For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 12: தலைவர்களின் தரங்கெட்ட பேச்சு

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

'அவனுங்க 34 வருஷம் ஆட்சில இருந்தாங்க. ஒரு மண்ணும் பண்ணல. இப்ப நாம ஏதாவது செய்யலாம்னு முயற்சி செஞ்சா, செய்றவங்க ............ல குச்சிய எப்படி சொருகலாம்னு பாக்குறானுங்க...'

ஒரு முதலமைச்சர், அதுவும் ஒரு பெண், பேசக்கூடிய பேச்சா இது? ச்சீ.. தூ என்று காரி துப்பலாம் போலிருக்கிறது.

எத்தனை பேருக்குதான் துப்புவது? அந்த அளவுக்கு வாயில் எச்சில் சுரப்பதில்லையே.

'டெல்லி மக்களே ராமருக்கு பிறந்தவர்கள் உங்களை ஆள வேண்டுமா அல்லது கள்ளத்தனமாக பிறந்தவர்கள் ஆள வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்' என்றார் மத்திய அமைச்சர். அவரும் ஒரு பெண். சாதாரண பெண் அல்ல. சாத்வி என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் சாமியாரிணி.

'அய்யோ பாவம், அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், கிராமத்தில் பிறந்தவர், தெரியாமல் பேசி விட்டார், மன்னிப்பும் கேட்டு விட்டார், இதற்கு மேலும் அவரை போட்டு தாக்குவது நியாயமா, தர்மமா?' என்று பிரதமர் மோடி உருக்கமாக கேட்கிறார்.

பிஜேபி எம்.பி தருண் விஜய் ஒரு அஸ்திரத்தை ஏவிப் பார்க்கிறார். ‘சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒரு தலித் என்பதால் அவரை கார்னர் செய்து ஓரங்கட்டி பதவியை பறிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன' என்கிறார்.

தருண் விஜய் சமீபகாலமாக இளைய தளபதி விஜய்யை விடவும் தமிழபிமானிகளிடம் செல்வாக்குப் பெற்றவர். ஆமாம். வடநாட்டவர் தமிழ் கற்க வேண்டும்; திருவள்ளுவர் பர்த்டே தேசிய தினமாக கொண்டாடப்பட வேண்டும் என பேசி சென்னையில் ஆளுயர மாலை அணிவித்து பாராட்டப்பட்ட அதே தருண் விஜய்தான்.

‘அந்த பெண்மணி தலித்தே இல்லை, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர், அவ்வளவுதான்' என்று மாயாவதி சர்டிஃபை செய்த பிறகு கப்சிப் ஆனார் தருண் விஜய். சாத்வி பேச்சால் நாடாளுமன்றம் ஐந்து நாட்களாக முடங்கிக் கிடக்கிறது.

'மன்னிப்பெல்லாம் போதாது; இந்த மாதிரி பேசினால் ஒரு சாதாரண குடிமகனுக்கு அல்லது மகளுக்கு சட்டப்படி என்ன தண்டனை கிடைக்குமோ அதை அவருக்கு வழங்க வேண்டும்; அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

இந்த சத்தத்தில் நமது மரியாதைக்குரிய மம்தா பானர்ஜி ஆபாசமாக பேசியது பெரிதாக ஊடகங்களில் உரிய இடம் பிடிக்கவில்லை.

mamata

வங்காளிகள் மென்மையான இதயம் படைத்தவர்கள். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள். யார் மனதையும் புண்படுத்த தெரியதவர்கள் என்று ஒரு நம்பிக்கை உண்டு. நானும் அதை வழிமொழிந்திருக்கிறேன். அதெல்லாம் பொய்யல்ல. ஆனால், வங்காளிகளுக்கு இன்னொரு முகம் உண்டு. பாஷை உண்டு என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

மிகப்பெரிய இலக்கிய மேதைகளை தந்த அந்த மண்ணில்தான் மிகவும் கேவலமான விமர்சன வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பிளாட்பார பாஷை என்று படித்தவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட அந்த மொழிப் பயன்பாடு, இன்று மேடைப்பேச்சு அளவுக்கு முன்னேறி அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை விமர்சனம் செய்யும் வேளையில் முதல்வர் மம்தா எந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள இந்த அத்தியாயத்தின் முதல் பாராவை இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள்.

