For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு டல்லாஸில் 5 லட்சம் டாலர்கள் நிதி உதவி!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்) உலகத் தமிழர்களின் லட்சியக் கனவான ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பதற்காக டல்லாஸில் மாபெரும் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒரணியில் திரண்டு ஒற்றுமையாகச் செயல்பட்டு 4 லட்சம் டாலர்கள் நிதியைத் திரட்டினர்.

இத்துடன், சேலம் திரிவேணி குழுமத்தின் சார்பில் செயல் இயக்குநர் அளித்த 1 லட்சம் டாலர்கள் நிதியையும் சேர்த்து மொத்தம் 5 லட்சம் டாலர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக, டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இலக்கை நோக்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கை

இலக்கை நோக்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கை

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படுகிறது. டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் இருவரும் கூட்டாக வழங்கிய 1 மில்லியன் டாலர்களுக்குப் பிறகு பல்வேறு தமிழ் அமைப்புகள் நன்கொடையாளர்கள் உதவியுடன் அரை மில்லியன் (ஐந்து லட்சம்) டாலர்கள் நன்கொடை கிடைக்கப் பெற்றார்கள்.

சனிக்கிழமை டல்லாஸ் நிதியளிப்பு மூலம் கூடுதல் அரை மில்லியன் சேர்ந்து 2 மில்லியன் டாலர்கள் தொகையை எட்டியுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு நிதி தற்போது ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காகச் சேர்ந்துள்ளது. இன்னும் 4 மில்லியன் டாலர்கள் கிடைத்ததும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணி தொடங்கிவிடும்.

டல்லாஸில் ஒன்றிணைந்த தமிழர்கள்

டல்லாஸில் ஒன்றிணைந்த தமிழர்கள்

கடந்த ஏப்ரல் மாதம் டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழாவில், டாக்டர் சம்பந்தம், அங்குள்ள தமிழ்ச் சமுதாயம் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆதரவு திரட்டவும் சென்னையிலிருந்து கவிஞர் நா முத்துக்குமார் வந்திருந்து இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கோரிக்கை விடுத்தார்.

டல்லாஸில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகள், தமிழ்ப் பள்ளிகள் ஒன்றாகக் கூடி, கலந்தாலோசித்து நிதிதிரட்டுவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர். புரவலர் பால்பாண்டியனின் வழிகாட்டுதலில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு, அணி அணியாக தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினர்.

ஒருமித்த குரலில் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான அவசியம் குறித்து மாநகரப் பகுதி முழுவதும் தமிழர்களிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டது.

விருந்தும் நன்கொடையும்

விருந்தும் நன்கொடையும்

வார இறுதியில் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து நண்பர்களிடம் எடுத்துக் கூறி நன்கொடை வசூலித்தார்கள். ஒவ்வொரு அமைப்பும் தங்களிடம் தொடர்புடைய நன்கொடையாளர்களிடம் எடுத்துக் கூறினார்கள்.

தமிழ் உணவங்களில் விருந்து கொடுத்து நன்கொடையாகத் நிதி திரட்டினார்கள்.. உள்ளூர் கூடைப்பந்துப் போட்டிக்கான டிக்கெட்டுகள் பரிசாகக் கொண்ட குலுக்கல் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. நன்கொடையாக வந்த ஓவியங்கள் , பழம்பொருட்கள் உள்ளிட்டவைகள் அமைதி முறை ஏலத்தில் விடப்பட்ட தொகையும் உடன் சேர்ந்தது.

நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அரங்கத்தில் தமிழ் உணவங்கள் வழங்கி உணவுகள் விற்பனை மூலம் கிடைத்த பணமும் சேர்ந்தது.

நூறு டாலர்கள் முதல் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை நன்கொடைகள் குவிந்தது.

திரிவேணி குழுமத்தின் ஒரு லட்சம் டாலர்கள் நிதி முன்னதாக டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற நன்கொடையாளர்கள் விருந்து நிகழ்ச்சியில், திரிவேணி குழுமத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன், நிறுவனத்தின் சார்பாக 1 லட்சம் டாலர்கள் நன்கொடையை, ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான டெக்சாஸ் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கி, வாழ்த்திப் பேசினார்.

இந்தோனேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன்னை தமிழர் என்று அடையாளம் கண்டு அழைத்துப் பேசியதை பெருமையுடன் கார்த்திகேயன் நினைவு கூர்ந்தார். தமிழுக்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் திரிவேணி குழுமம் ஆற்றிவரும் அறப்பணிகள் பற்றியும் விவரித்தார்.

கிம்பெர்ளி & க்ளார்க் நிறுவனத்தில் சி.ஐ.ஓ வாக பணிபுரியும் சுஜா சந்திரசேகரன், பேராசிரியர் பேச்சுமுத்து, 'இயற்கை வேளாண்மை' ரேவதி, டாக்டர் ஜானகி ராமன், டாக்டர் சம்மந்தன் சிறப்புரை ஆற்றினார்கள். புரவலர் பால்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அர்ப்பணிப்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அர்ப்பணிப்பு

டிசம்பர் 17, சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்திறன் போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளும் பெற்றோர்களும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக மகிழ்ச்சி தளும்ப கலந்து கொண்டார்கள். டல்லாஸில் கடும் குளிர் வாட்டிய போதிலும் வளாகம் முழுவதும் திருவிழா போல் காட்சியளித்தது.

இந்த நிகழ்ச்சியில் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். தன்னார்வத் தொண்டர்களாக வளாகம் முழுவதும் பம்பரமாக சுழன்று பல்வேறு பணிகளில் பங்கெடுத்தனர்.
நன்றியுரையில் ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் பெரியவர்களானதும் , தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்று விவரித்த போது, நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இரவு உணவுக்குப் பிறகு பிரபு சங்கரின் ஹை ஆக்டோவெஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் சூப்பர் சிங்கர் ஜெசிக்கா பங்கேற்று பாடினார்.

ஊர் கூடி தமிழ் வளர்க்கும் முயற்சி

ஊர் கூடி தமிழ் வளர்க்கும் முயற்சி

இது வரையிலும் நடந்திராத நிகழ்வாக, டல்லாஸில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும், தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் உணவகங்களும் ஒன்றாக இணைந்து இந்த மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்கள்.

அவ்வை தமிழ் மையம், பாலதத்தா தமிழ்ப் பள்ளி, கோப்பல் தமிழ் மையம், டி.எஃப்.டபுள்யூ வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகடமி, இணையத்தள தமிழ்ப் பள்ளி, ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆகிய அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் மற்றும் டாலஸ் தமிழ் மன்றம், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை என அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்து பணியாற்றி புதிய வரலாற்றை அரங்கேற்றியுள்ளனர்.

டல்லாஸில் உள்ள அனைத்து தமிழ் உணவகங்களும் இந்த அரிய பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்களுடைய அனுபவத்தை ஏனைய ஊர்களில் உள்ள அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டு, ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக அமெரிக்கா முழுவதும் பல நிதியளிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உதவ தயாராக உள்ளதாக, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மொழிக்காக தமிழினம் ஒன்று திரண்டு நடத்திய இந்த நிதியளிப்பு விழா, அடுத்து வரும் தமிழ் சந்ததியினருக்கு புதிய நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது என்றால் மிகையல்ல.

-இர தினகர்

English summary
Dallas Tamil organizations came together under one roof, for a mega fund raising event supporting Harvard Tamil Chair. Along with Salem based Thriveni Group's contribution of one lakh US Dollars, they donated five lakh US dollars. It was a historical event of Tamils in US by all means and bringing new hopes of unity among worldwide Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X