For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் 15 - காஷ்மீர்... பிஜேபியின் பரிசோதனைக் கூடம்

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் என்பது கருத்து கணிப்புகள் சொல்வதற்கு முன்பே தெரிந்த விஷயம்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவும்கூட எதிர்பாராத ஒன்றல்ல. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஓட்டுப்பதிவு நாளில் நடத்தப்பட்ட ஊடக ஆய்வுகள் ஏற்கனவே தெரிவித்தன. மாநிலத்தின் பெரிய கட்சிகளான தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகம் ஆகிய கட்சிகளை பின்னால் தள்ளி பிஜேபி தனிப்பெரும் கட்சியாக தலைதூக்கும் என்றுகூட சில கணிப்புகள் கூறின. அதாவது மொத்தமுள்ள 87 இடங்களில் 44ஐக் கைப்பற்றி பிஜேபி பெரும்பான்மை பெறும் என அமித் ஷா சொன்னதை அவை எதிரொலித்தன. அவ்வாறு நடக்கவில்லை.

அக்கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 23 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது பெரும் சாதனை என்றும், அதன் காரணமாக அங்கு ஆட்சி அமைப்பதற்கான உரிமை பிஜேபிக்கு ஆட்டோமேடிக்காக கிடைத்துவிட்டது என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறார். அவர் விவரம் தெரியாதவர் அல்ல. ஆகவே ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். எப்படி?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 3 பிராந்தியங்களை உள்ளடக்கியது. முதலாவது காஷ்மீர் பள்ளத்தாக்கு. வேலி என சுருக்கமாக சொல்வார்கள். இங்கு வாழ்பவர்களில் 97 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 46 தொகுதிகள் இதில் வருகின்றன. ஒரு தொகுதியில்கூட பிஜேபி ஜெயிக்கவில்லை. இத்தனைக்கும் அந்த கட்சி 31 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியது.

Thaazha Parakkum Kaakkaigal 15- JK poll results: A test lab for BJP

புத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அதிகம் வாழும் லடாக் பிராந்தியத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஒன்றுகூட பிஜேபிக்கு கிட்டவில்லை. கார்கில் தொகுதி இங்குதான் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்திருப்பது நல்லது என நம்புபவர்கள். இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு வேலி மக்களில் பலர் உடந்தையாக இருப்பதால் தங்களுக்கு தேவையில்லாமல் தொல்லை ஏற்படுவதாக கருதுகின்றனர். உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையம் அமைந்துள்ள லே தொகுதியும் இதில் அடங்கியது.

மாநிலத்தில் தென்பகுதியில் உள்ள ஜம்மு பிராந்தியத்தில் மட்டுமே பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. 25 தொகுதிகளும் இங்கு கிடைத்தவை. இது இந்துக்கள் மெஜாரிடியாக வாழும் பகுதி. 66 சதவீதம் இந்துக்கள். 30 சதவீதம் முஸ்லிம்கள். 4 சதம் சீக்கியர்கள். இந்த முஸ்லிம்கள் காஷ்மீர் வேலியில் வாழும் ஒரிஜினல் காஷ்மீரி முஸ்லிம்களில் இருந்து மாறுபட்டவர்கள். உருது பேசுவதில்லை. டோக்ரி மொழி பேசுபவர்கள். பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை.

அவர்களில் ஒருவர் அப்துல் கனி கோஹ்லி. பிஜேபி தரப்பில் வெற்றி பெற்ற ஒரே முஸ்லிம் வேட்பாளர். ரஜூரி மாவட்ட்த்தின் காலாகோடே தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ரஷ்பால் சிங் என்பவரை 6000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் முக்கியமான இந்து பிரமுகர் இந்த ரஷ்பால் சிங். காங்கிரஸ், பிடிபி கட்சிகள் 3வது 4வது இட்த்துக்கு தள்ளப்பட்டன. 1972ல் ஜம்மு கிழக்கு தொகுதியில் ஷேக் அப்துல் ரஹ்மான் என்ற பாரதிய ஜனசங்க வேட்பாளர் வெற்றி பெற்றார். 42 ஆண்டுகளுக்கு பிறகு பிஜேபிக்கு கிடைத்த முஸ்லிம் எம்.எல்.ஏ இவர்.

