For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் - 22: கேஜ்ரிவால் பிளான் என்ன?

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளார்.

இந்த தடவை பாதியில் ஓடிவிட மாட்டேன். 5 வருடமும் ஆட்சி செய்வேன் என்று ராம்லீலா மைதானத்தில் டெல்லி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் இலாகா இல்லாத முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை இலாகா இல்லாத அமைச்சர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.

அதுகூட அடிக்கடி நடப்பதில்லை. செயல்பட முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்ட அல்லது விபத்தில் சிக்கி கோமாவில் கிடக்கும் அமைச்சரின் இலாகாக்களை மற்றவர்களுக்கு மாற்றி, சம்பந்தப்பட்டவர் செலவு இல்லாமல் சிகிச்சை பெறவும் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடக்கவும் வசதியாக முதல்வரால் அல்லது பிரதமரால் செய்யப்படும் ஏற்பாடாகதான் இருக்கும்.

முதல்வரே இலாகா இல்லாமல் பதவி ஏற்கும் அதிசயம் இப்போதுதான் நடந்திருக்கிறது. நாட்டிலுள்ள தலைவர்கள் எல்லாம் குழம்பிக் கொண்டிருப்பார்கள். என்ன பிளான் வைத்திருக்கிறார் கேஜ்ரிவால் என்று.

பதவி ஏற்கும்போது அவர் சொன்ன வார்த்தைகளை, டெல்லி தேர்தலின் பின்னணியோடு பொருத்திப் பார்த்தால் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கலாம்.

டெல்லி தேர்தல் பின்னணியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

சென்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனாலும் பிஜேபியும் காங்கிரசும் ஆட்சி அமைக்க அக்கறை காட்டாததால் கேஜ்ரிவால் முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை சட்டமாக்குவது உள்ளிட்ட அவரது விருப்பங்கள் எதுவும் ஈடேறுவதற்கான வழியே திறக்கவில்லை.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal - 22

வெறுத்துப்போய் 49 நாளில் அதிகாரத்தை துறந்தார் கேஜ்ரிவால். அதிகாரத்தில் ஆர்வம் இல்லை என்பதால் அல்ல. டெல்லி என்ற அரை மாநிலத்தில் அதிகாரமற்ற பொம்மை முதல்வராக அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால்.

அதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியை களம் இறக்கினார். நரேந்திர மோடியை எதிர்த்து அவரே வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அவரும் கட்சியும் சந்தித்தது படுதோல்வியை. பக்கத்து மாநிலமான பஞ்சாபில் மட்டும் 4 எம்.பி.க்கள் கிடைத்தார்கள்.

அந்த தோல்வியில் இருந்து அவர் சில பாடங்களை கற்றுக் கொண்டார்.

எந்திரன் ரஜினி மாதிரி 360 டிகிரி சுழலும் துப்பாக்கியுடன் எதிரில் வரும் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளும் காட்சியை சினிமாவில்தான் மக்கள் ரசிப்பார்கள். அரசியலில் வெறும் ஆவேசமும் ஆர்ப்பாட்டமும் வெற்றியை பறித்துத் தராது என்பது முதல் பாடம்.

அடுத்த பாடம், கொடுத்த வாய்ப்பை முடிந்தவரை பயன்படுத்தாமல் விலகி ஓடியதை வாக்காளர்கள் ஜீரணிக்கவில்லை என்பது. தேர்தல் முடிவை மக்களின் கட்டளை என்பார்கள் ஆங்கிலத்தில். கட்டளைக்குக் கீழ்ப்படியாத சேவகனை எஜமானர்கள் தண்டித்து விட்டார்கள் எனப் புரிந்து கொண்டார்..

Kathir's Thaazha Parakkum Kaakkaigal - 22

இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க முயன்றால் எதுவும் வசப்படாது என்பது அடுத்த பாடம். டெல்லி என்ற கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவர் இந்தியா என்ற வானத்தில் ஏறி வைகுண்டம் போவாராமா என்று மக்கள் கேலி செய்தது அவர் காதுகளை துளைத்தது.

அந்த பாடங்களை கற்றுக் கொண்டவர் அதற்கேற்ப வியூகத்தை திருத்தி அமைத்தார். தவறு செய்து விட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள் என்று வாக்காளர்கள் முன்னால் மண்டியிட்டு கதறினார்.

