For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துளசி மாடத்துக் காதல்...விறுவிறு சிறுகதை... (1)

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன். ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன்.

என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள். இனி இதுதான் உன் வீடு இதுவும் உன் பொறுப்புதான் என்று என்னைக் காட்டி யாரும் பொறுப்பு தராத போதும் அன்னை போல் வாரிக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும்.

எப்பப் பாரு கொல்லைப்பக்கமே என்ன வேலை உனக்கு ? எனக்கும் ஆசை இருக்காதா, நான் வீட்டுக்கு வரும் போது நல்லா டிரஸ் பண்ணிகிட்டு என்னை வரவேற்றால் என்ன? அவள் கணவனின் பேச்சுக்கு வெறும் புன்னகை மட்டுமே வெளிவரும், நான் கூட எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன்.

New year special short story

தெய்வீக அழகு அவள், அதிக அடர் இல்லாத வெளிர் நிறத்திலேதான் புடவைகள் அணிவாள் அதற்குத் தகுந்தாற் போல் இரவிக்கை, மஞ்சள் சரடும், ஒற்றைச் சங்கிலியோடு நுனியில் கூந்தலை முடிச்சிட்டு நெற்றி வகிட்டில் குங்குமத்தின் துணையோடு அவளைப் பார்க்கும் போதே கையெடுத்துக் கும்பிடத்தோன்றும் அழகு, அவனோ எப்போதும் அஞ்சு முழம் புடவையைச் சுற்றிக்கொண்டே இருக்கணுமா என்பான். என் பிரண்ட்ஸ் எல்லாம் பொண்டாட்டி கூட அப்படியிருந்தேன் இப்படியிருந்தேன் என்று பீத்திக்குவான் நீ யென்னடான்னா சுத்த ஜடமா இருக்கியே? என்று முகம் திருப்புவான். இதையெல்லாம் கூடவா பேசிக்கொள்வார்கள் நண்பர்களிடம் என்று எனக்கு குமட்டிக்கொண்டு வரும், அவளுக்கும் அதே நிலைதான் போலும், அவன் மேல் வைத்த கையை எடுத்துவிட்டு போவாள்.

இதோ பாரும்மா பிறந்த வீட்டுலே எப்படியிருந்தியோ இனிமே இதுதான் உன் வீடு, நாங்கதான் உன் மனுஷங்க. அதைப் புரிஞ்சிட்டு யாருயாருக்கு என்ன என்ன வேணுமோ அதை சரியான நேரத்திலே செய்யணும் புரிஞ்சுதா?! மாமியாரின் பேச்சுக்கு மறுத்துப் பேசாமல் தலையாட்டினாள். அன்றிலிருந்து அவ்வீட்டிற்கு சம்பளமில்லா வேலைக்காரியாகித்தான் போனாள். அடுக்களைக்கும் கொல்லைப்புறத்திற்கும் அவள் கொலுசின் ஒலியும், மெட்டியொலியும் கேட்டுக் கொண்டே இருக்கும். மாமாவுக்கு தண்ணீர் வெச்சியா ? இட்லி வெந்துட்டா ? ரவிக்கு புளிக்கரைசல் ரொம்ப பிடிக்கும் பண்ணி வைச்சிடு..... எல்லாம் கட்டளைகளாகவே வரும், கணிவு இருக்காது. விரல் விட்டு தேடிவிடலாம் அவள் தனக்கென ஒதுக்கும் தருணங்களை.

படித்திருப்பாள் போலும், அத்திப்பூத்தாற்போல் சில நேரம் அவள் கைகளில் ஏதாவது புத்தகங்கள் முளைத்திருக்கும். என் அருகில் அமர்ந்துதான் புத்தகம் படிப்பாள். மாலை குளிர் வேளையில் வீட்டு ஆட்கள் எல்லாம் தொலைக்காட்சி சீரியலில் முழ்கி இருக்கும்போது அவள் மட்டும் புத்தகத்தோடு ஒரு விளக்கின் வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருந்திருக்கிறாள். காற்றில் ஆடும் அவள் கூந்தலை ஒதுக்கிவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றும் சில நேரம் குறும்பாய் என் இலைகளை அவள் மீது தள்ளவிடுவேன் காற்றை கெஞ்சிக் கூத்தாடி என் தோழமையாக்கிக் கொண்டு, முகத்தில் விழும் இலைகளை அழகாய் ஒதுக்கிவிடுவாள் அது மெத்தென்று அவள் மடியில் போய் சுகமாய் அமரும்.

