For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தன்னைத் தானாக எழுதிக்கொள்ளும் பாடல்!

By Shankar
Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேசுவரன்

தமிழ்த் திரையின் மகத்தான பாடல்களுக்காக எந்தப் பாடலை எடுத்துப் பேசலாம் என்று நான் பாடல்களின் ஒரு பெரிய பட்டியலைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். என் அலைபேசியின் நினைவகத்தில் சேகரமாகியுள்ள ஆயிரக்கணக்கான பாடல்களை அதற்காக உருட்டிப் புரட்டிக்கொண்டிருந்தேன். என் சிந்தனையின் ஆழத்தில் நான் தேர்ந்து நின்ற பாடல்கள் ஒவ்வொன்றும் 'நான் முந்தி நீ முந்தி' என்று என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின. சூழலுக்குத் தகுந்ததாக இருப்பனவும் கேட்டாரைப் பிணிக்கும் தன்மையோடு இசைக்கோப்புச் செய்யப்பட்டனவும் சிறப்பான கவிதைச் சொற்றொடர்களாகவும் அமைந்த ஏராளமான பாடல்கள் என்முன் நின்றன. இந்த வரிசையில் அடுத்ததாகப் பேசுகிற பாடலுக்கு இன்னும் கொஞ்சம் மேலதிகத் தகுதிகள் இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்.

A sensational tribute to Panchu Arunachalam

என் கருத்தில், ஒரு மிகச்சிறந்த பாடலில், அப்பாடலை எழுதியவனோ இசைக்கோப்பாளனோ தன்னை அடையாளப்படுத்தும்படி துருத்தலாக இடம்பெற்று விடவே கூடாது. ரசிகன் அந்த மூல ஊற்றை அறியும் ஆர்வத்தில் 'ஏ... யாரப்பா இந்தப் பாட்டை எழுதியது ? பிரமாதமா எழுதியிருக்காருப்பா... இசையமைத்தது யார் ? அருமையா இருக்கே...' என்ற விசாரணையில் இறங்கிவிடவே கூடாது. 'நல்லா செட்டு போட்டு எடுத்திருக்காங்கப்பா' என்று விமர்சனம் எழுமானால் எப்படி அந்த அரங்க நிர்மாணம் மிகக் கேவலமாகக் கருதப்படத்தக்கதோ அதே அளவுகோல்தான் இது. பாடகனின் குரல் அந்தப் பாடலின் மனோ லயத்தில் கரைந்து ஈரமாகியிருக்கவேண்டும். கேட்பவர்கள் மொழிப்பொருளைத் தவறவிடும்படி அவனது ஒலிப்பே போதுமென்னும்படி இனிப்பாக இருக்கவேண்டும். அந்தப் பாடல் படத்தில் துவங்குகின்ற இடமாகட்டும் முடிந்துவிடும் இடமாகட்டும் எதுவும் நம் கவனத்தைத் தீண்டிவிடவே கூடாது. எல்லாம் ஒரு உறக்கத்தில் தோன்றித் தொலையும் கனவுபோல் நிகழ்ந்து நீங்கிவிடவேண்டும். அங்கே நாம் செய்வதற்கு எதுவுமே இருக்கலாகாது. அது நம்மீது நிகழ்ந்து நம்மை அனுபவத்திற்கு ஆட்படுத்திவிட்டு அகன்றுவிடவேண்டும். இறுதியில் நாம் அந்தப் பாடலின் அனுபவத்தில் விழுந்து செத்த ஈயா

கிவிடவேண்டுமேயன்றி நக்கி நகர்ந்த நாயாகிவிடக் கூடாது. ஒரு கொய்யாவைக் கடிக்கும்போது எப்படி அதன் நறுமணம் மந்திரத்தனமாக வாய்க்குள் நிறைகிறதோ அப்படி எடுத்துச் சொல்லவே முடியாத துய்ப்பாகிவிட வேண்டும்.

