For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப்பறக்கும் காக்கைகள்- 9: சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

இன்னும் ஒரு வருடத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து, 2016ல் நடக்க இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 122 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடிப்போம் என்று பிஜேபி பிரகடனம் செய்திருக்கிறது.

நாலா பக்கமும் நிறைய சிரிப்புச் சத்தம் கேட்கிறது.

தனியாக நின்று ஒரு சீட் கூட ஜெயிக்க துப்பில்லாத காவிக் கட்சியான பாரதிய ஜனதா, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க கனவு காண்பது கையில்லாதவன் டச் ஸ்கிரீனுக்கு ஆசைப்படுவது போல என்று ஒரு பேராசிரியர் உவமை சொன்னார்.

சூரியன் மேற்கே உதித்தாலும் பெரியார் பிறந்த மண்ணில் ஹிந்தி மதவாத சக்திகள் காலூன்ற தமிழர்கள் இடம் தர மாட்டார்கள் என்று ஒரு எழுத்தாளர் சமூக ஊடகத்தில் பதிவிடுகிறார்.

ஆனால் அரசியலில் ஊறித் திளைத்த தலைவர்கள் யாரும் தமிழிசை வாயிலிருந்து வெளிப்பட்ட பிஜேபியின் பிரகடனத்தை அப்படி ஊதித் தள்ளி விடவில்லை.

அவர்களுக்குத் தெரியும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது. அசாத்தியம் என்று அறிவாளிகள் சொல்வதை சாத்தியமாக்கிக் காட்டுவது அரசியல் என்ற கலை.

ஆண்டு 1967க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்று எதுவும் இல்லை என்றுதான் பெரும்பாலானோர் நம்பினார்கள். மாற்று சக்தியாக உருவெடுப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி வந்தவர்கள்கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாமல் தவித்தார்கள்.

அந்த சூழ்நிலையில்தான் வலிமையான எதிரியை வீழ்த்த வலுவில்லாத எதிரிகள் ஒன்றுசேர வேண்டும் என்ற பழமையான தத்துவத்தை நினைவுபடுத்தி ஒன்றுக்கொன்று எந்தவித சம்பந்தமும் இல்லாத கட்சிகளை எல்லாம் ஒரே குடையின்கீழ் கட்டிப்போடும் வேலையில் இறங்கினார்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் பழம் தின்று கொட்டையும் தின்று ஜீரணித்த பெரும்புள்ளிகள். அதற்காக அவர்கள் ஓய்வுக்கால வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து தீவிர அரசியல் சேற்றில் மீண்டும் கால்பதித்தார்கள்.

தமிழகத்தில் அன்று தொடங்கிய கூட்டணி அரசியல் ஒவ்வொரு மாநிலமாக பரவியிருக்க வேண்டியதுதான் நியாயம். ஆனால் பரவவில்லை. ஒரு எமர்ஜென்சியும் அதனால் கட்டவிழ்த்து விடப்பட்ட அதிகார வர்க்கமும் அதன் அத்துமீறல்களும் அதற்கு எதிராக புறப்பட்ட அஹிம்சைவாதிகள் வெளிப்படையாக விடுத்த அராஜகத்துக்கான அறைகூவலும் நாடு அதுவரை சந்தித்திராத குழப்பத்துக்கு இடமளித்து, மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டாக காரணமானது. கட்சியின் பெயர் ஜனதா என்றாலும் உண்மையில் அது ஒரு கூட்டணியின் முகமூடி.

