For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'யவனச் சேரியும் மதுரைக் காஞ்சியும்' – அமெரிக்காவில் சங்கத் தமிழ் பயிலரங்கம் நடத்தும் வைதேகி

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): அறிஞர்கள் மட்டுமே படித்து வந்த சங்க இலங்கியங்களை சாமானியத் தமிழர்களும் படிக்க வழி செய்யும் வகையில், இரண்டு நாள் பயிலரங்கம், டல்லாஸ் நகரில் நடைபெற்றது.

புரவலர் பால் பாண்டியன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் வைதேகி ஹெர்பர்ட், சங்க இலக்கியங்களை எளிதாக எப்படி கற்று தெரிந்து கொள்வது என்று பயிற்சி அளித்தார்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மற்றும் அவ்வை தமிழ் மையம் ஆகிய மூன்று தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தினார்கள்.. கடுங்குளிர், மழை என்பதையும் பொருட்படுத்தாமல் வார இறுதி நாட்களிலும் சுமார் 70 பேர் வரை இதில் பங்கேற்றனர்.

Sangam Tamil work shop at Dallas

18 நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

பதினெண்மேல் கணக்கு என்றழைக்கப்படும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களையும் வைதேகி ஹெர்பர்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அனைத்து சங்க இலக்கிய நூலகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் நபர் இவர் ஒருவர்தான். தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஆராய்ச்சி பட்டம் ஏதும் பெறாத இவர், தமிழர்களின் வரலாற்றின் மீது கொண்ட ஆர்வத்தினாலேயே, அதைப் படித்து பின் மொழி பெயர்த்துள்ளதாக கூறினார். இத்தனைக்கும் இவர் பள்ளியிலும், கல்லூரியிலும் ஆங்கில மொழியில் பயின்றவர்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

தமிழை இரண்டாம் பாடமாக படித்தவர் என்பதால், மிகவும் சிரமபபட்டுத்தான் தமிழைப் படிக்க முடிந்தது என்றும், சங்க நூல்கள் இன்னும் கடினமாக இருந்தது என்றும் தெரிவித்தார். ஆனாலும் தமிழராக பிறந்து தமிழர் வரலாற்றை முழுமையாக படிக்காமல் விடப்போவதில்லை என்ற வைராக்கியத்துடன் படித்ததாகவும், அதை தமிழர் அல்லாதவர்களுக்குடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகவும் தெரிவித்தார். மேலும் தன்னைப்போல் சாமானியத் தமிழர்களுக்கு, சங்க இலக்கியங்களை எப்படி கற்றுக்கொள்வது என்பதற்காக இந்த பயிலரங்கங்கள் நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

சாதிகள் இல்லாமல் வாழ்ந்த முன்னோடித் தமிழர்கள்

முப்பதுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழ் - ஆங்கில விளக்கத்துடன் படித்து விவரித்தார். முல்லைப் பாட்டு முழுவதையும் பங்கேற்பாளர்கள் அவருடன் இணைந்து படித்து அறிந்தனர். இடையிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர்.

அவற்றுள் முக்கியமானது ‘ சங்க காலத்தில் சாதிகள் இருந்ததா?' என்பதாகும். நம் முன்னோடித் தமிழர்கள் காலத்தில் சாதிகள் என்ற ஒன்றே கிடையாது. வெவேறு தொழில்கள் செய்து வந்த அனைவரும் சமமாகவே வாழ்ந்தனர் என்பது பாடல்கள் மூலம் தெளிவாகிறது என்று வைதேகி எடுத்துரைத்தார். சாதிகளே இல்லையென்றால் தீண்டாமை என்ற கேள்விக்கே இடமில்லை தானே!

யவனச்சேரியும் மதுரைக் காஞ்சியும்

கிரேக்க நாட்டவர்கள் 'பொன்' (தங்கம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதை நினைவு கொள்ள வேண்டும்) கொண்டு வந்து, 'மிளகு' வாங்கிச் சென்ற வரலாறு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

தொடர் வணிகங்களுக்காக தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்த யவனர்கள், கூட்டமாக வசித்த பகுதி 'யவனச்சேரி' என்று அழைக்கப்பட்டுள்ளது. சேரி என்பது மக்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பு என்றே அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது.

