For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 21: சட்டம் யார் கையில்?

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்வீச்சில் காயம் அடந்த போலீஸ்காரர்களும், போலீஸ் தடியடியில் காயம் அடைந்த மாணவ மாணவிகளும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

காயம் அடைந்த மாணவர்களை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக தமிழக கட்சிகளின் தலைவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள். ஆளும் கட்சிக்கும் சட்ட மாணவர்களுக்கும் என்றைக்குமே சுமுக உறவு இருந்ததில்லை. எந்தக் கட்சி ஆண்டாலும்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 21

ஆர்லிக்சும் ஆரஞ்சுப் பழமும் எடுத்துச் செல்லும் தலைவர்கள் ஆறுதல் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது கிடையாது. 'போலீஸ் நடத்திய தடியடியை வன்மையாக கண்டிக்கிறோம்; சட்ட மாணவர்களின் போராட்டத்துக்கு எங்கள் கட்சியின் முழு ஆதரவு உண்டு' என்று கூடவே வந்திருக்கும் ஊடகர்களிடம் அறிவிக்கிறார்கள்.

ஊடக பிரதிநிதிகள் உடன் வரவில்லை என்றால் இவர்கள் ஆஸ்பத்திரி பக்கமே போயிருக்க மாட்டார்கள். தினத்தந்தி நிருபர் வந்துவிட்டாரா? சன்டீவி கேமராமேன் வந்தாயிற்றா? என்ற அக்கறை மிகுந்த கேள்விகள் கட்சி ஆபீஸ்களில் ரொம்ப சகஜம். சமீப காலமாக ஒரு ஆங்கில நாளிதழ் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆல் இண்டியா பப்ளிசிடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

ஆளுங்கட்சி மீது அதிக கோபத்தில் இருக்கும் கட்சியாக இருந்தால் அந்த தலைவர் பேட்டியில் கூடுதலாக இரண்டு வார்த்தைகளை சேர்த்துக் கொள்கிறார். 'தடியடி'க்கு முன்னால் 'கண்மூடித்தனமான'. ‘போராட்ட'த்துக்கு முன்னால் ‘நியாயமான'.
தமிழ்நாடு மட்டுமல்ல, பெரும்பாலான மாநிலங்களில் இப்படித்தான் நடக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள்.

மாணவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொள்வது. தேவையான நேரத்தில் அவர்களை எளிதில் தூண்டி விட்டு, வீதிகளுக்கு வரவழைத்து, போக்குவரத்தை முடக்கி, மக்கள் மனதில் கிலியை உண்டாக்கி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது. ஒவ்வொரு கட்சியும் மாணவர் பிரிவு என்று ஒரு கிளை வைத்திருக்க காரணம் இதுவே.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 21

காயம் பட்ட போலீஸ்காரர்களுக்கு எந்த தலைவராவது ஆறுதல் சொன்னாரா? மாணவர்களின் கல்வீச்சை கண்டித்தாரா? இல்லை. ஏனென்றால் போலீஸ் என்பது பொது எதிரி. ஆட்சியாளர்களின் சேவகர்கள். அவர்களை அரவணைப்பதால் எதிர்க் கட்சிகளுக்கு எந்த லாபமும் கிட்டப் போவதில்லை.

சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு என்றோ எடுக்கப்பட்ட பழைய முடிவு. ஊருக்கு வெளியே கொண்டு செல்வது என்பதில் குழப்பம் இல்லை. ஒரே வளாகம் அமைக்கலாமா, இரண்டாக பிரித்து வெவ்வேறு இடங்களில் கல்லூரிகள் கட்டலாமா என்பதில்தான் அதிகாரிகள் மட்டத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவின. கடைசியாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு வளாகம் கட்ட தீர்மானித்துள்ளார்கள்.

இப்போது கல்லூரி இயங்கும் கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பல இடங்களில் சேதம் அடைந்து அது மிகவும் பலவீனமாக இருக்கிறது. நவீன வசதிகள் ஏற்படுத்த அங்கே போதுமான இடம் இல்லை. கட்டிட அமைப்பும் அதற்கு தோதாக இல்லை.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 21

இதெல்லாம் ஒருதலைப் பட்சமான கண்டுபிடிப்புகள் அல்ல. துறை நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்து கண்டறிந்த உண்மைகள்.