பிராந்தியக் கட்சிகள் என தவறாக அழைக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் ஆழமாக வேர்விடத் தொடங்கிய காலகட்டம் அது. பிரதமர் ஒருவரும், பிரதமர் ஆகவிருந்த ஒருவரும் கொலை செய்யப்பட்டதால் மக்கள் மனதில் எழுந்த ஆத்திர, அனுதாப உணர்வுகளால் விழுந்த வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு எதிரான போக்கு நீடித்ததையே காணலாம்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுகால சுழற்சிக்கு பிறகு புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்திருக்கிறது அரசியல் சக்கரம். இந்திய வரலாற்றில் இது அழுத்தமான எழுத்துக்களில் பதிவாகும் அத்தியாயம். அந்த மாற்றத்தின் முகமாக நரேந்திர மோடி தெரிகிறார். என்றாலும் அவரது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் ஒருசில பத்திகளில் முடித்துவிடக்கூடிய துணுக்குகள் அல்ல.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal -9

ஒரு பந்தயத்தில் வெற்றி பெறுவது இரண்டு வகையில் நடக்கலாம். எதிரியை விட பலமடங்கு ஆற்றலை பெருக்கிக் கொண்டு களத்தில் இறங்குவது ஒன்று. எதிரியின் பலவீனங்களை துல்லியமாக புரிந்து கொண்டு அவன் தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவது இன்னொன்று.

முதலாவதில் நேர்த்தியான திட்டமிடல், கடும் உழைப்பு, விடாமுயற்சி இருக்கும். இரண்டாவதில் திட்டமிட்ட உழைப்புடன் சூட்சுமம், சூழ்ச்சி அதிகம் கலந்திருக்கும். 'ஹார்ட் ஒர்க் வெர்சஸ் ஸ்மார்ட் ஒர்க்'. எப்படிக் கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான். அதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் ஒரு வெற்றியோடு நின்றுவிட மாட்டார்கள்.

மோடி அந்த ரகம்.

காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ச்சியாக பத்தாண்டுகள் அடுக்கடுக்காக செய்த தவறுகளால் அதன் நல்ல திட்டங்களுக்கும் மக்கள் நன்றி சொல்ல விரும்பாத கட்டம்வரை காத்திருந்தார். அதுவரை சொந்த மாநிலத்திலும் கட்சியிலும் மட்டும் தன் நிலையை பலப்படுத்திக் கொண்டே வந்தார். தேர்தல் தேதி நெருங்கியதும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பலவீனமான எதிரிகளைப் பந்தாடி கோப்பையை வென்றார். மத்தியில் ஆட்சியைப் பிடித்த கையோடு அடுத்தடுத்து வந்த மாநில தேர்தல்களில் அமித் ஷா என்ற தளபதியை ஏவி வெற்றிகளை வசமாக்கினார்.

நாடாளுமன்றத்தின் மேலவையில் பெரும்பான்மை இல்லாதவரை அதிரடியான சட்ட திட்டங்கள் எதையும் மோடியால் நிறைவேற்ற முடியாது. மாநிலங்களை கைப்பற்றினால் மட்டுமே மாநிலங்களவையில் பெரும்பான்மை சாத்தியம். அந்த இலக்கை நோக்கி அவர் வேகமாக பயணிக்கிறார். குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் தவிர இப்போது கோவா, ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகியவையும் பிஜேபி கைக்கு வந்துவிட்டன. வடக்கே ஜம்மு காஷ்மீர், கிழக்கே மேற்கு வங்காளம், தெற்கே தமிழ்நாடு இன்றைய தேதியில் அவரது குறி.

இம்மூன்று மாநிலங்களிலும் சாதகமான அரசியல் வானிலை நிலவுவதாக அமித் ஷா கணிக்கிறார். அதாவது ஆளுங்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் எங்கெல்லாம் பலவீனப்பட்டு நிற்கிறதோ அவை பிஜேபிக்கு சாதகமான போர்க்களங்கள். மத்திய அரசு என்ற அசுரன் மூலம் அக்கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தவும் சொந்தக் கட்சிக்கு அடையாளம் கொடுக்க சில முகங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரவும் பிஜேபி மேலிடத்தில் திட்டங்கள் தயாராகி விட்டன.

