For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் 7: திசை திரும்பும் தமிழக அரசியல்

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

மது அருந்தும் உந்துதலில் இருந்து விடுவிக்கும் சிகிச்சைப் பெறுவதற்காகத்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாடு சென்றுள்ளார் என்று அவருடைய முன்னாள் நண்பர் ஒருவர் கேலிப் புன்னகையுடன் சொன்னார்.

இதில் கேலி கிண்டலுக்கு என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

தகவல் சொன்னவர் மதுவையே தீண்டாதவர் அல்ல. மது அருந்தாத தமிழர்களை உளவு நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கும் சூழல்தானே நிலவுகிறது.

தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், உயர் அதிகாரிகளில் மதுவை விலக்கி வைத்திருப்பவர்கள் குறைவு. ஆகவே கேப்டனைக் கிண்டல் செய்வது முறையல்ல. எனினும் அவர்கள் எல்லாரும் எப்போது குடிக்கிறார்கள் என்பது நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். விஜயகாந்த் விவகாரம் நாடறியும்.

நாளை முதல்வர் நாற்காலியில் அமர விரும்பும் ஒருவருக்கு அந்த இமேஜ் நிச்சயமாக ஒரு பாரம். அதை இறக்கி வைக்க அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுகிறார் என்றால் அதை பாராட்டுவது உசிதம்.

மேலை நாடுகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் போதை அடிமைத் தளையில் இருந்து மீள சிகிச்சை எடுத்துக் கொண்ட செய்திகள் உண்டு.

மலேசியா செல்ல காரணம் எதுவாக இருந்தாலும், தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை தேமுதிக தலைவர் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதல்ல. அவர்களும் சதுரங்கக் காய்களை துரிதமாக நகர்த்தத் தொடங்கி விட்டார்கள்.

ஜெயலலிதா முதல்வர் பொறுப்பையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நொடியில் தமிழக அரசியல் மாற்றத்துக்கு விதை தூவப்பட்டது. வழக்கில் இருந்து அவர் விடுபட சட்ட ரீதியான வாய்ப்புகள் இருந்தாலும், அதன் முடிவு தெரியும் வரையிலான தவிர்க்க முடியாத கால தாமதம் அவரது அரசியல் ஆதிக்கத்தை பலமாகப் பாதிக்கும்.

முன்னாள் முதல்வரின் சிறை வாசமும் நீதிமன்ற நிபந்தனைகளும் தற்காலிகம் ஆகிவிடக்கூடாது என்பதில் பல தரப்பினர் அக்கறை காட்டுகின்றனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் திரைக்குப் பின்னால் ஒன்று திரட்டப் படுகிறார்கள்.

அவரது பாதையில் அடுத்து என்னென்ன தடைக்கற்களை வைக்க முடியும் என்று சட்டமேதைகள் குழு ஒன்று புத்தகங்களைப் புரட்டி குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. பழைய சம்பவங்களைக் கிளறி புதிய ஆதாரங்களை கொத்திக் கொத்திக் கோர்த்துக் கொண்டிருக்கிறது, ஓய்வு பெற்ற அதிகாரிகள் கோஷ்டி.

ஜெயலலிதாவை நிரந்தர சிறைப் பறவையாக்க தன்னிடம் கட்டுக் கட்டாக ஆவணங்கள் இருப்பதாக மார் தட்டுகிறார் சுப்ரமணிய சாமி. அவற்றில் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தாலே பலமான வழக்குகளாகத் தெரிகிறது. இதெல்லாம் இவருக்கு எப்படி கிடைக்கின்றன என்று அநேகருக்கு ஆச்சரியம்.

உண்மையில் அது பெரிய விஷயம் அல்ல. நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பலருக்கு நன்மை அளிப்பதாக இருக்கலாம். சிலருக்கு அதனால் பாதிப்பும் ஏற்படும். வேண்டுமென்றே நீங்கள் தீமை இழைத்ததாக நம்புவோர், பழி வாங்க சந்தர்ப்பம் வரட்டும் எனக் காத்திருப்பார்கள்.

உங்கள் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து பாதகமான தகவல்களை பத்திரப் படுத்தி வைத்திருப்பார்கள். உங்களுக்கு எதிராக நிற்பவர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நினைக்கிறார்களோ அவரிடம் சமர்ப்பித்து விடுவார்கள்.