நமது மாநிலம் எவ்வளவோ மேல் என்று அவசரமாக தீர்ப்பு எழுதப் போவதில்லை. அதையும் அலசிப் பார்க்கலாம்.

மோடியை தாறுமாறாக விமர்சனம் செய்தால் வைகோ பத்திரமாக வீடு திரும்ப முடியாது. இது பிஜேபியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா விடுத்த மிரட்டல்.

கீழ்த்தரமானது, அற்பத்தனமானது, வன்முறையை தூண்டும் வகையிலானது, எல்லாவற்றையும்விட முக்கியம் நிறைவேற்ற முடியாதது இந்த மிரட்டல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. இந்த மாதிரி பேசக் கூடிய ஆட்களை வைத்துக் கொண்டு படித்தவர்களின் ஓட்டுகளை பெற பிஜேபி ஆசைப்படுவது அநியாயம்.

ஆனால் வைகோ நல்லவரா கெட்டவரா?

தலைவர்களை நீ போ வா என்று பேசுவது தரமான அரசியலில் சேர்த்தி இல்லை. 'ஆண்டவனையே ஒருமையில் அழைக்கும் நாடு இது, கலாசாரம் இது' என்பதெல்லாம் சப்பைக்கட்டு. ஆண்டவன் இங்கே இல்லை. நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடபோவதும் இல்லை. ஆகவே இஷடத்துக்கு போடா வாடா என்றுகூட பேசலாம். பேசிவிட்டு அப்படி அழைக்க எனக்கு உரிமை இல்லையா, என்ன என்று காதில் பூ சுற்றலாம்.

அதே பாஷையில் அந்த கட்சிக்காரனும் பேசலாம்தானே. பிரதமர் என்னடா உன் வீட்டு வேலைக்காரனா, மாமனா, அல்லது உன் மச்சானா? எந்த உரிமையில் இந்த நாட்டின் பிரதமரை எங்கள் கட்சியின் தலைவரை நீ வா போ என்று ஒருமையில் பேசுவாய்? என்று அவன் திருப்பிக் கேட்டால் தப்பாகுமா?

அந்தந்த கட்சியின் தொண்டனுக்கு அதன் தலைவன் அப்பா மாதிரி. அடுத்தவன் போடா வாடா ரேஞ்சுக்கு பேசினால் கொந்தளிக்காமல் இருக்க முடியாது. ராஜாவும் கொந்தளித்தார். கண்டனத்தோடு விட்டிருக்கலாம். ரோட்டில் நடமாட முடியாது என்றெல்லாம் மிரட்டல் விடுப்பது இன்றைய தேதியில் ரவுடிகள்கூட தயங்கும் விஷயம்.

ஆனானப்பட்ட பெரியாரை அவர் பாணியிலேயே விளாசினோம்; எவனும் கண்டுகொள்ளவில்லை. வைகோ என்ன பெரியாரைவிட பெரியவரா என்று ராஜா நினைத்திருக்கலாம். நிச்சயமாக ஈரோட்டு சிங்கத்துடன் கலிங்கபட்டி புலியை ஒப்பிட முடியாது. அது வேறு விஷயம். அதேபோல பெரியார் வேறு; அவர் வாழ்ந்த காலமும் வேறு. அந்த பெரியவருக்கு ஆயுள் கெட்டி. அவர் வாழ்ந்த வயதுக்கு மற்ற எல்லாரும் சிறியார். நீ வா போ மட்டுமல்ல, போடா வாடா சொன்னாலும் எவரும் அதை மரியாதைக் குறைவாக நினைத்திருக்க மாட்டார்கள்.