என் வீட்டுக்கு எதிர்வீட்டில் உள்ளவர் தன் மனையின் வெற்றுப் பகுதிக்கு சிமெண்டுக் கூரை அமைத்து ஓர் இரும்புப் பணிமனையை நிறுவியிருக்கிறார். அங்கு இளைஞர்கள் இருவர் சாளரச் சட்டங்களைப் பற்ற வைத்துக்கொண்டிருப்பார்கள். முதலில் அந்தக் கூடம் எனக்கு ஓர் ஒலித் தொந்தரவை உருவாக்கியது என்னவோ உண்மைதான். ஆனால், அவர்கள் வேலை செய்யும்போது நல்ல ஒலிப்பில் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்களைத் தம் ஒலித்தகட்டுப் பேழையில் ஒலிக்கவிட்டபடியே பணி செய்துகொண்டிருந்தனர். அந்தப் பாடல்களின் ஒலி அவர்களின் இரும்படிப்பை என் காதுகளுக்கு எட்டாமலே செய்துவிட்டது. பாடல்களுக்காக அவர்கள் பண்பலைகளை நாடமாட்டார்கள். எல்லாம் இருபது முப்பதாண்டுக்கு முந்தைய பழைய பாடல்கள்தாம். நான் மேற்காணும் சிந்தனையில் என் பாடல் தேர்வில் மூழ்கியிருந்தபோது நூறடி தொலைவிலிருந்து ஒரு பாடல் குழந்தையைப் போல் தவழ்ந்து என்னை வந்தடைந்தது. கண்மணியே... காதல் என்பது கற்பனையோ... காவியமோ.. கண்வரைந்த ஓவியமோ...! என் தேடல் முடிவுக்கு வந்தது.

நான் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது என் தமிழாசிரியர் காலஞ்சென்ற கு. கதிர்வேலு ஐயா அவர்களோடு மிகவும் ஒட்டுதலாக இருப்பேன். நான் அவரின் விருப்பத்திற்குரிய தமிழ் மாணவன். நான் படித்த ஒன்பதாம் வகுப்பின் அறைக்குள் அவர் முதல் நாள் நுழைந்ததும் மாணவர்களின் பெயர் அறிமுகத்தை முடித்துக்கொண்டு ஒரு வினா எழுப்பினார்.

'நான் உங்கள் ஆசிரியர். ஆசிரியர் என்றால் என்ன அர்த்தம் ? உங்களில் யாருக்காவது தெரியுமா ?'

நான் கையுயர்த்தினேன். அவர் வியப்புடன் 'எங்கே சொல். பார்க்கலாம்' என்றார்.

'ஐயா. ஆசு+இரியர் ஆசிரியர். ஆசு என்றால் குற்றம் அல்லது ஐயம். இரியர் என்றால் அதைக் களைபவர்' என்றேன். பரவசமான ஐயா பாய்ந்து வந்து என்னை அணைத்துக்கொண்டார். அன்று அவரோடு தொடங்கிய என் மனப் பிணைப்பு அந்தப் பள்ளி வாழ்க்கை முழுவதும் நீடித்தது. அந்த ஆண்டு முடிவில் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் அவர் தமிழ்த் தேனீக்களாக்கினார்.

பிற பாடங்களின் ஆசிரியர்கள் ஐயாவை இலக்கியம் தொடர்பாகப் பேசவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அந்தத் தருணங்களில் அவர் கண்படும்படி என் நடமாட்டம் இருந்தால் என்னைக் கூப்பிட்டழைத்துக் 'கூட இரு' என்பார். எனக்கும் இலக்கியச் சொற்பொழிவுகள் பருகக் கிடைக்கும். ஒருமுறை கண்ணதாசனின் சிறப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவரின் மேன்மையான பாடல்களை எடுத்தாண்டு கொண்டே வந்தார். அதில் ஒரு பாடலாக 'கண்மணியே... காதல் என்பது கற்பனையோ' என்பதையும் சேர்த்துச் சொல்லிச் சென்றார். நான் முந்திரிக் கொட்டையாக இடைமறித்து 'ஐயா. அந்தப் பாடலை இயற்றியவர் கண்ணதாசன் அல்லர். பஞ்சு அருணாசலம்' என்றேன். 'அப்படியா?' என்று வழக்கம்போல் ஆச்சரியப்பட்டார் அவர். என் ஐயாவை முதலும் கடைசியுமாக நான் இடைமறித்துப் பேசிய இடம் அது.

