For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமருக்காக 14 வருடங்கள் காத்திருந்த அரவாணிகள் (காகிதப்பூக்கள் - 14)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 14வது அத்தியாயம் இது.

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

அரவாணின் உறுப்புகள்:

அரவாணின் உடலுருப்புகள் ஒவ்வொன்றும் ஒரு ஊரிலிருந்து கொண்டு வரப்படுகிறது. அரவாணின் சிரசு மட்டும்தான் கூவாகத்தில் உள்ளது. அவன் மார்பு கிரிகோடு எனும் கிராமத்திலும், கை, கால், குதிரைவாகனம் நத்தைவெளி எனும் கிராமத்திலும், செவிலியான் குடை எனும் கிராமத்திலிருந்து பித்தளைக்குடை ஒன்று கொண்டு வரப் படுகிறது. கூவாகம் காலணியில் இருந்து வடமும் தேருக்கு தீட்டும் வண்ணமும் கொண்டு வரப்படுகிறது. நாவத்தழையாலும், வைக்கோல் பிரியாலும் அரவாணின் உடம்பு உருவம் அமைத்து வைக்கோலும், தழையும் தெரியாமல் பூவினால் வடிவமைக்கிறார்கள். தேர் வடிவமைப்பு முடிந்தவுடன் விடியற்காலையில் ஆடு பலியிடப்படுகிறது.

Kakithapookkal, new story series

அரவாணிகளும் சரித்திர உதாரணங்களும் :

இயற்கையைப் புரிந்து கொள்வதே அறிவு என்கிறோம். ஆனால், மனித இயற்கையே புரியாமல்தான் இன்னமும் மனிதன் இருக்கிறான். கண்ணாடியின் ஒரு பக்கத்தினை மட்டுமே நாம் காண்கிறோம். மற்றொரு பக்கம் நமக்குத் தெரியவும் இல்லை, அரவாணியர்கள் பற்றிய கருத்துக்களும் அப்படியே !

பெண்ணும் ஆணும் இயற்க்கையின் படைப்பு என்பதில் எந்தளவு உண்மையுள்ளதோ அதே போல் அலிகள் எனப்படும் அரவாணிகளும் இயற்கையின் படைப்புதான். இந்த சமூகம் என்றுமே அந்த அரவாணிகளை அங்கீகா¢க்கவில்லை. எல்லாமே மீடியா காண்பித்த ஒரு அருவெருப்பான பொருளைப் போலத்தான் இழிவாய்ப் பார்க்கிறது.

ஆணின் உடல் உணர்வுகள் பெண்ணின் உடல் உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்! ஆண் உடல் உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள். ஆனோ அல்லது பெண்ணோ உடனே அரவாணியாக
மாறிவிடுவதில்லை, குழந்தைப் பருவத்திலேயே பெண்சார்ந்த அடையாளங்களையே விரும்புகிறார்கள். அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் ஒரு காரணமாய் அமைந்து விடுகிறது.

ஆண் பிள்ளைகளோடு சேருவது பிடிக்காது, பெண்போல ஆடுவதும் , மைதீட்டி மகிழ்வதும், அலங்கரித்துக் கொள்வதும், பார்ப்பவர்களுக்கு அறுவருப்பாய்த்தான் தோன்றும். இது எல்லாம் எதற்காக? தான் பெண்தான் என்பதை பிறருக்கு உணர்த்துவது போன்ற நடவடிக்கைகள்தான் இம்மாதிரியானவர்களை வெளியே கொண்டுவரும். அவர்கள் தன் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்களுக்கு ஆளாகிறார்கள். அது பிறருக்கு கேலியாத் தோன்றிவிடும் என்பதினால்தான் தனிமையை அவர்கள் விரும்புகிறார்கள்.

பெண்கள் பூப்படையும் போதுதான் அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கும் பருவத்தில்தான் தான் யார்? என்று உணர முடியாத அளவிற்கு பெரிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் ஆண் அடையாளம் தன்னை சூழ்வதை அவர்கள் உணருகிறார்கள். தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திக்கொள்ள அவர்கள் முன் வருவதில்லை. ஆண் உடலிற்குள் பெண்ணாகச் சிறைபட்டு இருக்கிறோம் என்பதையுணர்ந்த பிறகு, தன் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டியதாகி விடுகிறது. ஒரு வகையில் தன்னிலைப் பற்றி வீட்டில் சொல்ல பயந்து அல்லது தான் சார்ந்த சமூகத்தை சந்திக்க பயந்து கூட அவர்கள் வெளியேறுகிறார்கள். ஒரு சிலரோ நம் மகன் அரவாணியென்று உணர்ந்து விட்டால் மறு பேச்சின்றி அவர்களை துரத்திவிடுகின்றனர்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழலில் ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழுவட்டத்தோடு சேருகிறார்கள். அங்கே அவர்களுக்கு குடும்பத்து அங்கத்தினர் களிடையே, இந்த சமூகத்தினரிடையே கிடைக்காத அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறது. ஆனால் ஜமாத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் நடக்கவேண்டும். இல்லையெனில் கடும் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்து கொள்ளவே பிச்சையெடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல்
இவைகளை மேற்கொள்கிறார்கள்.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்துவிட்ட காளான்கள் மாதிரி அல்ல அரவாணிகள் என்பதற்கு சரித்திர உதாரணம்...

