For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 2: தேர்தல் தில்லுமுல்லு - பரிணாம வளர்ச்சி

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

ஜனநாயகத்தை இனிமேல் அருங்காட்சியகத்தில்தான் தேடவேண்டும்.
தமிழகம் சந்தித்த சமீபத்திய தேர்தலை இதைவிட பொருத்தமாக யாராலும் விமர்சிக்க இயலாது.

ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக அலசி அதைப்பற்றி ஒரு தீர்மானம் உருவாக்குவதிலும், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் கருத்தைப் பொதித்து அலங்கார அணிவகுப்பு நடத்துவதிலும் திமுக தலைவரை மிஞ்சுபவர் எவருமில்லை.

ஜனநாயகத்தை மக்கள் மன்றத்தில் இருந்து அடித்து துரத்தி அருங்காட்சியகத்தில் கொண்டு சேர்க்கும் புண்ணிய காரியத்தில் அவரது கட்சியின் பங்களிப்பு எத்தனை சதவீதம் என்பது வேறு விஷயம். அதை பிறகு பார்க்கலாம்.
நடந்து முடிந்தது உள்ளாட்சி பொதுத்தேர்தல் அல்ல. வெறும் இடைத்தேர்தல். காலியான சில மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தல்.

முன்பெல்லாம் உள்ளூரில் மட்டுமே தெரியும். வார்டு இடைத்தேர்தல் நடப்பது அடுத்த வார்டில் வசிக்கும் மக்களுக்கே தெரியாது. இந்த தடவை அது மாநில அளவில் முக்கியத்துவம் பெற்று விட்டது. போட்டியே இல்லாமல் பொறுப்புகளை கைப்பற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி எடுத்த முடிவால் பிறந்த முக்கியத்துவம்.

அதெல்லாம் இல்லை என்று இப்போது மறுக்கலாம். நடந்த முறைகேடுகள், தில்லுமுல்லு, வன்முறை, கேலிக்கூத்து எதிலுமே எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று கூறலாம். எங்களை குற்றம் சொன்னால் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டலாம். அரசியலில்அதெல்லாம் சகஜம்.

தீவிரவாத இயக்கம்தான் ஒரு கொடுஞ்செயலை செய்துவிட்டு, ஆமாம், நாங்கள்தான் செய்தோம் என்று பொறுப்பை ஒப்புக் கொள்ளும். அதன் பலத்தை வெளிக்காட்டும் முயற்சி அந்த ஒப்புதல். ஜனநாயக ரீதியில் அரசியல் நடத்துவதாக கூறிக்கொள்ளும் எந்தக் கட்சியாவது தனது அத்துமீறல்களை இதுவரை ஒத்துக் கொண்டிருக்கிறதா? கிடையாது.

ஆனால் மக்களுக்கு தெரியும். அவர்கள் கண் முன்னால்தானே எல்லாம் நடந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பயந்தோ அல்லது அவர்களால் கிடைக்கும் ஆதாயம் தடைபடக்கூடாது என்ற அக்கறையிலோ வெகுஜன ஊடகங்கள் இந்த அராஜக செயல்களை இருட்டடிப்பு செய்யலாம். அது மைசூர் போண்டாவை மசால் தோசைக்குள் மறைப்பதற்கு சமம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal - 2

சமூக ஊடகங்களின் தயவில் ஒவ்வொரு நிகழ்வும் நொடிக்கு நொடி அப்டேட் ஆகி உலகம் முழுவதும் பார்க்க முடிகிற இன்றைய சூழலில், தேர்தல் போன்ற பொது நிகழ்வுகளில் ரகசியமாக தில்லுமுல்லு செய்ய முடியும் என்று நம்புகிறவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள்.

ஆரம்பமே காட்டிக் கொடுத்துவிட்டது. ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். உடனடியாக அதை வாபஸ் பெற்றது. ஆகஸ்ட் 28ம் தேதி மீண்டும் அறிவித்தது. ஆனால் முதலில் தெரிவித்த தேதியில் எந்த மாற்றமும் இல்லை. அதே செப்டம்பர் 18.