சில நேரம் வேலையின் அலுப்பில் என் மீது சாய்ந்து கொள்வாள். எவனோ ஒரு கவிஞன் பாடினானே மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் என்று பாடிடத்தோன்றும் எனக்கு! தடிமனான அந்த இலக்கியப் புத்தகத்தின் படித்த பக்கத்தில் ஒரு இலையைக் கிள்ளி நினைவிற்கு வைத்துக்கொண்டு என் தோளோடு சாய்ந்து கொள்ளும் தோழியின் கண்களில் இருந்து வெண்ணீர் முத்துக்கள் போல் நீர் வழிந்தோடும், துடைக்கத் துடிக்கும் என் மெல்லிதழ்களை கட்டுப்படுத்திக்கொள்வேன், அவளுக்கு என்ன கஷ்டம் இருக்கும்? என் பாஷை புரிந்ததோ என்னவோ அவள் என்னிடம் பேசத் துவங்கினாள். ஆஹா என்ன அருமையான குரல் அவளுடையது, நூறு குயிலின் குரலைச் சேர்த்தாற் போல் அத்தனை இனிமை.

New year special short story

காதல், கல்யாணம் என்றதும் பல பெண்களைப் போல் நான் ஒன்றும் கற்பனையில் கனவு கண்டதில்லை, ஆனால் சில எதிர்பார்புகள் இருந்தது. அது எல்லாமே பொய்த்துப்போனதுதான் தாங்கிக்கொள்ள முடியவில்லை, தன் சுமையை இறக்கிவிட்டேன் என்று பிறந்தவீடும், தனக்கொரு புதுச்சுமை என்று புகுந்தவீடும் ஏற்றுக்கொள்ளும் இனம், செடியைக் கூட பிடுங்கி வைக்கும் முன் மண்வளம் பார்ப்பதுண்டு. அது போல் பெண்ணை புகுத்தும் போது மனிதவளம் இருக்கிறதா என்று பார்த்திருக்கலாமே! படித்த பெண்ணாகட்டும், பகுத்தறிவு பேசுபவளாகட்டும் இன்னொரு இடத்தில் அவள் கால் ஊன்றி நிலைப்பதற்கான நேரம் கூட ஒதுக்கப்படுவதில்லை, என்னதான் பெண்ணுரிமை, சுதந்திரம் என்று பேசினாலும் எங்களுக்கு எப்போதும் காலம் விடிவதில்லைதான். அவளின் விரல்கள் வடித்த வரிகள் இவை, எத்தனையோ ஏக்கப்பெரூமூச்சுகளின் சூட்டை நான் உணர்ந்திருக்கிறேன்.

உலைந்த தலையோடும், கசங்கிய உடையோடும், கலைந்த குங்குமத்தோடும் என்னைக் கடந்து போகும் போதெல்லாம் எதையோ இழந்தாற்போன்ற தருணம் அவளில் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் எண்ண ஓட்டம் புரிந்தவளைப்போல் அவள் அன்று இரவு பதிலளிப்பாள். அன்பு, ஆசை என்று எதையும் உணர்த்துவதில்லை அவரின் அணைப்பு, வெறும் காமத்தை மட்டுமே உணர்த்துகிறது காதலை இல்லை. மெல்ல மெல்ல மலர வேண்டிய பெண்மைக்கு நேரம் தராமல் தன்னிலை நிறைந்ததும், தலைசரித்து உறங்கும் அவனை, என்ன செய்யலாம் என்று கூட வெகு நேரம் நான் யோசித்திருக்கிறேன். எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?! ஐந்து பெற்றாளே என் அன்னை அவளும் இப்படியொரு இரவைத்தான் தினம் தினம் தாண்டி வந்திருப்பாளா ?! என்னை மருமகளாய் பார்க்கிறார்கள், அவனின் மனைவியாய் பார்க்கிறார்கள், அவர்கள் இட்ட வேலையைச் செய்யும் சேவகியாய்ப் பார்க்கிறார்கள் மனுஷியாய் மட்டும் பார்ப்பதேயில்லையே ஏன் ?