வைகோவை எப்படி பெரியார் லிஸ்டில் சேர்க்க முடியும்? இந்திய வரலாறைக் காட்டிலும் அது தவிர்த்த உலக சரித்திரத்தை கரைத்துக் குடித்த வைகோ, ரோமாபுரி, கிரேக்கபுரி அரசர்களையும் சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளையும் அவர்களின் வரலாற்றுப் பிழைகளையும் மணிக்கணக்காக மக்களுக்கு பாடம் நடத்தும் வல்லமை பெற்றவர்.

மறைந்த மாமன்னர்களை அவர் தன் முன்னால் குற்றவாளிக் கூண்டில் கைகட்டி தலை குனிந்து நிற்பது போல கற்பனை செய்து ஏக வசன கேள்விகளால் துளைத்து எடுக்கும்போது மேடைக்கு எதிரில் நிற்கும் கூட்டம் தன்னை மறந்து கைதட்டி ஆரவாரம் செய்யும். அடடா, இவர் மட்டும் அன்று அலெக்சாண்டர் அல்லது நெப்போலியன் அரசவையில் இருந்திருந்தால் உலக வரலாறு தலைகீழாக மாறியிருக்குமே என்று உருக வைக்கும் அவரது உணர்ச்சிகரமான பேருரை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன சொன்னார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவில் காப்பிரைட் தமிழால் மணிக்கணக்கில் கூட்டத்தைக் கட்டிப்போடும் சொல்லாற்றல் மிக்க கருணாநிதி, அன்பழகன் போன்றவர்களையே மயக்கிய வைகோ வார்த்தை ஜாலம் என்றால் சும்மாவா?

ஆனால் என்ன செய்ய, காலம் ரொம்பவே மாறிவிட்டது. கருணாநிதி, அன்பழகன் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கே நாற்காலிகளை நிரப்ப ஆள் திரட்ட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டி மயிலை மாங்கொல்லையில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைவரின் உரை கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை பார்த்து அந்தப் பகுதியின் வர்த்தக பிரமுகர் அதிர்ச்சியுடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் காதுகளில் ரீங்காரம் இடுகிறது.

‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற காலம் முடிஞ்சு போச்சு போலிருக்கு. என்ன செஞ்ச, என்ன செய்வ? இனிமே இதைத்தான் கேட்கப் போறாங்க ஜனங்க..' என்றார், அப்போது கூட்டணியில் இருந்த கட்சியின் பிரமுகரான அண்ணாச்சி.

தெளிவான மதிப்பீடு. அடுக்குமொழி, அலங்கார ஜோடனை, உணர்ச்சிமயமான உதாரணம், வரலாற்று அத்தியாயங்கள், இலக்கிய வர்ணனைகள் எல்லாம் மேடைகளை விட்டு விடைபெற்று சென்றுவிட்டன. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும் தலைவர்களை மக்கள் அடையாளம் கண்டு குறிப்பெடுக்க விரைகின்றனர்.

தனி மனித தாக்குதல், தரம் குறைந்த விமர்சனம், ஆதாரமற்ற குற்றச்சாட்டு போன்றவை மக்களை ஈர்க்கும் கருவிகளாக இருந்த காலம் மலையேறி விட்டது. முக்கிய தலைவரை விடவும் அதிக கைதட்டல் பெறும் பேச்சாளர்களாக இருந்த வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்கள் கடைசிக் கட்டத்தில் இந்த மாற்றத்தை புரிந்துகொள்ளத் தவறவில்லை.

உணர்ச்சிகரமான பேச்சாளர்களான நாஞ்சில் சம்பத், மல்லை சத்யா போன்றவர்கள்கூட எதார்த்த நிலைமையை உணர்ந்து நிதானமாக பேசும் சூழலில் அவர்களால் நெஞ்சில் சுமக்கப்பட்ட வைகோ மட்டும் இன்னமும் அவரே நெய்து கொண்ட கூண்டைவிட்டு வெளியே வரவில்லை. பேச்சாளர் பட்டியலிலேயே இல்லாத மு.க.ஸ்டாலின் பேச்சில்கூட மாற்றம் தெரிகிறது. மொழி வளத்தைக் காட்டிலும் விஷய ஞானத்தில் கவனம் செலுத்துகிறார். அளவோடு புள்ளி விவரங்களைக் மேற்கோள் காட்டுகிறார். காடுவெட்டி குருவும் இப்போது நிதானமாக பேசுவதாகச் சொல்கிறார்கள்.