மன்னிப்பு யார் கேட்டாலும் மனம் இரங்குவது இந்தியர்கள் இயல்பு. இது தெரிந்தாலும் நமது அரசியல்வாதிகள் மன்னிப்பு கேட்பதில்லை. ஊழலுக்காக சட்டத்தாலும் வாக்குகளாலும் தண்டிக்கப்பட்ட தலைவர்கள் கூட மக்கள் முன்னால் கைகூப்பி மன்னிப்பு வேண்டியது கிடையாது.

கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதில் மக்கள் உருகிவிட்டார்கள். தவறை ஒப்புக் கொண்ட நேர்மையை அங்கீகரித்தார்கள். ‘ஆனாலும் நான் குற்றம் இழைக்கவில்லை என்பதால் இன்னொரு வாய்ப்பு தாருங்கள்' என வேண்டியதை ஏற்றுக் கொண்டார்கள்.

தன்னுடைய புது வியூகம் நன்றாக வேலை செய்கிறது என்பதை கேஜ்ரிவால் உணர்ந்து கொண்டார். வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொண்டார். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை அவர் எதிர்பாக்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் தயவில் கேஜ்ரிவாலின் நிச்சய வெற்றி சரித்திர வெற்றியாக உருமாற்றம் பெற்றது.

நாட்டின் தலைநகரம் என்பதைத் தவிர டெல்லி மாநில அரசின் முதல்வர் அனுபவிக்கக் கூடிய பெருமை என்று எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. புதுச்சேரியை போல டெல்லி ஒரு யூனியன் பிரதேசம். அதன் முதல்வராக யார் வந்தாலும் உண்மையான அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் இருக்கும்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal - 22

மத்தியில் ஆளும் கட்சி தலைமைக்கு விசுவாசமான ஒரு ரிட்டயர்ட் அதிகாரி அங்கே துணைநிலை ஆளுனராக இருப்பார். அவரது கையெழுத்தின்றி ஒரு பியூனுக்கு மெமோ கொடுக்கக் கூட முதல்வரால் முடியாது.

அப்படிப்பட்ட டெல்லி முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கேஜ்ரிவாலுக்கு எதிராக நாட்டின் பிரதமர் மேடையேறி பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல அரை டஜன் கூட்டங்களை பிரதமருக்காக ஏற்பாடு செய்தது பிஜேபி. அராஜகன், அனுபவம் இல்லாதவன், தகுதி இல்லாதவன், காட்டில் வசிக்க வேண்டியவன்... என்றெல்லாம் தனது இமேஜுக்கும் பொறுப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் மிகவும் கடுமையாக கேஜ்ரிவாலை விமர்சனம் செய்து எள்ளி நகையாடினார் மோடி.

முதல் பொதுக் கூட்டத்திலேயே மக்கள் ஆர்வமாக பங்கேற்கவில்லை. அத்தனை காலியிடங்களை பார்த்த்துமே மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள் என்பதை அந்த அனுபவசாலி அரசியல்வாதியால் புரிந்து கொள்ள முடியாமல் போனது ஆச்சரியம்.

அவரது ஆத்ம தோழர் அமித் ஷா தன் பங்குக்கு குட்டையை குழப்பினார். 15 ஆண்டுகளாக களத்தில் நின்ற கட்சிக்காரர்களை இலவுகாத்த கிளிகளாக்கி, வெளியிலிருந்து வேட்பாளர்களை இறக்குமதி செய்தார். முத்தாய்ப்பாக கட்சிக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லாத முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

மொத்த டெல்லியும் கேஜ்ரிவால் வலையில் விழுந்தது. முதல்வரானதும் அவரது முதல் பேச்சு மலைக்க வைக்கிறது.

'ஐந்து வருடமும் டெல்லியில்தான் இருப்பேன். வேறு எந்த மாநிலத்திலும் ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடாது. துணை முதல்வரும் அமைச்சர்களும் டெல்லி நிர்வாகத்தை கவனிப்பார்கள். நான் அவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பேன். தவறு செய்தால் திருத்துவேன். மக்களோடு நெருக்கமாக இருந்து அவர்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்குவேன்' என்கிறார் கேஜ்ரிவால்.

அதில்தான் இருக்கிறது சூட்சுமம். மத்திய அரசின் முழு ஆதரவு இல்லாமல் டெல்லி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற முடியாது. அவ்வாறு ஆதரவு அளித்து ஆம் ஆத்மிக்கும் கேஜ்ரிவாலுக்கும் நல்ல பெயர் கிடைக்கச் செய்ய பிஜேபி ஒன்றும் தன்னலமற்ற தியாகிகளின் கூடாரம் கிடையாது.