என் கண்களுக்கு எட்டியவரை எதிர்க்கட்சிகளையே காணவில்லை என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் பிரகடனம் செய்திருந்தார். அந்த மெசேஜை அவரது கட்சிக்காரர்கள் சரியாகவே புரிந்து கொண்டார்கள். யாராவது வேட்புமனு தாக்கல் செய்தால் அம்மா சொன்னது பொய்யாகி விடுமே என்று தவித்துப் போனார்கள் போலும். விளைவுகளை ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடிந்தது.

எல்லா எதிர்க்கட்சிகளும் ஏதேதோ சாக்கு சொல்லி தேர்தல் களத்தில் இருந்து விலகி நின்ற நிலையில், பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தைரியமாக களம் இறங்கின. தைரியமாக என்பதில் நிறைய அர்த்தம் உண்டு.

அன்பான மிரட்டல், அடிதடி மிரட்டல், பண பேரம், கான்ட்ராக்ட் பேரம், தொழிலுக்கு இடைஞ்சல், குடும்பத்தினர் மூலம் நெருக்கடி, குழந்தைகளுக்கு பயமுறுத்தல்... என்று சகல வழிகளிலும் வீசப்பட்ட முட்டுக்கட்டைகளை பொருட்படுத்தாமல் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனநாயக கடமையாற்ற முனைந்தார்கள்.

உண்மையில் இவர்களில் யாருக்குமே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்திருக்காது. போட்டு பார்த்து விடுவோம் என்று சிலர் நினைத்திருப்பார்கள். இதில் தோல்வி அடைவது சட்டசபை தேர்தலில் டிக்கட் கிடைக்க முதல் படி என்று சிலர் நம்பியிருக்கலாம். கட்சி சொல்வதை செய்வோம், அதற்கு மேல் விதிவிட்ட வழிஎன்று பலியாடுகளாய் சிலர் நின்றிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், தேர்தலை புறக்கணித்தவர்களைவிட மேலான ஜனநாயக வீர்ர்கள் இவர்கள்.

என்றாலும், எல்லா பூட்டுக்கும் பொருந்தக்கூடிய சாவி அரசின் கையில்தானே இருக்கிறது. வேட்பு மனுவே செல்லாது என்று அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. முன்னாள் முதல்வர் சொன்னதுபோல, ‘நிர்வாக நடைமுறைப்படி பார்த்தால் தேர்தல் ஆணையரும் என்னிடம் சம்பளம் வாங்கும் ஊழியர் என்பதை மறுக்க முடியுமா?'

ஆக, தடைகளை எல்லாம் தாண்டி தாக்கலான வேட்பு மனுக்கள் 3,075. தள்ளுபடி செய்யப்பட்டவை 1,589. வரலாறு காணாத 52 சதவீத தள்ளுபடி. எந்த ஜவுளிக்கடையும் இதுவரை துணியாத ஆவணித் தள்ளுபடி.

இதற்கு மேலும் களத்தை விட்டு ஓடாமல் நின்றவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி திட்டம். அதில் திருநெல்வேலி ஷோ சிறப்பாக நடந்தது. மற்ற வேட்பாளர்கள் 'தாமாக' ஒதுங்கினர். பிறகு பிஜேபியின் மேயர் வேட்பாளரும் மனுவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தார் என தகவல் வந்தது. அது பொய் என்று மாநில தலைவர் தமிழிசை மறுத்தார். வேட்பாளர் மிரட்டப்படுவதாகவும், விலை பேசப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். உடனே, வேட்பாளர் அதிகாரபூர்வமாக அதிமுகவில் இணைந்தார் என்று படத்துடன் செய்தி வெளியானது.

