்பதையும் மக்கள் உணரவேண்டும்.

கிடைத்த பொருளை அனைவருக்கும் கொடுப்பவரே அருளாளர் என அழைக்கப்படுகிறார். இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களிலும் அருளாளர்கள் உள்ளனர்.

அடுத்தவர் நலனுக்காக வேள்வி செய்வதற்கு பொருள் வேண்டும் என்ற நோக்கில் பெருமானைப் பாடிய திருஞான சம்பந்தர், 11 பதிகங்களை பாடித்தான் பொருளைப் பெற்றாரே தவிர, உழைக்காமல் பொருளை பெறவில்லை.

இதிலிருந்து மக்கள் உழைத்துதான் பொருளைப் பெற வேண்டும் என்பதை சமுதாயத்தின் முன்னோடியாக இருந்து வழிகாட்டியுள்ளார் திருஞானசம்பந்தர் என்பது தெரிய வருகிறது என்றார்.

Please Wait while comments are loading...

Videos