அந்தக் கட்சியின் சார்பில் 122 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைப்பார்களா என்று சிலர் கேலியாக கேட்கின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 122 பேர் விண்ணப்பம் கொடுத்து முட்டி மோதும் கட்சிகளின் தலைமையைக் கேட்டால் தெரியும் உண்மையில் அது பிஜேபியின் பலம் என்று. இருப்பதை சரி செய்வதைக் காட்டிலும் புதிதாக உருவாக்குவது சுலபம் என்பது அவர்களுக்கு தெரியும்.

உறுப்பினர் சேர்ப்பு இனிதான் தொடங்கப் போகிறார்கள். பெயர் கெடாத, அராஜகம் செய்யாத, நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவராக தொகுதிக்கு 2 அல்லது 3 நல்லவர்களை தேர்வு செய்ய நிறைய அவகாசம் இருக்கிறது. யாரும் எந்த பதவியும் வகித்ததில்லை என்பதால் ஊழல் செய்தார் என்ற விமர்சனம் எழாது. இவர்தான் வேட்பாளராக வரக்கூடியவர் என்று இப்போதிருந்தே அவர்களை முன்னிறுத்தி செயல்பட்டால் மக்கள் நினைவில் பெயர்களைப் பதிக்க முடியும்.

உத்தர பிரதேசத்திலும் பிகாரிலும் கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் இருந்தாலும் மேற்கூறிய ஃபார்முலா படி புதுக்கட்சி மாதிரியே இயங்குமாறு அமித் ஷா கூறியிருக்கிறாராம். அதே போல திராவிட கட்சிகளின் ஸ்டைலுக்கு பழகிப்போன தமிழ்நாட்டுக்கு சரிப்படாத சில விஷயங்களை பிஜேபி தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அட்வைஸ் கூறியிருக்கிறார்.

தமிழிசை அந்த ரகசியத்தை வெளியே விடவில்லை. ஆனாலும் வெளிப்படையாக சில விஷயங்கள் தெரிகிறது. கட்சிக் கொடியின் நிறத்தை மாற்ற முடியாது என்றாலும், காவி வேட்டி அணிவதையாவது பிஜேபியினர் தவிர்க்கலாம். தமிழ்நாட்டை பொருத்தவரை காவி என்றால் சாமியார் என்று அர்த்தம். சாமியார் என்றால் கெட்டவன் என்று அர்த்தம் வருமாறு சில ஆசாமிகள் நடந்ததால் காவியின் பெயரும் சீரழிந்து போனது.

சாமி ஊர்வலம், கோயில் விழா, இந்து பண்டிகை போன்ற விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதும் தமிழகத்தில் அவுட் ஆஃப் பேஷன். ஆன்மிக, மத நம்பிக்கைகள் உள்ள பெருவாரியான மக்கள் அதை முரட்டுத்தனமாக வெளிப்படுத்துவதை ரசிக்கவில்லை. சமஸ்கிருதம், இந்தி திணிப்பு வேலைகளும் இங்கே அன்பாப்புலர்.

மற்றபடி மாநிலங்கள் இடையிலான பிரச்னைகள், இலங்கை பிரச்னை போன்றவற்றில் தேசியக் கட்சி என்ற அடிப்படையில் பிஜேபி தமிழகக் கட்சிகளுக்கு முரணான நிலைப்பாடு எடுப்பதானால் வளவளா கொழகொழா இல்லாமல் நேர்மையாக அதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஒட்டுமொத்த நாட்டு நலனைவிட எங்கள் விருப்பு வெறுப்பு முக்கியம் என்று வம்புக்கு வாதாடும் அளவுக்கு தமிழக மக்கள் குறுகிய பார்வை கொண்டவர்கள் அல்ல. இந்த விஷயத்தில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசும், பொதுப்பார்வை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட குழப்பமான கோஷங்களையே எழுப்புகின்றன. அல்லது இரட்டை முகம் காட்டுகின்றன. பிஜேபி அந்த தவறை செய்யக்கூடாது என்று புதிய வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் ஆதரவு இருந்ததால்தான் திராவிடக் கட்சிகள் விசுவரூபம் எடுக்க முடிந்தது. 47 ஆண்டுகளாக இரு கட்சிகளும்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன. ஆனால் ஆதரவு அளித்த மக்களை இரு கட்சிகளுமே கைவிட்டு விட்டன. நாட்டில் எங்கே யார் என்ன ஊழல் செய்ததாக செய்தி வந்தாலும் 'என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். நம்மாட்களை விடவா?' என்று கேட்கும் நிலைக்கு தமிழனை கொண்டு சேர்த்த பெருமை இருவருக்கும் சேரும். ஒன்று குடும்பத்தின் கையிலும் இன்னொன்று கும்பலின் கையிலும் சிக்கியிருக்கும்வரை இந்த நிலைமை மாறாது.