நெல்லையை மிஞ்சியது புதுகை. அங்கே பிஜேபி, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மனு தாக்கலுக்கு சென்றபோது இலவச டீவி வாங்க நிற்பதை போல நீண்ட க்யூ. இடம் மாறி வந்து விட்டார்களோ என்று விசாரித்தால் எல்லாருமே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சைகளாம். கடைசியில் போய் நில்லுங்கள் என துரத்தி இருக்கிறார்கள். அப்படி நின்றால் மனு கொடுக்க ஒரு வாரம் ஆகும். சாலை மறியலாவது, ஆர்ப்பாட்டமாவது. தனியொருவனுக்கு மனு கொடுக்க வழி இல்லையெனில்... வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிஜேபிக்கு செல்வாக்குள்ள இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோயமுத்தூரில் கொஞ்சம் பரவாயில்லை. ஓட்டுக்கு நோட்டு கொடுப்பதாக கேள்விப்பட்டு தடுக்க விரைந்த அக்கட்சியின் மேயர் வேட்பாளரை துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்கள். ‘சொன்ன மாதிரி வாபஸ் வாங்கியிருந்தால் இந்த அவமானம் வந்திருக்காது, இல்லையா' என்று கடைசியாக அடித்தவர் பாசமாக கேட்டதில் அடி வாங்கியவர் கட்டாயம் மெர்சலாயிருப்பார்.

தேர்தல் முறைகேடுகள் புதிதல்ல. தேர்தலைக் கண்டுபிடித்ததே தமிழன் என்கிறார்கள். குடவோலை என்ற பெயரில் ஓட்டுச் சீட்டாக ஓலையைப் பயன்படுத்தி, ஓட்டுப் பெட்டியாக குடத்தைக் கையாண்ட வழக்கம் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இருந்திருக்கிறது. ஆகவே, அந்த தேர்தல் முறையில் படிப்படியாக பல மாற்றங்களை செய்வதிலும் தமிழனே முன்னணியில் இருப்பதில் வியப்பேது.

திமுக தலைவர் 1971ல் இரண்டாவது முறையாக சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட நேரத்தில் முறைகேடு புகார்கள் பெருமளவில் எழுந்தன. அந்த தேர்தலில் அவரது வெற்றியை உறுதி செய்வதற்காக, அவர் முதல் முறையாக வென்று பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்தே சைதை தொகுதியில் ‘திமுக வாக்காளர் சேர்ப்பு' திட்டமிட்டு நடந்தது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தமிழகத்திலேயே மிக அதிக சதவீத வாக்குகள் பதிவானது அங்கேதான்.
தலைநகரின் ஏனைய பகுதிகளில் நடைபாதைகளில் வசித்த ஏழை மக்களெல்லாம் சைதையில் அடையாறு ஆற்றோரம் குடிசை போட்டு வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர், மின்சார இணைப்புகளும் ரேஷன் கார்டும் கிடைத்த நன்றியில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் திமுகவுக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பிரசாரம் நடந்தது.

வீடு வீடாக கணக்கெடுத்து "வேண்டாத" வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவது, இல்லாத அல்லது இறந்த வாக்காளர்கள் பெயரில் ஆட்களைத் தயார் செய்வது, சாவடிகளைக் கைப்பற்றுவது, குறிப்பிட்ட வாக்காளர்களைத் தடுப்பது, எண்ணிக்கையில் தில்லுமுல்லு என்று பலதரப்பட்ட முறைகேடுகள் பற்றி தமிழக மக்கள் தொடர்ந்து பாடம் படித்தனர்.

நரிக்குறவர்கள் ஊர் ஊராக சுற்றுபவர்கள் என்பதால் தேர்தலின்போது அவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு ஓட்டு போடலாம் என்று சலுகை இருந்தது. ஏற்கனவே எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்த அவர்களை ஆயிரக்கணக்கில் அழைத்துச் சென்று எம்ஜிஆர் போட்டியிடும் தொகுதியில் முகாம் அமைத்து தங்க வைக்கும் பழக்கத்தை ஒரு தென்மாவட்ட அமைச்சர் அறிமுகம் செய்தார். தோல்வியே அறியாதவர் எம்ஜிஆர். ஆனாலும் அந்த ஏற்பாடுக்கு காரணம், ஓட்டு வித்தியாசத்தை சாதனை ஆக்குவதுதான்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்த பிறகு அப்பட்டமான மோசடிகள் குறைந்தன. பதிலுக்கு பொய் வாக்குறுதிகள், போலி அறிவிப்புகள், பெய்ட் நியூஸ், ஸ்பான்சர் நியூஸ், பேக்கேஜ் கவரேஜ், வீடு வீடாக பணப் பட்டுவாடா என்று புதுப்புது ரகமான முறைகேடுகள் பெருகியுள்ளன.