பஞ்சு அருணாசலம் கண்ணதாசனுக்கு உறவுக்காரர். கண்ணதாசனின் படத் தொழில்களில் உதவியாளராக உடனிருந்து தமிழ் நுட்பங்களைக் கற்றவர். அவர்மீது கண்ணதாசனின் குளிர்ந்த நிழல் பட்டுக்கொண்டே இருந்த்தால் அவர்பாடல்களும் அதே பண்புகளை அடைந்துவிடும் திசையில் நடைபோடுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

பஞ்சு அருணாசலம் தாம் தயாரிக்கும் படங்களுக்கு அவரே பாடல்களை எழுதிவிடுவது வழக்கம். 1979-இல் அவர் தயாரித்த படம் ஆறிலிருந்து அறுபதுவரை. ரஜினிகாந்தைக் குணச்சித்திர நடிகராக வனைந்து செய்யப்பட்ட கதை அது. பிற்காலத்தில் முரட்டுக்காளை போன்ற திரைப்படங்களில் - வர்த்தக நிறைவம்சங்கள் உடைய படங்களில் - ரஜினிகாந்த் நடித்து வெற்றிகண்ட பின்பும் அவரை 'மனைவியை மாற்றானிடம் தோற்கும்' ஒரு கதாபாத்திரமாக்கி 'எங்கேயோ கேட்ட குரல்' என்ற படத்தை எடுத்தார் பஞ்சு அருணாசலம். அந்தப் படத்தின் தோல்வியில்தான் ரஜினிகாந்த் தம்மை எப்படி வளர்த்துக்கொண்டு இயங்கவேண்டும் என்பதை முழுமையாக வரைந்துகொள்கிறார். ஒருவேளை எங்கேயோ கேட்ட குரல் வெற்றியடைந்திருந்தால் ரஜினிகாந்த் தம் நாயக வடிவெடுப்பை வேறுமாதிரி வரித்துக் கொண்டிருக்கக் கூடும். பஞ்சு அருணாசலமே இசைஞானியைத் திரையுலகுக்குக் கொணர்ந்தவர் என்பதை நாமறிவோம்.

A sensational tribute to Panchu Arunachalam

பஞ்சு அருணாசலம் 'கலங்கரை விளக்கம்' என்ற திரைப்படத்தில் தன் முதல்பாடலை எழுதினார். அந்தப் பாடலே அவருக்கு அருமையான அறிமுகத்தைத் தந்துவிட்டிருந்தது.

பொன்னெழில் பூத்தது புதுவானில் !
வெண்பனி தூவும் நிலவேநில் !'

-என்னும் பாட்டுதான் அது. அந்தப் பாடலிலேயே பெருங்கவிக்குரிய புலமையோடு அவர் தமிழ்ச் சந்தத்தில் நிகழ்த்திய சாகசம் உண்டு. இந்த வரிகள் ஞாபகமிருக்கின்றனவா ?

தென்னை வனத்தினில்
உன்னை முகந்தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன் !

உன்னிரு கண்பட்டுப்
புண்பட்ட நெஞ்சத்தில்
உன்பட்டுக் கைபடப் பாடுகிறேன் !

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன்மாடம் எங்கே ?

கிண்ணம் நிரம்பிடச்
செங்கனிச் சாறொன்று
முன்வந்த செவ்வந்தி மாலை எங்கே ?

ஒரு பாடலில் அதன் வரிகள் எவ்வளவு ஆழ்ந்து கரைந்து உருவற்றுப் போய்விடவேண்டும் என்பதற்கு உதாரணமாகக்கூடிய எத்தனையோ பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.

அவர் எழுதி முடித்த பாடலில் பாடலாசிரியர் இருக்கமாட்டார். பாடல் மட்டுமே இருக்கும். சிக்கலான கருத்துகளை மிரட்டி உருட்டி பாடலில் அமைக்க அவர் முயன்றதில்லை. எல்லாம் இலகுவும் சரளமுமாகவே இருக்கும். அவர் மூலம் - ஒரு பாடலே தன்வினைப்பட்டு தன்னை அமைத்துக்கொள்ளும் அசாதாரணத்துவத்தை மட்டுமே என்னால் காணமுடிகிறது. சினிமா வர்த்தகர் என்பதால் அவரை வியாபார எல்லையைத் தாண்டி அடையாளம் கண்டுகொள்ளத் திரையுலகம் முன்வருவதில்லை. இலக்கிய உலகத்திற்கு அவருடைய திரைப்பாடல் வரிகளோடு எந்தப் பரிச்சயமும் இல்லை. தளர்ந்து முதிந்த நவீன இலக்கியப் பெரியவரின் தனிமையான வீட்டு முற்றத்தில் இறைந்துகிடக்கும் கொன்றைப்பூக்களின் மஞ்சளைப் பற்றித்தான் இலக்கிய உலகம் விசாரம் கொள்ளும். இந்த இல்லை இருக்கிறது என்கிற எல்லாவற்றையும் தாண்டித் தம்மைக் காட்டிக்கொள்ளாமலேயே செவியுள்ளவனின் செங்குருதிக்குள் ரத்தத்துகள்களைப் போல நடமாடிக்கொண்டே இருக்கின்றன பஞ்சு அருணாசலத்தின் பாடல்கள். சமூகத்தின் மௌனமான இயக்கத்தின் ஊடாக ஒரு தென்றலைப்போல நுழைந்து அதன் தண்மையைப் போலக் குளிர்ச்சியை ஊட்டிவிட்டு நகர்ந்துகொண்டிருக்கின்றன அப்பாடல்கள்.