ராஜா அசட்டுத் தனமாக மிரட்டினாலும், பிரதமரை ஒருமையில் பேசலாமா என்ற அவரது கேள்வி அப்படியே நிற்கிறது. வைகோ அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக தனக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். தன் பேச்சை விமர்சனம் செய்யும் தகுதி பெரிய கட்சிகளுக்கு உண்டே தவிர, சிறிய கட்சிகள் விளம்பரத்துக்காக விமர்சிப்பதை பொருட்படுத்த தேவையில்லை என்கிறார். காமெடிக்காக சொன்னாரா, சீரியசாகவே அப்படி நினைக்கிறாரா என்று சத்தியமாக தெரியவில்லை.

இதில் சராசரி மக்களுக்கு தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது.

மோடியை வைகோ ஆவேசமாகப் பேசினார். அதற்காக வைகோவை ராஜா மோசமாக மிரட்டினார். யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், சுப்பிரமணியம் சாமி எவரைப் பற்றி வேண்டுமானாலும் காரசாரமாக அல்லது படுகேலியாக கமென்ட் போடுகிறார். ஒவ்வொரு கட்சியிலும் இதுபோல அட்லீஸ்ட் ஒரு பிரமுகரை பார்க்கலாம். இவர்கள் தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் பேசிவிடுகிறார்களா?

தெரியாமல் பேசி விட்டதாக நினைத்து, இவர்களை அந்தந்த கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். பாவமாக இருக்கிறது இவர்களை நினைத்து.

விளைவுகளைத் தெரிந்து கொண்டுதான் இவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். தலைமை சொல்லிதான் பேசினார்கள் என்று சொல்ல முடியாது. தலைமைக்கு தகவல் சொல்லி விட்டுதான் பேசினார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், தலைமை இதை அங்கீகரிக்கும், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக வரவேற்கும், பாராட்டும் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் இவ்வாறு அடாவடியாகப் பேசுகிறார்கள்.

நான் பணியாற்றிய ஒரு நிறுவனத்தில் செல்வாக்கு மிகுந்த செய்தியாளராக ஒருவர் வலம் வந்தார். உண்மையில் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையான செய்தியாளர்கள் கொதித்தனர். முதலாளியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அமைதியாக கேட்டுக் கொண்டார். மேற்படி நபர் கம்பெனிக்காக செய்யும் வேலைகளை வேறு யாராவது செய்துதர முன்வந்தால் அந்த நபரை உடனே விடுவிப்பதாக சொன்னார். அந்த நபர் செய்யும் வேலைகள் எல்லாருக்கும் தெரியும். யாரும் செய்ய மாட்டார்கள். இது தவறில்லையா என்று கேட்டேன். 'சரி தவறுக்கு அப்பாற்பட்டு ஒரு நிறுவனத்துக்கு சில தேவைகள் முளைக்கின்றன; அவற்றைப் பூர்த்தி செய்ய ஒரு ஆள் தேவைப்படுகிறார்; கவுரவமான பதவி இருந்தால்தான் அவரால் பூர்த்தி செய்ய முடிகிறது' என்று நியாயப்படுத்த முயன்றார்.

கட்சித் தலைவர்களுக்கும் கம்பெனி முதலாளிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ராஜா, சாமி எல்லாம் மோடியின் பரிசுக்காக அப்படிப் பேசுகிறார்கள்; வைகோ யாருக்காக மோடியை வைகிறார் என்று நீங்கள் கேட்டால், யோசித்தால் புலப்படும் என்பதுதான் பதில்.

அல்லது கொஞ்சநாள் காத்திருங்கள்!

தொடரும்..

English summary
The 12th Chapter of Kathir's Thaazha Prakkum Kakkaigal speaks about how some leaders' delivered worst speech at stages and what for they speak like that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X