திருமங்கலம் ஃபார்முலாவை நாட்டுக்கு அறிமுகம்செய்த பெருமை திமுகவை சாரும் என்றால், திருநெல்வேலி ஃபார்முலா, புதுக்கோட்டை ஃபார்முலா என்று தேர்தல் உத்திகளை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற பெருமையை அதிமுக தட்டிச் சென்றுள்ளது.

மற்ற விஷயங்களைப் போலவே இதிலும் திமுக எட்டடி பாய்ந்தால் அதிமுக எண்பது அடி. உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாகச் செய்ய முடியும். தாரக மந்திரம்.

காங்கிரசும் பிஜேபியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த விஷயத்தில் கைச் சுத்தம் என்று சொல்லிவிட முடியாது. ஆளும் கட்சியாக இருந்த மாநிலங்களில் அவர்களும் செய்திருக்கிறார்கள். வீரியம் வேண்டுமானால் முன்பின்னாக இருக்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன். இந்திய தேர்தல் ஆணையத்தின் வைரவிழாநடந்தது. ஜனாதிபதி, பிரதமர் எல்லாம் கலந்து கொண்டார்கள். அதில் பேசிய மன்மோகன், 'தேர்தலில் என்னென்ன தப்பு நடக்கிறது, அதனால் ஜனநாயகம் எப்படிச் சீரழிகிறது என்பது எல்லாக் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் அதைத் தடுப்பதற்காக சட்டங்களைத் திருத்துவதில் கட்சிகள் உடன்படவில்லை' என்றார். எப்படி உடன்படும்?

அதற்கு முன்னால் பல ஆண்டுகளுக்கு முன்பே நிஜலிங்கப்பா சொன்னார். காங்கிரஸ் உடைய காரணமானவர்களில் முக்கியமானவர். கர்நாடகாவின் முதல்வராக இருமுறை பதவி வகித்தவர். ‘எப்படியாவது பதவியை பிடிக்க வேண்டும். பிடித்த பிறகு அதை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது. இதற்கு விதை ஊன்றியவர் இந்திரா' என்று தேர்தல் முறைகேடுகள் பற்றி விவரிக்கும்போது சொன்னார்.

ஆனால் அவருடைய கதை தெரியுமோ?

மைசூர் மாகாணம் உருவானதும் 1956 நவம்பரில் முதல்வர் ஆனார். கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்தது. விலகச் சொன்னார் நேரு. 1958 மேயில் இறங்கினார். '62 தேர்தலில் காங்கிரஸ் 208ல் 138 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. ஆனால் இவர் சொந்த ஊரில் தோற்றார். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் நிஜலிங்கப்பாதான் முதல்வராக வேண்டும் என்றனர். பி.டி.ஜாட்டி எதிர்த்தார். நேருவிடம் முறையிட்டார். தோற்றவர் முதல்வராவது சரிவராது என்று நேரு சொல்லிவிட்டார். ஆனாலும் ஜாட்டியால் ஆதரவு திரட்ட இயலவில்லை. தன் சீடர் எஸ்.ஆர்.கந்தியை முன்னிறுத்தினார் நிஜலிங்கப்பா. ஜாட்டி வேறு வழியில்லாமல் சம்மதித்தார். 'நிஜலிங்கப்பாதான் என் ராமர். அவர் வரும்வரை அவருடைய பாதணிகளாக நான்நாற்காலியில் அமர்ந்திருப்பேன்' என்று சொல்லி முதல்வர் பதவி ஏற்றார் கந்தி. உறவினரான பாகல்கோட் எம்எல்ஏயை விலகச் சொல்லி, மூன்று மாதத்துக்குள் அங்கே இடைத்தேர்தல் நடத்த வைத்தார். அதில் நிஜலிங்கப்பா போட்டியின்றி ஜெயித்தார். 96 நாளில் 'பரதன்' இறங்கி 'ராமனை' அரியணையில் அமர்த்தினார். அப்போது நிஜா சொன்னார்: 'என்னை ராமனாக சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் கந்தி எனக்கு பரதன் மாதிரி'!