மத்திய அரசின் ஒத்துழைப்பு கிட்டாததால் திட்டங்களை செயல்படுத்த இயலாத சூழல் உருவாகும்போது, விமர்சனக் கத்திகளை எதிர்கொள்ளும் வட்டப் பலகையாக இருக்க வேண்டிய கட்டாயம் கேஜ்ரிவாலுக்கு இல்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நாட்டாமை செய்யும் தகுதியை அவர் எடுத்துக் கொள்ள முடியும்.

எந்த முதல்வருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. மீசைக்கு பங்கமில்லாமல் கூழைக் குடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறார் என்று தெரிகிறது.

அது ஒன்றுமே இல்லை, அவர் செய்யக் கூடிய மற்ற விஷயங்களை நினைத்தால்.

சாமானிய மனிதனான, அரசியல் கத்துக்குட்டியான, முன்னாள் அரசு அதிகாரியான தன்னை தேவையே இல்லாமல் சரி சமமாக பாவித்து களம் இறங்கி வேட்டைக்கு வந்துவிட்டார் இந்த நாட்டின் பிரதமர் என்ற உண்மை கேஜ்ரிவால் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.

சைக்கிளில் டீ விற்ற சாமானியன் என்ற சுய அறிமுக படலம் முடிந்து, உலக தலைவர்களுடன் சரிக்கு சரியாக எந்த மேடையையும் பகிர்ந்து கொள்ளும் ஸ்டேட்ஸ்மேன் ஆகிவிட்டேன் என்று காட்டிக் கொள்ளும் கட்டத்துக்கு சட்டென தாவிவிட்டார் மோடி. அத்வானி போன்ற ஜாம்பவான்கள் பேச்சிழந்து பார்த்து நிற்கிறார்கள். அத்தகைய பிரதமரால் தரப்பட்ட அந்தஸ்தை உதறித் தள்ள கேஜ்ரிவாலுக்கு மனம் வராது.

நாடு மொத்தத்துக்கும் அல்ல, டெல்லிக்கு மட்டுமேகூட தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என்றால் மத்திய ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் முடியும் என்பது கேஜ்ரிவாலுக்கு நன்றாக தெரியும்.

அவசரம் காட்டாமல் ஐந்தாண்டு காலத்தில் அதற்கான அஸ்திவாரம் போட அவர் ஆசைப்படுகிறார். ஆசைப்படுவதை அடைய இரண்டு வழிகள் இருக்கின்றன. ஓப்பனாக சொல்லி, அதற்காக திட்டமிட்டு, உடன்படுபவர்கள் உதவியைக் கேட்டுப் பெற்று, தலைவனுக்கான முத்திரை மோதிரத்துடன் ஒவ்வொரு அடியாக முன்னேறி இலக்கை எட்டுவது ஒரு வழி.

அது மோடி வழி.

ஆசை இருப்பதை வெளியே காட்டாமல், பற்றுகள் அற்ற சேவகனாக செயலாற்றி, இவனல்லவோ ஒரு தலைவனுக்கு இலக்கணம் என எல்லோரையும் பேச வைத்து, இலக்கே தானாக நெருங்கி வரவழைப்பது இன்னொரு வழி.

அதுதான் கேஜ்ரிவால் வழி.

'ஊழலை ஒழிப்போம்; விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவோம்; உண்மையான அதிகாரத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்போம்' என்பது சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு வாக்காளரையும் ஈர்க்கும் வாசகங்கள். இதுவரை பார்த்துவிட்ட கட்சிகளால் அதுபோன்ற மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று தெரியும்போது, புது வரவை தேடுவது இயல்பு. எனவே கேஜ்ரிவால் ஆசைப்படுவதில் தப்பேதும் கிடையாது.

உண்மையில் மோடியும் அப்படித்தானே மாற்றம் ஏற்படுத்த நினைத்தார். மோடிக்கே மாற்றாக உருவாக விரும்புகிறார் கேஜ்ரிவால். என்ன தவறு?

பல பேர் இந்த கணிப்பை ஏற்க மாட்டார்கள் என்பது தெரியும். இந்தியாவை புரிந்துகொள்ள அவர் மாநில சுற்றுப்பயணம் புறப்பட்டு, தமிழகத்துக்கும் ஒருநாள் வரும்போது அவர்களுக்கும் விளங்கும்.

(தொடரும்)

English summary
The 22nd episode of Kathir's Thaazha Parakkum Kaakkaigal analyses the future plans of Delhi CM Arvind Kejriwal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X