Thaazha Parakkum Kaakkaigal 15- JK poll results: A test lab for BJP

சென்ற தேர்தலில் பிஜேபிக்கு 11 இடங்கள் கிடைத்தன. இப்போது 25 ஆக உயர்ந்துள்ளது. இரு மடங்குக்கு மேல். ஓட்டு சதவீதமும் 12ல் இருந்து 23 ஆக அதிகரித்திருப்பது நிச்சயம் வளர்ச்சிதான். ஆனால் இந்துக்களின் ஓட்டுகளை மட்டுமே பெற்று, முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக வாழும் மாநிலத்தை ஆட்சி செய்யும் உரிமை ஆட்டோமேடிக்காக பிஜேபிக்கு கிடைத்துவிட்டதாக கூறுவது கட்சித்தலைவரான அமித்ஷாவுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இந்தியாவின் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் அறிவுஜீவியான அருண் ஜெட்லிக்கு உகந்த வாதம் அல்ல.

பிஜேபி ஆட்சிக்கு வரக் கூடாது என்று காஷ்மீர் முஸ்லிம்கள் நினைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில் அது எதிரொலிக்கிறது. ஏன் அவ்வாறு நினைத்தார்கள்? 2 முக்கியமான விஷயங்களில் பிஜேபியின் நிலைப்பாடு அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ஒன்று, இந்திய அரசியல் சாசனத்தின் ஆர்டிகிள் 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கியிருக்கும் தனி அந்தஸ்து. இரண்டாவது, அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ள ராணுவம் மற்றும் மத்திய படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம்.

தனி அந்தஸ்து பல மாநிலங்களுக்கு வெவ்வேறு விஷயங்களில் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கியிருக்கும் அந்தஸ்து அதையெல்லாம்விட விசேஷமானது. அங்குள்ள சட்டசபைக்கு கூடுதலான சுய அதிகாரங்கள் உண்டு. அதன் ஆயுள் 6 ஆண்டுகள். மத்திய அரசு நாட்டில் எமெர்ஜென்சி அறிவித்தால் ஜம்மு காஷ்மீர் அரசு அங்கே இது செல்லாது என அறிவிக்க முடியும். மற்ற மாநில மக்கள் அங்கே வீடு வாசல் வாங்க முடியாது. ஜம்மு காஷ்மீர் பிரஜை, இந்திய பிரஜை என அங்குள்ள மக்களுக்கு இரண்டு குடியுரிமை உண்டு. இதெல்லாம் ஆர்டிகிள் 370 வழங்கும் சிறப்பு சலுகைகள்.

Thaazha Parakkum Kaakkaigal 15- JK poll results: A test lab for BJP

இந்த பாகுபாடு இருப்பதால் காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உணர்வே யாருக்கும் வராது; பிரிவினைவாதமும் அதற்கான வன்முறை போராட்டமும் ஓயாது; எனவே ஆர்டிகிள் 370ஐ நீக்க வேண்டும் என்பது பிஜேபியின் நீண்டநாள் கோரிக்கை. அங்கு வாழும் மக்கள் - முஸ்லிம்கள்தானே மெஜாரிடி - 370 ரத்தானால் தங்கள் தனித்துவம், கலாசார அடையாளங்கள் தொலைந்து போகும்; நிலமும் நீரும்கூட சொந்தமில்லாமல் போகும் என அஞ்சுகிறார்கள்.

காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் அந்த மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும்போது பல நிபந்தனைகளை விதித்தார். இந்திய அரசு அவற்றை ஏற்றுக் கொண்டது. பாகிஸ்தான் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது, காஷ்மீர் யாருக்கு என்பதை அங்குள்ள மக்கள் முடிவு செய்ய வசதியாக ஓட்டெடுப்பு நடத்தும் தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேறியது, சீனா நம் மீது படையெடுக்க தயாரானது... என்று நாலாபக்கமும் சிக்கல்கள் உருவான சூழ்நிலையில் அன்றைய பிரதமர் நேருவும் காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் குழந்தைதான் ஆர்டிகிள் 370.