"ஆணாகி பெண்ணாகி அலியாகி
உன்னடி சேர வேணும்.!"

என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

அரவாணிகள் எப்படிப் பிறக்கிறார்கள் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"ஆண்மிகில் ஆண் ஆகும்
பெண்மிகில் பெண் ஆகும்...!"

என்று அதாவது பூண் இரண்டு ஒத்துப் பொருந்தின் அலியாகும்,

"ஆண் பெண் கலப்பின் போது, ஆண் சுரக்கும் சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், பெண் சுரக்கும் சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும், இவ் விரண்டும் சமமாயச் சுரக்குமேயானால் அது அலியாய் பிறக்கும் என்று திருமூலர்
கூறியுள்ளார்."

"வலியார் பிறர் மனைமேல் சென்றாரே,,,
இம்மை அலியாகி ஆடியுண்பார்...!"

அடுத்தவர் மனையாளின் மீது ஆசைப்படுவானேயானால் அடுத்த ஜென்மத்தில் அவன் அலியாகவே பிறப்பெடுப்பான் என்கிறது நாலடியார் கருத்து

எனவே நாலடியார் காலத்திலும் அலிகள் ஆடிப்பாடி தான் பிழைப்பைத் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர்..

மாவீரனான மாலீக்பூர் ஓர் அரவாணியே ஆவார். அதுமட்டுமல்லாது மன்னர்கள் காலத்தில் தங்கள் அந்தப்புரக் காவலர்களாக அரவாணிகளையே நியமித்தனர். ராஜ்ய காரியங்களிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். மேலும், அர்ஜீனன் அரவாணியின்
உருவத்தில் இருந்தபோது தான் தன்னந்தனியே கெளரவப் படைகளை எதிர்த்துப் போராடித் தோற்கடித்தான்.

கர்ணன் படைவீரர்களிடம், "ஒரு பேடியிடமாத் தோற்றீர்கள்?" என்று கேட்டபோது,

"அவன் நூறு வீரர்களுக்கு சமமானவன்!" என்று கூறினார்களாம்.

பீஷ்மரைக் கொல்லக் காரணமான சகண்டியும் ஓர் அரவாணியே !

ராமாயணத்தில் ஓர் உதாரணம்

Kakithapookkal, new story series

ராமன் காட்டுக்கு வனவாசம் செல்லப் புறப்படும் போது அவனின் பிரிவுத்துயர் தாளாமல் அந்நாட்டு மக்களும் பின்தொடர்ந்தார்கள். ஆனால், ராமரோ,,,,! நான் என் தந்தையாரின் கட்டளையை நிறைவேற்ற செல்கிறேன். என் நாட்டு
மக்களே என்னிடம் நீங்கள் காட்டும் அன்பு உண்மையாய் இருப்பின் ஆண்களே பெண்களே உடனடியாக நாடு திரும்பி என் தந்தைக்கு ஆதரவாய் இருங்கள் என்றாராம்.

அதேபோல் ஆண்களும் பெண்களும் கலைந்துவிட, அரவாணிகள் மட்டுமே நின்றனராம். நமக்குத் தலைவனான ராமர் ஆண்களையும், பெண்களையும் தான் போகச் சொன்னாரே தவிர்த்து நம்மையல்ல என்று 14 வருடங்கள் வரையிலும் கோசலநாட்டு எல்லையிலேயே ராமருக்கென காத்திருந்தார்களாம்.

அரவாணிகள் திடம்மிக்கவர்கள், அன்பு செலுத்துவதில் அன்னையைப் போன்றவர்கள். கருணையிலும் கண்ணியமானவர்கள். அவர்களைத் திறம்பட புரிந்து கொள்வோம். அவர்கள் புன்னகை ஓவியங்கள் கொண்டு வெண்மைப் பக்கத்தில் அழகான பொன் வண்ணங்களைப் பூசுவோம்! முட்களை விதைக்க வேண்டாம்....!

கட்டுரையை எழுதி முடித்துவிட்டு தொடரும்! என்று எழுதிய பின் நிமிர்நதாள் மீனா,,, மீண்டும் ஒருமுறை எழுதியவற்றைப் படித்துப் பார்த்தாள் திருப்தியாய் இருந்தது. என்வலப் கவரி பத்திரிகை அலுவலக முகவரியை எழுதி ஒட்டிவிட்டு நாளை போஸ்ட் பண்ணுவதற்கு வசதியாய் உறையிலிட்டாள். உடலை ஒருமுறை நெட்டி முறித்துவிட்டு கசங்கிய உடையை நீவிவிட்டு,ஜன்னலருகில் சென்றாள்.

(தொடரும்)

English summary
Wtier Latha Saravanan's new series Kakithappokkal. The story talks about the life a boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X