சுமங்கலி என்ற பட்டத்தை சுமந்து கொண்டு, குடும்ப கெளரவத்திற்கென வலம் வரும் ஒரு அடையாளமாகத்தான் தெரிந்திருக்கிறேன். பெரியதாக அவரிடம் ஏதும் கேட்டுவிடவில்லை நான். இன்று அவரின் அக்காவும் அத்திம்பேரும் வந்திருக்கிறார்கள். நான் செய்த கடலைக் குருமா, சப்பாத்தியை ஒரு பிடி பிடித்துவிட்டு ரமாவின் சமையல் நன்றாய் இருக்கிறது. ரவி நீ கொடுத்து வைத்தவன்தான் என்று ஏதேச்சையாய் பாராட்டிவிட்டார்கள். அதற்கு அவருக்கு வந்தததே கோபம் சமைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா. எந்நேரமும் அழுக்குப் புடவையும் தூக்கிச் சொருவிய கூந்தலுமாய் அடுப்பையே கட்டிக்கொண்டு அழுகிறாள். நாலு எடம் வெளியே போக உடுத்த தெரியலை சரியான நாட்டுப்புறம் என்று குட்டு வைத்தார். அவன் விருப்பப்படிதான் நடந்துக்கோயேன் ரமா என்று காதைகடித்துவிட்டுப் போன நாத்திக்கு தெரியுமா?

புடவையை தொப்புளுக்கு கிழே கட்டச் சொல்வதும், பாதி மார்பு தெரியும்படி தோள்பட்டை முந்தியை சிறியதாக மடித்து பின் பண்ணச் சொல்லுவதும், இவர் வெளியே கூப்பிட்டுப்போகும் இடம் எப்படி இருக்கும் தெரியுமா? நுனிநாக்கு ஆங்கிலத்தோடு அரைக்கால் சட்டையும் அக்குள் தெரியும் படி ஆடையும் போட்டுக்கொண்டு ரவி என்று மேலே வந்து ஈஷிக்கொள்ளும் பெண்களைப்போல் என்னை வெளியே அழைத்துக்கொண்டு போக பிரியப்படுகிறார். தினமும் சக்கரையோடு போட்டிபோடும் மாமியார், வாதம் வந்து படுத்திருக்கும் மாமனார். இவர்களின் உபாதைகளையும், சொற்களையும் தாங்கிக்கொண்டு வேளா வேளைக்கு உணவளித்து மருந்து மாத்திரைகள் தராமல் போய்த்தான் விடமுடியுமா ?! இதெல்லாம் ஏன் இன்னொரு குடும்பத்தில் தன்னைப்போல் வாழ்க்கைப் பட்டுப் போயிருக்கும் அவளுக்குத் தோன்றாமல் போணது துளசி, இல்லை தன் நிலைமைக்கு நான் எவ்வளவோ தேவலை என்று எண்ணிக்கொண்டு விட்டாளோ ?!

ஒரு உணவைக் கூட என் விருப்பப்படி சமைக்கவோ உண்ணவோ முடியவில்லை, சத்தமாய் சிரிக்க முடியவில்லை, ஏன் போன வாரம் அம்மாவும் அப்பாவும் பார்க்க வந்திருந்தார்கள் என்று இரண்டு வார்த்தை சிரித்து பேசிவிட்டேன். உடனே நீ வந்தாத்தான் உன் பொண்ணு சிரிக்கிறா பேசாம அவளை வீட்டுக்கே கூட்டிட்டுப்போயிடு என்று குத்தலாய் பேசினார்களே?! மனதின் எத்தனையோ வெறுமைகளைப் புரிந்துகொள்ளாமல், எனக்கு இது வேண்டும், அது வேண்டும் நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் உனக்கு என்ன வேண்டும், நீ எப்படி இருக்க விரும்புகிறாய் உன்னுடைய எதிர்பார்ப்பு என்ன ? என்றெல்லாம் ஏன் கேட்பது இல்லை, பெண்ணிற்கு சுயம் இருக்காதா ?! துளசி அவள் கேள்விகளுக்கு மிகப்பெரிய பதிலாய் என்னால் மெளனத்தை மட்டும்தான் தர முடிந்தது.

(நாளை தொடரும்)

English summary
Writer Latha Saravanan's short story on the eve of New year 2017. The story revolving around a woman and her inner feeligns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X