எப்படியாவது காஷ்மீரின் முடிசூடா மன்னன் ஆக வேண்டும் என்பது அப்துல்லாவின் ஆசை. எப்படியாவது காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்திருந்தால் போதும் என்பது நேருவின் ஆசை. காலப்போக்கில் அந்த மக்களே 370 வேண்டாம் எனக்கூறி நிபந்தனையற்று இந்தியாவுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்று நேரு நம்பினார். படேல் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் யாரும் நம்பவில்லை. நேரு சுகமான கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ரொமான்டிக் என்பதும், பதவி ஆசை பிடித்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் அரசியல் சாசனத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.

Thaazha Parakkum Kaakkaigal 15- JK poll results: A test lab for BJP

67 ஆண்டுகளாக அதுதான் நடக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னால் நடந்த நிகழ்வு ஒன்றை பார்த்தால் புரியும். 1920களீன் கடைசியில் அப்துல்லா தேச துரோக குற்றம் இழைப்பதாக மகாராஜா அவரை கைது செய்தார். நேரு தன் தோழன் அப்துல்லாவுக்காக வழக்கில் ஆஜராக சென்றார். மகாராஜா அவரை காஷ்மீர் எல்லைக்குள் வரவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினார். சுதந்திரம் அடைந்ததும் நேரு மூலம் மகாராஜாவை வீழ்த்தி காஷ்மீரின் பிரதமராக - ஆமாம், அதுதான் அவரே சூட்டிய பெயர் - பதவியேற்ற அப்துல்லா, தன் வித்தையை காட்ட அதிக தாமதம் செய்யவில்லை. விளைவு? தேச துரோக குற்றம் சாட்டி அப்துல்லாவை சிறையில் அடைத்தார் நேரு. இப்படி சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி நண்பர்கள் எதிரியாவதும், எதிரிகள் நட்பாவதும் காஷ்மீர் அரசியலின் அடிப்படை விதியாக அன்றே எழுதப்பட்டது.

1962ல் நடந்த சட்டசபை தேர்தலில் அப்போது மொத்தமுள்ள 75 தொகுதிகளில் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி 70 இடங்களை பிடித்தது. 67ல் காங்கிரஸ் 61 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தது. தேசிய மாநாடுக்கு 8 தான் கிடைத்தது. முதல் முறையாக களமிறங்கிய பாரதிய ஜன சங்(கம்) 29 இடங்களில் நின்று மூன்றில் வென்றது. 72 தேர்தலிலும் காங்கிரஸ் 58 தொகுதிகளுடன் ஆட்சியை தக்கவைத்தது. ஜனசங் அதே 3. தேசிய மாநாடுக்கு எதுவுமில்லை. முதல் முறையாக முஸ்லிம் மஜ்லிஸ் 5 இடங்களை பிடித்தது.

எமர்ஜென்சி காலம் முடிந்து 77ல் நடந்த தேர்தலில் தேசிய மாநாடு 47 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 11 இடங்களையே பிடிக்க முடிந்தது. அதைவிட 2 சீட் அதிகம் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தது ஜனதா கட்சி. ஆறாண்டுக்கு பின்னர் நடந்த தேர்தலில் 27 இடங்களில் போட்டியிட்ட பிஜேபியால் ஒரு இடம்கூட வெல்ல முடியவில்லை. 87லும் அது 2 தொகுதிகளையே பிடித்தது. அதுவரையிலும் தேசிய மாநாடு, காங்கிரஸ் ஆகிய இரு பிரதான கட்சிகளும் முஸ்லிம், இந்து ஓட்டுகளை பங்கு போட்டு வந்தன.