நாம் அமர்ந்து சாய்ந்து சாவகாசமாகக் கேட்கும் பாடல்களின் மதுரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். தொலைவிலிருந்து ஒலிக்கும் ஒரு பாடல் நம்மை அப்படியே எல்லாவற்றையும் துறக்கவைத்து நம் முனைப்புகளை எல்லாம் மழுங்கடித்து அதன் போக்கில் நம்மைச் சுழித்து இழுத்துக்கொண்டுபோய் மிதக்கச் செய்து மெய் மறக்க வைக்கும் என்றால் அது இந்தப் பாடல்தான். 'இரவு என்றால் / எங்கோ தூரத்திலிருந்து / இசை வழிந்துகொண்டிருக்க வேண்டும்' என்று நான் எழுதிய கவிதைக்குக் கூட இந்தப்பாடலே தூண்டுதலாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் இப்போது என்னில் எழுகிறது.

A sensational tribute to Panchu Arunachalam

ஆறிலிருந்து அறுபதுவரை திரைப்படத்தில் நாயகனின் வாழ்வில் வரும் ஒரே இனிமையான தருணம் அவன் வாழ்வில் அதிசயமாகத் தோன்றிவிடுகிற இந்தக் காதல்தான். அவனைத் தன் துன்பங்களிலிருந்து மெல்ல விடுவிக்கும் தோணியாக எழும் அந்தக் காதல் உணர்வு பிறகு அவனைப் புறக்கணித்துவிட்டு அகன்றுவிடும். இருத்தலுக்கான நிரந்தரப் போராட்டமே மீதமான வாழ்வாக எஞ்சிவிடும் அவனுக்குக் கிடைக்கின்ற ஒரே மகிழ்வு அவனுக்குள் எழுந்த காதல் மட்டுமே. அதைப் பாடலாக்கிப் பார்வையாளனுக்குத் தெரிவிக்கிற கட்டம்தான் பாடல்அமைந்த சூழல்.

கண்மணியே காதல் என்பது கற்பனையோ ?
காவியமோ ?
கண்வரைந்த ஓவியமோ ?
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா !
பல்சுவையும் சொல்லுதம்மா !

காதல் என்னும் இந்த மகத்தான உணர்வை எனக்குள் எழுப்பிய என் கண்ணின் மணிகளே ! உங்களால் நான் இங்கு உற்றிருக்கும் காதல் உணர்வு கற்பனையான ஒன்றா ? அல்லது அந்தக் கற்பனையைத் துணையாகக் கொண்டு காலத்தை வென்று எல்லாக் கணங்களிலும் நீடித்து நிலைக்கும் காவியமோ ? அந்தக் கற்பனையை மூலதனமாகக் கொண்டு எண்ணத்தின் எண்ணற்ற வண்ணங்களைக் கூட்டி, காணும் யாவரும் இன்புறுவதற்காகச் செய்யப்படும் ஓவியமோ ? ஏனென்றால், கற்பனைகள் கொண்டு செய்யப்படும் கலைகள் மட்டுமே எத்தனை எத்தனையோ இன்பங்களை நெஞ்சத்திற்குள் பொங்கச் செய்யும் இயல்பைக் கொண்டிருக்கும். அந்த இன்பங்கள் என் நெஞ்சத்தில் பொங்குகிறதே. காவியங்களுக்கு மட்டுமே ஒருசுவை இருசுவை அல்ல... எண்ணிறந்த பல்சுவைகளைத் தரும் ஆற்றல் உண்டு. நாணம் அச்சம் விருப்பம் வேட்கை சின்னச் சின்ன கோபம் எனப் பல்சுவைகளையும் எனக்குள் இந்தக் காதல் தந்துவிட்டதே !

