For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப்பறக்கும் காக்கைகள்- 18: தேவையா இந்த மல்லுக்கட்டு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

- கதிர்

இலங்கை, காவிரி, இந்தி, முல்லை பெரியார்... இந்த பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விட்டால் உங்கள் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்று டெல்லியில் இருந்து சென்ற வாரம் சென்னை வந்திருந்த ஒரு தலைவர் எகத்தாளமாக கேட்டார்.

பலரது முன்னிலையில் அவருடைய ஈகோவை பஞ்சராக்க மனமில்லாததால் பதிலேதும் சொல்லவில்லை. நேற்று பொங்கல் வாழ்த்து சொல்ல போனில் வந்தவர், சம்பிரதாயங்கள் முடித்தபின் கேட்டார், ஜல்லிக்கட்டு என்ன மேட்டர் என்று.

சென்ற வாரம் அவர் எழுப்பிய கேள்வியை நினைவுபடுத்தி, அப்போது சொல்லாத பதிலை சொன்னேன். தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.
என்ன ஆயிற்று மோடி அரசுக்கு என்பது புரியவில்லை. மத நம்பிக்கைகளை மற்றவர்கள் மதிக்க வேண்டும்; தவறினால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதன் அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் பகிரங்கமாக கூறுகிறார்கள்.

அதில் நமக்கு சண்டையில்லை. ஆனால்.. நம்பிக்கைகள் மதத்துக்கு மட்டும்தான் பொருந்துமா, என்ன? இனம், மொழி, வம்சாவளி, பிரதேசம் சார்ந்த நம்பிக்கைகளும் ஏராளம் இருக்கின்றன. பண்பாட்டு அடையாளங்கள் என்ற பொதுப்பெயரில் அடங்கிய பழக்க வழக்கங்கள் அவை.

ஜல்லிக்கட்டு அத்தகைய ஓர் அடையாளம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal Part 18

காலப்போக்கில் பல அடையாளங்கள் தொலைந்து போயின. பல அடையாளங்கள் நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாதவை எனக்கருதி தலைமுழுகப்பட்டன. இன்னும் சில பரவலாக பின்பற்றப்பட்டது மாறி சில பகுதிகளுக்குள் சுருங்கின. ஜல்லிக்கட்டு அந்த ரகம்.

ஜல்லி என்பது சல்லி எனும் சொல்லின் மருவல் என்கிறார்கள். சல்லிக்காசு தர மாட்டேன் என்ற வசனம் தெரியும்தானே. அந்த சல்லி ஜல்லியாகி, துணியில் பொட்டலமாக கட்டி, காளையின் இரு கொம்புகளுக்கு நடுவே பரிசாக பொருத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு என்ற பெயர் வந்ததாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அலங்காநல்லூர் முதலான சில கிராமப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு பாரம்பரியம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது. தொழுமாடு என்ற பெயரில் அந்த பகுதியில் இதற்கென விசேஷ ரக காளைகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஏர் உழவு, வண்டி கட்டுவது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவது இல்லை. ஒவ்வொரு பெரிய கோயிலை ஒட்டியும் உள்ள மேட்டு நிலப்பகுதி இந்த விளையாட்டுக்கென பராமரிக்கப்படுகிறது.

தை 3ம் நாள் அதில் அடைப்பு வேலியிட்டு, சிறிய வாசல் அமைக்கப்படும். வாடிவாசல் என்பார்கள். அது திறக்கப்பட்டதும் சீற்றத்துடன் வெளியேறி வரும் காளைகள் மீது வாலிபர்கள் பாய்ந்து கொம்புகளை கைப்பற்றுவார்கள். திமிறியோடும் காளை மீதிருந்து பிடியை விடாமல் குறிப்பிட்ட தூரம் வரை தாக்குப்பிடிப்பவன் வீரனாக அறிவிக்கப்பட்டு பரிசுக்குரியவன் ஆகிறான்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal Part 18

பல விளையாட்டுகள் காலப்போக்கில் கடுமையான போட்டியாக மாறி, கூட்டமும் வருமானமும் அதிகரித்ததால் தில்லுமுல்லு நடக்க இடமளித்ததை பார்த்தோம். மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒன்டே மேட்ச்களிலும் கோல்மால் நடக்கும்போது ஜல்லிக்கட்டு மட்டும் தப்ப முடியாதுதான்.

வீரர்களுக்கு ஊக்க மருந்து ஏற்றுவது போல காளைகளுக்கு சாராயம் கொடுப்பது, பட்டினி போட்டு வெறியேற்றுவது, ஓவர் சத்தம் மூலம் பயமுறுத்தி டென்ஷனாக்குவது எல்லாம் இதிலும் நடந்தன. ஒரு வீர விளையாட்டு ஊர் பிரமுகர்களின் ஜம்பத்துக்கு தீனியளிக்கும் சண்டைக்களமாக மாறியது. விளைவாக இருதரப்பு காளைகளும் காயம் அடைவதும், சந்தர்ப்பங்களில் பலியாவதும் செய்தியானது.