1990களில் வன்முறை வெடித்து மாநிலமே கலவர பூமியாக மாறிய பிறகுதான் காங்கிரசுக்கு கிடைத்து வந்த முஸ்லிம் ஓட்டுகளும், தேசிய மாநாடுக்கு கிடைத்து வந்த இந்து ஓட்டுகளும் சரிந்தன. 1996ல் முஸ்லிம் அல்லாதார் ஓட்டுகளை பங்குபோட காங்கிரஸ், பிஜேபி, ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மோத வேண்டியிருந்தது.

அடுத்த 2002 தேர்தலில் முஸ்லிம் ஓட்டுகளை தேசிய மாநாடு கட்சியிடம் இருந்து பிரிக்க மக்கள் ஜனநாயக கட்சி - பிடிபி - வந்தது. தே.மா கட்சியின் பலம் 28 ஆக சரிந்தது. பிடிபி 16 இடங்களை வென்றது. காங்கிரஸ் 20. அப்துல்லா ஆட்சி அமைக்க விரும்பாததால் காங்கிரசும் பிடிபியும் கூட்டணி ஆட்சி அமைத்தன. பிடிபியின் தலைவரும் வாஜ்பாய் அரசின் உள்துறை அமைச்சருமான முப்தி முகமது சயீத் 3 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்புறம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி தரப்பட்டது. 2008ல் காங்கிரஸ் ஆதரவுடன் உமர் அப்துல்லா முதல்வரானார். பிடிபி எதிர்க்கட்சி ஆனது. முப்திக்கு பதில் அவரது மகள் மெஹ்பூபா தலைவரானார்.

இதில் வேடிக்கை என்ன என்றால், மூன்று தேர்தல்களில் தனிப்பெரும் கட்சியாக வென்ற கட்சிக்கு கிடைத்து வரும் இடங்கள் அதே 28. 2002, 2008ல் தேசிய மாநாடு 28. 2014ல் பிடிபி ஸ்கோர் 28. பத்து எம்.எல்.ஏ.க்கள் ஆயிரத்துக்கு குறைவான ஓட்டுகளில் வென்றுள்ளனர். தேசிய மாநாடு கட்சியில்6 பேர். உமர் அப்துல்லாவே 910 ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இன்னொரு தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே இழுபறியை தீர்க்க மறு தேர்தல் நடத்தினாலும் எந்த கட்சிக்கும் எண்ணிக்கை மாறாது. அந்த அளவுக்கு வாக்காளர்கள் மத(கட்சி) ரீதியாக அணி திரண்டு நிற்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல.

அதே சமயம், இரண்டு பிரதான மாநில கட்சிகளும் ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தொடர்வது ஆறுதலான விஷயம். மத சார்பற்ற கட்சி என கூறிக் கொண்டாலும் சிறுபான்மையினர் ஆதரவை இழக்கக் கூடாது என்பதற்காக பெரும்பான்மையினர் நலனுக்கு எதிராகவும் பல நேரங்களில் செயல்பட்டது என்பது காங்கிரஸ் மீது வலதுசாரிகள் வைக்கும் குற்றச்சாட்டு. ஒருவேளை அந்த புகாரில் உண்மை இருக்குமோ என்று மேலிடத்துக்கே இப்போது சந்தேகம் வந்திருக்கிறது. எனவே காஷ்மீரில் இப்போதைக்கு விலகி நிற்கும். மாறாக அங்கு முதல் முறையாக ஆட்சி அமைக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் பிஜேபி தீவிரமாக உள்ளது.

என்.சி அல்லது பிடிபி என யாருடன் கூட்டு சேர்ந்தாலும் அந்தக் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட வழியில்லை. அதே சமயம்,இரு தரப்புமே நெருங்க முடிவதால் ஒருவர் மற்றவரின் நிலைப்பாட்டை துல்லியமாக பார்க்கவும் எடை போடவும் அதனால் தனது நிலையை திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

அது சமரசம்தான். ஆனால் இன்றைய சூழலில் நாட்டுக்கு அவசியமானது.

English summary
The fifteenth Chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal analyzing the results Jammu Kashmir Assembly poll results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X