சாமிக்கு காணிக்கை செலுத்துவதைப் போல சமயங்களில் வழக்குச் செலவுக்கென தொகை கொடுப்பதும் உண்டு. பலனை அனுபவிக்கப் போவது பக்தன்தான் என்பதால் வக்கீல் ஃபீஸ் போல சாமியே கேட்டு வசூலிப்பதும் நடக்கும்.

சுப்ரமணிய சாமியிடம் குவியும் ரகசியத் தகவல்களில் பெரும் பகுதி அவராக சேகரித்தது அல்ல. அவரைத் தேடி வரும் தகவல்கள். ஜெயல்லிதா தேவையே இல்லாமல் நிறைய எதிரிகளை சம்பாதித்து இருந்ததால் சாமிக்கு வந்து சேரும் தகவல்களை சரிபார்க்க ஒரு குழுவே வேலை செய்கிறது. புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சிலரும் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் காகிதக் கட்டுகளை அவருக்குக் கொடுப்பதுண்டு.

இன்னொரு விஷயம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகார வர்க்கத்தில் பெரும் கோஷ்டி ஒன்று முனைப்புடன் செயலாற்றுகிறது. இவர்கள் முதல்வர் சொல்லியோ அவருக்கு தெரிந்தோ அவ்வாறு இயங்கவில்லை. சொந்தக் காரணங்களும் வேறு வகையான பாசமும் அவர்களை இயக்குகிறது.

ஜெயலலிதா மீதும் இவர்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆனால், கடவுளாகப் பார்த்து வழங்கியிருக்கும் வாய்ப்பை வீணாக்கிவிடக் கூடாது என்ற உணர்வுடன் கண்ணுக்குத் தெரியாமல் கைகோர்த்து வேலை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் இந்தப் பின்னணி நன்றாகத் தெரியும். ஆனால் பகிரங்கமாக விவாதிக்க யாரும் தயாராக இல்லை. மாறாக, குழம்பிய குட்டையில் அதிக மீன் பிடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தப்பில்லை, அதுதான் அரசியல்.

அன்புமணி மகள் திருமணத்தை சாக்கிட்டு முதலில் வைகோவும் ஸ்டாலினும் சந்தித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்வு. ராமதாசுடன் இருவரும் தனித்தனியாகப் பேசினர். அடுத்த நாள் கருணாநிதியும் ராமதாசும் சந்தித்து உறவை புத்துப்பித்துக் கொண்டனர். தமிழகத்தில் மதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் திருமணத்தில் ஆஜராகி இருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி திமுக - பாமக - மதிமுக பேச்சுவார்த்தை செய்திகளில் முதலிடம் பெற்றது.

vaiko and stalin

பாமகவும் மதிமுகவும் பிஜேபி கூட்டணியில் நீடிக்க வழியே இல்லை. ஆரம்பம் முதலே அது பொருத்தமில்லாத கூட்டணி. மொழி, இனம், மதம், பிராந்தியம், ஒதுக்கீடு, சுயாட்சி போன்ற பல்வேறு அடிப்படைக் கொள்கைகளில் பிஜேபியுடன் இரு திராவிடக் கட்சிகளாலும் ஒத்துப் போகவே முடியாது.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவரது அரசுக்கு எதிராக அதிகபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ராகுலோ கரத்தோ யெச்சூரியோ அல்ல. வைகோவும் ராமதாசும்தான். பிஜேபிக்கு கொசுக்கடி தாங்க முடியவில்லை. ஆனால் வெளியே துரத்தினால் இன்னும் காட்டமாக பேசுவார்கள் என்பதால் அதன் தலைவர்கள் மவுனம் காத்தனர்.

எப்படியும் வைகோ, ராமதாஸ் வெளியேறுவார்கள் என்பது பிஜேபிக்கு தெரியும். எப்படியும் அவர்கள் அறிவாலயம் வருவார்கள் என்பது திமுகவுக்கு தெரியும். எப்போது போவார்கள் என்று தேமுதிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த திருப்பத்தால் திமுக கூட்டணி பலமானால், பிரியமான 'மூன்றாவது அணி' முத்திரையை அதில் பதித்து தாங்களும் கூடாரத்தில் குடியேறலாம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் காத்திருக்கின்றன.

இதுதான் இன்றுள்ள தமிழக அரசியல் வானிலை. ரமணன் சொல்வது போல கணிப்புகள் எல்லாம் கடைசி நிமிட மாறுதலுக்கு உட்பட்டவை.