மேளம் முழங்கிடத்
தோரணம் ஆடிடக்
காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில்
தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன்குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க

ஆயிரம் காலமும்
நானுந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

'கல்யாண மேளம் முழங்கவும் அலங்கார மங்களத் தோரணம் ஆடவும் காலம் வந்துவிட்டதம்மா. அதற்கான நல்ல நேரமும் நமக்கு வந்துவிட்டதம்மா.' என நாயகன் கூற, நாயகிக்கு அந்தச் செய்தியைக் கூறும் காதலனின் பார்வையில் உள்ள காதல் சைகைகள் ஆசைகளைத் தோற்றுவிக்கின்றன. அதனால் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் பாடலாகிப் பரவசமடைந்து வெளிப்படுகின்றன. பூப்போன்ற இதழ்களில் தேன் குலுங்கிச் சிந்துவதைப் போன்ற அவளின் புன்னகைக்கு நாயகன் மயங்குகிறான். 'ஆயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன... நான் உன் மார்பினில் சாய்ந்திருப்பேன். உனக்காக வாழ்ந்திருப்பேன்' என்று உறுதிமொழிகிறாள். அந்த உறுதியை அவள் உடைத்து அகன்றுவிடும்போது செய்வதறியாத நாயகனின் வறுமையும் அதன் வலைப்பின்னல்களுமே மீதமுள்ள கதையாகிறது.

பாலும் கசந்தது
பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்

நாளொரு வேகமும்
மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களில் நீயணைக்க
வண்ணத் தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும்
நானுந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்

நாயகிக்கு அவளது காதலுறவால் பால் கசக்கிறது. பஞ்சணை வலிக்கிறது. அதற்கென்ன காரணம் என்பதை நாயகனே அறிவான். அவனால்தான் அவற்றைத் தீர்க்கவும் முடியும். ஆனால் நாயகனோ அதற்கு முன்வராமல் 'நாள்தோறும் நம்மைக் கட்டி இழுக்கிற அந்த இளமை வேகமும் அதனைத் தூண்டுகிற மோகமும் அந்த மோகம் கழியாமல் தேங்கி அடைகிற தாபமும் நம் பருவம் நமக்குத் தந்த சுகமேயன்றி நோவு இல்லை. அது நம் போன்ற இளவயதினர் மட்டுமே அடைந்து அனுபவிக்கின்ற சுகம்.' என்று கூறுகிறான். 'இனி நாம் மணமாகி காலெடுத்து வைக்கும் உறவில் நீ தோள்களில் என்னை அணைத்துக்கொள்வாய். அப்பொழுதுதான் வண்ணத் தாமரை போன்ற என் முகத்தில் நீ சிரிப்பைக் காணமுடியும்.' என்கிறாள். ஆறுதலாக நாயகன் கூறும் உறுதி அவளுக்குள் நிம்மதியைத் தருகிறது. 'ஆயிராமாயிரம் காலமும் நான் உன் மார்பிலினில் தோரணமாய் ஆடுவேன்' என்னும் உறுதிதான் அது. ஆயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழவிருக்கும் எனக்கு இந்தச் சிறிய இடைவெளியைப் பொறுத்து உன் பெண்மையை எனக்காகக் காத்து வைத்திரு' என்ற வேண்டுகோளும் அதில் உண்டு.

இந்தப் பாடலுக்கு இசைக்கோத்த இசைஞானியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. வார்த்தைகள் இல்லாததால் அவரைப் பற்றிய வரிகளும் இல்லை எனக் கொள்ள வேண்டும். எஸ். பி. பாலசுப்ரமணியத்திற்கும் ஜானகிக்கும் என்றைக்கும் பேர் சொல்லும் பாடலாகிப் போனது இது.

எண்பதுகளில் இளமைப் பருவத்திலிருந்தவர்களின் எலும்பு மஜ்ஜையை ஆராய்ந்து பார்த்தால் இந்தப் பாடல் எழுப்பிய உணர்வுகளின் கடைசித் தொற்று எங்காவது தென்படலாம்.

English summary
Poet Magudeswaran's sensational tribute to Late Panju Arunachalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X