Kathir's Thaazha Parakkum Kaakkaigal - 2

அடுத்த தேர்தலில் இன்னொரு தொகுதிக்கு மாறினார் நிஜா. ஆனால் மனு தாக்கல் செய்யவில்லை. வேறு 8 பேர் மனு போட்டனர். நிஜா ஆட்கள் 7 பேரை சரிக்கட்டி வாபஸ் வாங்க வைத்தனர். ஒருவர் மட்டும் மசியவில்லை. கடைசி நாள் அவரும் வாபஸ் வாங்கியதாக கூறி, நிஜலிங்கப்பா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அந்தத் தொகுதியில் நிஜலிங்கப்பா நிற்பதே அப்போதுதான் வெளியே தெரியும்.

மனு தாக்கல் செய்யவில்லை, பிரமாண பத்திரம் கொடுக்கவில்லை, சொத்து விவரம் தரவில்லை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, டெபாசிட் பணம் கட்டவில்லை, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, ‘நான் வாபஸ் வாங்கவில்லை, என்னை மிரட்டியதற்கு பணியவில்லை...' என்று நிஜாவுக்கு எதிராக ஆதாரங்களை கொட்டி வழக்கு தொடர்ந்தார் அந்த ஒரே ஒருத்தர். ப்ச். வேஸ்ட்!

ஒரு விஷயம் சொல்லவில்லையே. 1962 இடைத்தேர்தலில் நிஜா போட்டியின்றி ஜெயித்ததாக அறிவித்தார் அல்லவா... சாட்சாத் அவரேதான் இந்த தேர்தலிலும் அதிகாரி. முந்தைய ஆண்டே டிரான்ஸ்ஃபர் ஆகி இந்த தொகுதியில் பொறுப்பு ஏற்றிருந்தார். எப்படி முன்னேற்பாடு!

அரசியலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் இந்த வரலாறு உங்களுக்கு ஆறுதலாக தெரியலாம். உண்மையில் இப்போது தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கான அவசியமே கிடையாது. சாய்வது இப்படிக்கா அப்படிக்கா என்பதை மக்கள் முதலிலேயே தீர்மானித்து விடுகிறார்கள். இருப்பதை பெரிதாக்கலாமே தவிர, இல்லாததை உருவாக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் பலமிழந்து திசை தெரியாமல் நிற்கும் இன்றைய சூழ்நிலையில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புக்குக் குறைவில்லை. பொதுச் செயலாளர் பிரசாரத்துக்கு போகாமலும், கட்சியினர் பலத்தை பிரயோகிக்காமலும் விட்டிருந்தால்கூட அதிக இடங்களை அக்கட்சிதான் கைப்பற்றி இருக்கும்.

ஒருவேளை தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் இவ்வாறு செயல்பட்டிருந்தால், பயத்துக்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்ற பேராசையில் இவ்வாறு செயல்பட்டிருந்தால், அது ஆணவத்துக்கு கதவு திறந்துவிடுவதாக அமையும்.

பள்ளம் நோக்கியே செல்லும் தண்ணீரைப் போல ஆணவத்தின் பயணம் அழிவை நோக்கியே என்பது வரலாறு உணர்த்தும் பாடம்!

(மீண்டும் அடுத்த வெள்ளியன்று... )

தொடர்புக்கு: [email protected]

English summary
The second chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal is discusses about the election systems and rigging of the election system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X