பிஜேபி + தேமுதிக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக விஜயகாந்த் நம்புகிறார். மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் பெயர் சொல்லும்படியான தலைவர் இல்லாததால், கேப்டனின் நம்பிக்கை கானல் நீராகாது என நம்பலாம்.

பிஜேபிக்கும் இந்த தேர்தலிலேயே தமிழக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. தமிழக மக்களாக திடீர் முடிவெடுத்து ஆட்சியை ஒப்படைத்தால்கூட, அமைச்சரவை உருவாக்க போதுமான பலம் தன்னிடம் இல்லை என்பதை அது உணர்ந்திருக்கிறது. எனவே, கூட்டணி அரசின் ஒரு அங்கமாகவோ பேரவையில் கணிசமான எண்ணிக்கை கொண்ட எதிர்க்கட்சியாகவோ உருவெடுப்பதுதான் அதன் இப்போதைய இலக்கு.

ஜெயலலிதா களத்தில் இல்லாமல் அதிமுக பலவீனம் அடையும் அதே நேரத்தில், 2ஜி வழக்குகள் ஒரு முனையை நெருங்குவதால் திமுகவின் நிலை இன்னும் மோசமாகும் அறிகுறி தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி... என்ற பாடல் இணையமெங்கும் ஒலிக்கிறது. தொகுதிகள் பங்கீட்டில் இதனால் பாமக, மதிமுகவுக்கு அதிக பலன் கிட்டும்.

'ஜெயலலிதாவின் செல்வாக்கு ஒன்றும் மங்கிவிட வில்லை. அவரது சிறை வாசத்தால் மக்களிடம் அனுதாபம் அதிகரித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து அந்த அலையால் நாமும் பலன் பெறலாம்' என்று தமிழக பிஜேபியில் சில தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இவர்களின் கருத்தை ஆதரிப்பவர்கள் கட்சியின் மேலிடத்திலும் இருக்கின்றனர்.

ஆனால், ஊழல் ஒழிப்பை பிரதான கோஷமாக முன்வைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிஜேபி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருடன் கைகோர்த்தால் அதோடு கட்சியின் கவுரவம் காற்றோடு கலந்துவிடும் என தமிழிசை எச்சரித்து வருகிறார்.

ஆட்சியைப் பிடிக்க அவசரப்படாமல் படிப்படியாக கட்சியை கட்டமைக்கும் வேளை இது என அவர் நம்புகிறார். முதியவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. மோடியும் அமித் ஷாவும் யாருடைய கருத்தை ஏற்கப்போகிறார்கள் என்பது பொங்கலுக்குள் தெரியும்.

உண்மையிலேயே பரிதாபம் காங்கிரஸ் கட்சியின் நிலைமை. ஞானதேசிகன் ராஜினாமா செய்துவிட்டார். கடிதம் கொடுத்த பிறகுதான் அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த விஷயமே மேலிட்த் தலைவர்களுக்கு தெரிந்திருக்கும்.

'என்னை மாற்றப் போவதாக இரண்டு மாதமாக வதந்தி பரப்பப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மேலிடம் முயற்சி செய்யவில்லை. அது என் மனதை புண்படுத்தியது. அதனால் விலகிவிட்டேன்' என்றார் ஞானதேசிகன்.

அடிமேல் அடி விழுந்து டெல்லி மேலிடத்தின் காதுகள் இரண்டும் பட்டாசு ஒலிக்கு பயந்த பூனைபோல விறைத்துக் கொண்டிருக்கையில், சென்னை கோஷ்டிச் சண்டையின் எதிரொலி எப்படி செவியேறும்? பாவம், ஞானதேசிகன். ஆனமட்டும் கோஷ்டிகளை அரவணைத்துதான் பார்த்தார். அத்தனை பேரும் கத்தியை செருகினால் எப்படித் தாங்குவார்.

மலேசியாவில் இருந்து புதுப் பொலிவுடன் திரும்பும் கேப்டன் அவரது மச்சான் பேச்சைக் கேட்டு மறுபடியும் மலையேறினால் மோடி கடுப்பாகி கதவைக் காட்ட நேரலாம். அது நிகழ்ந்தால் சத்தியமூர்த்தி பவனில் கேட் திறக்கப்படும். காங்கிரஸ் கையில் சிக்க்க்கூடிய கடைசிச் சீட்டு அதுதான்!

English summary
Kathir's Thaazha Parakkum Kaakkaigal 7th episode discusses about the current political situation in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X