விலங்கு வதை தடுப்பு ஆர்வலர்கள் தலை நுழைத்தது அப்போதுதான். சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி, பல முறைகேடுகள் நடப்பதை ஊர்ஜிதம் செய்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal Part 18

இதன் பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மன்றாடி அனுமதி பெற்று போட்டியை அனுமதிப்பது வழக்கமானது. மக்கள் முதல்வர் ஆர்வமாக இல்லாததாலோ என்னவோ இம்முறை அதுவும் நடக்கவில்லை.
தமிழகம் ஜல்லிக்கட்டுக்காக உரக்க குரல் கொடுக்கும்போது பிஜேபி தர்மசங்கடமாக பார்க்கிறது. அக்கட்சியின் தமிழபிமானி தருண் விஜய் ஜல்லிக்கட்டை ஆதரித்து அறிக்கை விடுகிறார். தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு வருவதை இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று தலைவர்கள் எச்சரிக்கின்றனர். வேட்டிக்கு பிறகு இவர்களை ஒன்று சேர்த்த பெருமை காளையை சேரும்.

இந்த விவகாரத்தில் பொதிந்துள்ள போலித்தனம் அசாதாரணமானது. காளைகளை சித்ரவதை செய்வது சட்டப்படி தப்பு என்கிறார்கள். காளை என்ன, எந்த விலங்கையுமே கொடுமைக்கு இலக்காக்க கூடாதுதான். மனிதாபிமானம் மட்டுமல்ல, சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் என்ன நடக்கிறது?

மாடுகளை வெயில் மழை பாதுகாப்பின்றி, பட்டினியாக நிற்கவைத்து, லாரிகளில் நெருக்கமாக அடைத்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கொலைக்களத்தில் கொண்டு விடுகிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் இந்த லாரிகளை தினந்தோறும் பொதுமக்கள் பார்க்கிறார்கள். போலீசுக்கும் விலங்கு வதை தடுப்பு அமைப்புகளுக்கும் மட்டும்தான் தெரிவதில்லையா?

கோழிகளையும் ஆடுகளையும் குப்பைகளை போல் அடைத்தும் தலைகீழாக தொங்கவிட்டும் வாயைக் கட்டியும் பள்ளி செல்லும் குழந்தைகள் பதைப்புடன் பார்க்க கூண்டுவண்டிகளில் ஏற்றிச் செல்லும் கொடுமை யாருக்கும் தெரியாதா?

ஆயிரக்கணக்கில் ஆடு மாடுகளை வரிசையில் கட்டிப்போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு மாலையிட்டு தலை அறுத்து திருவிழா பலி கொடுப்பது நடக்கவில்லையா?
தந்தத்துக்காக யானைகள், கொம்புக்காக மான்கள், லேகியத்துக்காக குரங்குகள், சூப்புக்காக பாம்புகள், வீரிய மருந்துக்காக ஆமைகள் என்று மனிதனின் ஆசைகளை நிறைவேற்ற ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுவது மட்டும் தப்பில்லையா?

மனிதனை மனிதன் கொலை செய்வதையே தடுக்க இயலாத அரசும் சட்டமும் அமைப்புகளும் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பாரம்பரிய விளையாட்டை விலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தை சாக்கிட்டு தடுக்க முயல்வது முரண்பாடாக தெரியவில்லையா?

பரிசுக்கும் புகழுக்கும் ஆசைப்படும் வாலிபர்கள் நன்றாக தெரிந்துதான் உயிரை பணயம் வைத்து காளையை அடக்க களம் இறங்குகிறார்கள்.

எங்கே படித்தார், எப்படி பாஸானார் என்று தெரியாத டாக்டரை நம்பி உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் அனுமதி பத்திரத்தில் நோயாளிகள் கையெழுத்திடுகிறார்கள்.
பயிற்சி பெற்று லைசன்ஸ் வாங்கினாரா, பணம் கொடுத்து வேலையில் சேர்ந்தாரா என்று தெரியாமலே டிக்கெட் வாங்கி பஸ்ஸில் அமர்கிறார்கள் பயணிகள்.

நல்ல சரக்கா போலியா என்று தெரியாமலே அச்சிட்ட விலைக்கு மேல் கொடுத்து வாங்கி அடிக்கிறார்கள் குடிமக்கள். இப்படி அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் ஆபத்துக்கள் கொஞ்சமல்ல.

அந்த ரிஸ்கையெல்லாம் விட அருகிலிருந்தே கவனித்து வளர்த்த காளையின் தாக்குதலை எதிர்கொள்ளும் ரிஸ்க் பெரிதில்லை என்று சில இளைஞர்கள் தீர்மானித்தால் அவர்களுக்கு மடையர்கள் என்று முத்திரை குத்த யாருக்கு அதிகாரம்?

மனிதாபிமானம், விலங்காபிமானம் எல்லாம் சட்டத்தால் எழுப்பப்படும் கட்டடங்கள் அல்ல. பண்பாட்டு பாரம்பரியத்தில் ஐக்கியமான இயல்புகள். அதில் தலையிட்டு தண்டோரா போடுவதைக் காட்டிலும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் அரசுக்கும் கோர்ட்டுக்கும் ஆயிரம் இருக்கின்றன.

English summary
The 18th part of Kathir's Thaazha Parakkum Kaakkaigal analysing ban on jallikattu, the bull fighting festival of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X