ஜனநாயக கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துவதில் இரு கட்சிகளும் வெற்றி பெற்றன. இன்னமும் நல்ல சாலைகள் இல்லை, குடிநீருக்கும் மின்சாரத்துக்கும் அல்லாடுகிறோம், பிரசவ ஆஸ்பத்திரி தொடங்கி சுடுகாடு வரை லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. நேர்மையாக வாழ்வதற்கே நெருக்கடி. பேரவைகள், மாமன்றங்களில் மல்லுக்கட்டும் குண்டுக்கட்டும் மட்டுமே அரங்கேறுகின்றன. மழை பெய்தால் ஊரே மிதக்கிறது. நோய்கள் பரவி மக்கள் மடிந்தால் இயற்கைச் சாவு என்கிறது உள்ளாட்சி நிர்வாகம்.
ஒவ்வொரு பிரச்னைக்கும் நீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டியிருக்கிறது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை.

ஊடகங்களோ பங்குச்சந்தை பங்காளிகளுக்காகவும் பொழுதுபோக்கு போராளிகளுக்காகவும் நேரத்தையும் பக்கத்தையும் நிரப்புகின்றன. நான்கு பெருந்தூண்களும் சிதிலமாகி நிற்கின்ற சூழலில் காக்கிச் சட்டையைக் கண்டாலே உடல் பதறும் சராசரி மனிதர்கள், சட்டங்களை மதித்து நடக்கும் அப்பாவி அந்நியன்கள் என்ன செய்வார்கள், எங்கே போவார்கள்?

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு தேசியக் கட்சியிடம் திரும்பவும் சரணாகதி அடைவதுதான் என்று சொல்ல வரவில்லை. உள்நாட்டுப் போர், எல்லை யுத்தம், இறக்குமதி பயங்கரவாதம் போன்ற எதுவும் தெரியாமல் வளர்ந்த அப்பாவிகள் கூட்டம் இது. சொல்வித்தை மட்டுமே தெரிந்ததால் ஓயாமல் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து காலத்தை ஓட்டும் அறிவாளிகள் மந்தை இது. பார்த்துப் பார்த்து சலித்து வெறுத்தாலும் பாவப்பட்ட இந்த ஜனங்களுக்கு மாவோ பாதையிலோ நக்சலைட் சாலையிலோ நடக்க இஷ்டமில்லை.

டெல்லியில் இருந்து அரசாளும் உங்களுக்கு எங்கள் கஷ்டங்கள் தெரியாது என்று சொல்லி மாநிலக் கட்சியை ஆட்சியில் அமர வைத்தனர். இதைவிட அதுவே மேலென்ற எண்ணத்தில் மீண்டும் தேசியக் கட்சியை ஆதரித்தால் அது இந்த மக்களின் குற்றம் அல்ல. இந்திய மக்களாட்சியில் இவர்களுக்கு வேறு வழி இல்லை.

English summary
The 9th chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal analyses the possibilities of BJP's emergence as ruling party in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X