For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்- புற்றுமண் பிரசாதம் தரும் சங்கரன்கோவில்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Gomathy Amman
அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில். தனது ஒருபாகத்தை உடன் பிறந்தவருக்கு விட்டுக்கொடுத்து பிறந்த வீட்டுப் பெருமையையும், புகுந்த வீட்டு தியாகத்தையும் நிலைநிறுத்தியவள் அன்னை பார்வதி. ஏன் இந்த கோலம். எதை முன்னிட்டு ஊசி முனையில் தவம். அதற்கொரு சுவையான வரலாறு உண்டு.

சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூலகாரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.

அன்னையும் என்ன செய்வாள்? இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, 'அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்" என்றார்.

சிவனை வணங்கிய பார்வதியும் புன்னைவனத்துக்குப் புறப்பட்டார். தேவியாரைப் பிரிய மனமின்றி, 'உடன் வருவோம்" என வேண்டிய தேவர்களை, 'நீங்கள் புன்னைவனத்தில் விருட்சமாகத் தோன்றி, தேன் மிகுந்த மலராகவும் கனியாகவும் மகிழ்விப்பீராக" எனக் கூறி உடன் அழைத்தார். 'தெய்வப் பெண்களை பசு (ஆ) வடிவெடுத்து பால் கொடுத்து மகிழ்ச்சி தாருங்கள்" என்றார் பார்வதி. 'ஆ" வடிவெடுத்து தெய்வப் பெண்கள் உமாதேவியுடன் வந்ததால், அன்னை 'ஆவுடையாள்" என்றும் அழைக்கப்படுகிறாள்.

சகல வரம் தரும் சங்கர நாரயணர்

புன்னைவனமாகிய சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் 'சங்கரநாராயணராக", உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார்.

ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!, ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!, ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு! ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!, ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை! , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான்!.

இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், 'வேண்டிய வரங்களைக் கேள்" என சிவபெருமான் கூறினார்.

'இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திரு-உருவைக் கொள்ள-வேண்டும்" என அம்பாள் பிரார்த்தித்தாள். ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

மூன்று சந்நிதிகள்

சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார்.

மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!

அபிஷேகம் கிடையாது

குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!

அதனால் சந்திர மெளலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!

சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு!, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு! இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!

நோய் தீர்க்கும் புற்றுமண்

ஐம்பூதங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள 'புற்றுமண்" வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். அதே பகுதியில் உடல் உபாதைகளுக்காக நூற்றுக்-கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்பட்டால், இக்கோயிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் என்கின்றனர்.

பன்னிறுநாள் திருவிழா

ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!

இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!

ஒருகாலில் தவம்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 11-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தபசுக் காட்சியும், சங்கரநாராயணராக ஈசன் காட்சியருளிய வைபவமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை, தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வும், மாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு வீதியில் தபசுக்காக சிவபெருமான் எழுந்தருளும் நிகழ்வும் நடக்கிறது. அப்போது தன் வலக் காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தபசுக் காட்சி அருள்கிறாள். இந்தக் காட்சியை பல்லாயிரம் பக்தர்கள் கண்டு வணங்குகிறார்கள்.

அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை 'சூறை விடுதல்" என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

இரவு 11 மணிக்கு, அம்பாளின் வேண்டுதலின்படி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் சிவபெருமான் அம்பாளுக்குக் காட்சியருள்வார்.

பக்தர்கள் சுற்றும் ஆடிச்சுற்று

ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று" என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

English summary
Sankarankoil has its own interesting story. Once the devotees of Lord Hari (or Vishnu) and Lord Shiva quarreled with each other to determine whose god is powerful. Then Lord Shiva appeared as Sankaranarayanar to mark his devotees to understand that both Hari and Shiva are one and the same. So it is held sacred by Saivites and Vaishnavites as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X