மேலும் பல முக்கியமான காரணிகள் இவற்றோடு சேர்ந்து கொண்டன. ஐகோர்ட் வளாகம் அமைந்துள்ள பாரிமுனை ஒரு காலத்தில் சென்னை நகரின் அமைதி சூழ்ந்த பகுதிகளில் ஒன்றாக இருந்தது. பாரி அண்ட் கோ முதலான பெரிய கம்பெனிகளின் நிர்வாக தலைமை அலுவலகங்கள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. ஐகோர்ட்டுக்கு வரும் வழக்குகள் மிகவும் குறைவு என்பதால் நீதிபதிகளும் வக்கீல்களும் குறைவு.

ஜனத்தொகை பெருகி அண்ணன் தம்பிகள் சொத்துக்காக அடித்துக் கொண்டு வறட்டு கவுரவத்தை காப்பாற்ற வக்கீலை நாடும் நிலை வந்த பிறகு ஐகோர்ட் வளாகத்தின் உள்தோற்றம் அடியோடு மாறிப் போனது. பெருகிய கூட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஐகோர்ட்டுக்கு வெளியே கடைகள், அறைகள், விடுதிகள் பெருகி ஜனசந்தடி மிகுந்த பகுதியாக உருமாறியது பாரிமுனை.

ஐகோர்ட் வளாகத்தின் உள்ளே சட்டக் கல்லூரியும், அதன் மாணவர்களுக்கான விடுதியும் கட்டப்பட்டதன் நோக்கம் கோர்ட் நடவடிக்கைகளை கவனிக்கவும் சீனியர் வக்கீல்களிடம் பயிற்சி பெறவும் மாணவர்களுக்கு வாய்ப்பு இருந்ததுதான். நீதிபதி, வக்கீல், வழக்கு, கட்சிக்காரர் என்று எல்லா எண்ணிக்கையும் பல மடங்கு பெருகிய பின்னர் அந்த நோக்கமே அடிபட்டு போனது.

ஐகோர்ட்டையே பல கிளைகளாக பிரித்து மதுரை திருச்சி கோவை திருநெல்வேலி போன்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போதே, அந்த வளாகத்தில் உள்ள கல்லூரியை இடமாற்றம் செய்யும் யோசனையும் பரிசீலனை மேஜைக்கு வந்துவிட்டது.

அரசிடமும் அதிகாரிகளிடமும் நாம் காணக்கூடிய குறைகள் குற்றங்கள் நிறைய உண்டு. அநேகமாக அவை செயல்பாடு குறித்த புகார்களாக இருக்கும். திட்டமிடுதலை பொருத்தவரை ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் நேர்மையாகவே நடக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய வகையில்தான் திட்டங்களைத் தயாரிக்கின்றனர்.

வெளியூர் பேருந்து நிலையத்தை பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு மாற்றியது, கொத்தவால் சாவடி காய் கனி கடைகளுக்கு கோயம்பேட்டில் வளாகம் அமைத்தது, மண்ணடி இரும்புக் கடைகளுக்கு சாத்தங்காட்டில் இடம் ஒதுக்கியது ஆகியவை பாரிமுனை பிராந்தியம் மனிதர்கள் நடமாட தகுதியுள்ளதாக பராமரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இவை ஒவ்வொன்றையும் இடம் மாற்றும்போது எதிர்ப்பு வரத்தான் செய்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த மிருகக்காட்சி சாலையை வண்டலூருக்கு மாற்றியபோதும், மூர் மார்க்கெட்டை காலி செய்த போதும், மத்திய சிறைச்சாலையை புழலுக்கு கொண்டு சென்ற வேளையிலும் பாதிக்கப்பட்டவர்கள் வீதிக்கு வந்தார்கள்.

தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த குழுக்களைக் கட்டிலும், அவர்கள் அந்த இடங்களில் தொழில் செய்வதால் பலவகையிலும் இடைஞ்சல்களை சந்தித்த பொதுமக்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது. ஆகவே அரசியல் கட்சிகள் ஆதரவு இருந்தும்கூட அந்த போராட்டங்கள் வெற்றி பெற முடியவில்லை.
அதே நிலைதான் சட்டக் கல்லூரிக்கும் வரும்.

மரியாதைக்குரிய இடமாக இருந்த சட்டக் கல்லூரியும் அதன் மாணவர் விடுதியும் எந்த அளவுக்கு தரம் மாறிப் போனது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ரகசியம் கிடையாது. நீதிபதிகள், சீனியர் வக்கீல்கள், அந்தப் பகுதியில் தொழில் நடத்தும் வர்த்தகர்கள், பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், காவல் துறையினர், அங்குள்ள சாலைகளைத் தவிர்க்க முடியாத லட்சக்கணக்கான பயணிகள் ‘எப்போது சட்டக் கல்லூரி இங்கிருந்து போகும்?' என்று பெருமூச்சுடன் காத்திருக்கிறார்கள்.

ஊடகர்களுக்கு இந்த உண்மை நன்றாக தெரியும். ஆனால் சொல்வதில்லை, எழுதுவதில்லை. உடனே ஒரு கூட்டம் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தும், மன்னிப்பு கேட்கச் சொல்லும் என்ற உஷார் சிந்தனை.

இது ஆபத்தான அமைதி.

அரசுடன் பிணக்கு என்றால் அப்பாவிகளை பலிகடா ஆக்கலாமா? பல மணி நேரம் போக்குவரத்தை முடக்கி லட்சக்கணக்கான மக்களை நடுத்தெருவில் முடக்கி வைத்தது எவ்வளவு பெரிய குற்றம்.

போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அராஜகத்தில் இந்திய தண்டனை சட்டத்திலும், குற்றவியல் நடைமுறை நியதிகளிலும் எத்தனை விதிகள் மீறப்பட்டுள்ளன அவற்றுக்கு என்ன தண்டனை என்பது சட்டம் பயிலும் இந்த மாணவர்களுக்கு தெரியாதா?

மாணவிகள் இந்த மறியலில் முன்னிறுத்தப்பட்டதைப் பார்க்க இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்களையும் குழந்தைகளையும் மனித கேடயங்களாக பயன்படுத்தும் வீரப்போராளிகளின் வியூகம் இங்கேயும் அமைக்கப்பட்டதை பார்க்கும்போது, 'சட்ட மாணவர்கள் என்ற போர்வையில் அரசியலமைப்பை எதிர்க்கும் தீவிரவாதிகள் சிலரும் ஊடுருவி இருக்கிறார்கள்' என்று உளவுத்துறை அனுப்பிய குறிப்பு தவறாக இருக்காது என தோன்றுகிறது.

நீதிமன்றமும் புகழ்பெற்ற நியாயவாதிகளும்கூட வலிமை உள்ளவர்களின் தவறுகளைசுட்டிக் காட்ட தயங்குவதும், குழுபலம் கொண்டவர்கள் தப்பு செய்தால் கண்டிக்க பயந்து ஒதுங்குவதும் மோசமான முன்மாதிரிகள். இது சமுதாயத்துக்கு நல்லதல்ல.

சட்டம் பயிலும் மாணவர்கள் சட்டத்தை மதிக்க முதலில் பழக வேண்டும். தங்களைத் தவறாகப் பயன்படுத்தும் கட்சிகளிடம் இருந்தும், தப்பான வழி காட்டும் அமைப்புகளிடம் இருந்தும் விலகி நிற்க வேண்டும். கோரிக்கை எதுவாக இருந்தாலும் உங்கள் போராட்டம் வெற்றிப் பெற ஒரு வழிதான் உண்டு. பொதுமக்களின் ஆதரவை பெறுவது.

அன்பும் ஆதரவும் மரியாதையும் மிரட்டல் மூலம் கிடைப்பவை அல்ல.

English summary
The 21st episode of Kathir's Thazha Parakkum Kaakaigal discusses about the recent protest of Law College Students against shifting the campus to somewhere.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X