மதுரைக் காஞ்சி முழுவதும் மதுரை நகரை சித்தரித்துள்ளது, சங்க காலத்திலேயே மதுரை தூங்கா நகரமாக விளங்கியதும் தெரிய வருகிறது. அதைப் போல் காவிரிப்பூம்பட்டினம் நகரம், துறைமுகம் என அனைத்தும் பட்டினப்பாலை நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நம் முன்னோர்கள் ஏற்றுமதிப் பொருட்களுக்கு சாவடி அமைத்து சுங்கம் வசூலித்திருக்கிறார்கள். இது போன்ற தகவல்களை அந்தந்த பாடல்களை படித்து விவரித்தபோது அனைவருக்கும் சங்க காலத்திற்கே சென்ற வந்த உணர்வும், முன்னோர்கள் பற்றி பெருமிதமும் ஏற்பட்டது

Sangam Tamil work shop at Dallas

சங்கத் தமிழர்கள் சைவமா? அசைவமா?

ஆர்வத்துடன் பங்கேற்ற டல்லாஸ் தமிழர்கள் எழுப்பிய கேள்விகளில் ஒன்று ‘சங்கத் தமிழர்கள் சைவமா அசைவமா? என்பதாகும். இதற்கு பதிலளித்த வைதேகி,, பாடலகளில் மீன், கோழி உள்ளிட்ட மாமிச உணவுகள் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அவரைக்காய், சுரைக்காய், கத்திரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட நாம் இன்றும் உண்ணும் காய்கறிகளையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கெண்டைமீன், அயிரைமீன், வாளைமீன், சுறாமீன் போன்ற பலவகை மீன்களையும் அவர்கள் உணவில் இடம்பெற்றுள்ளன.. முக்கனிகளும் அப்போதே உண்டு என சங்கத் தமிழர்களின் உணவு முறையை பாடல்கள் மேற்கோளுடன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஒரு சங்க காலத் தோட்டம்

அப்போது உள்ள மரங்கள், பூக்கள் பற்றிய விவரங்களை புத்தகத்தில் தனியாக பட்டியலிட்டுள்ளார். குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே 99 வகையான பூக்கள் இடம்பெற்றுள்ளன. சந்தனம், ஆலமரம், ஆத்தி, இலஞ்சி, இலவம் மரங்கள் உட்பட பல்வேறு வகையான மரங்களும் உண்டு. அங்கே வசித்து வந்த பறவைகளையும் பட்டியலிட்டுள்ளார். வைதேகியை தொடர்பு கொண்ட தமிழகத்தின் ஒரு கட்டிட நிறுவனம், அவரது வழிகாட்டுதலுடன், சங்க கால மரங்கள், செடிகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியை, உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மலிவு விலை - இலவச புத்தகங்கள்.

பதினெட்டு நூல்களையும் உள்ளடக்கிய வைதேகியின் ஆங்கில மொழிபெயர்ப்பை பத்து புத்தகங்களாக, அமெரிக்காவில் உள்ள digitalmaxim என்ற புத்தக பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆர்வலருமான பதிப்பாளர் திருமூர்த்தி இந்த புத்தகங்களை அடக்க விலைக்கே வழங்கி வருகிறார். டல்லாஸ் பயிலரங்கத்தில் புத்தகங்கள் அடக்க விலையை விட குறைவான விலையில் கிடைக்க புரவலர் பால்பாண்டியன் ஏற்பாடுகள் செய்து இருந்தார். திருமூர்த்தியும், வைதேகியும் தமிழகத்தின் கல்லூரிகள், நூலகங்கள் போன்றவைகளுக்கு இதுவரையிலும் இருநூறு பிரதிகள் வரை சுமார் இரண்டாயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளனர், நவீன டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடுவதற்கும் பதிப்பாளர் திருமூர்த்தி முயற்சி எடுத்துவருகிறார்.

தமிழ் நாட்டுக்கு வெளியே சங்க இலக்கியம்

நிகழ்ச்சியை வழங்கிய புரவலர் பால்பாண்டியனுக்கு சங்க இலக்கியத்தின் மீது தணியாத காதல் உண்டு. வைதேகியின் மொழிபெயர்ப்பு மூலம் அனைத்து சங்க நூல்களும் ஆங்கிலத்தில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளோம். இது அரும்பெரும் பொக்கிஷமாகும். இதை தமிழர் அல்லாத தென்னிந்திய வட இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதைப் படிப்பதன் மூலம் மற்ற இனத்தவர்களுக்கு தமிழர்களின் தொன்மையான நாகரீக வாழ்க்கை நெறிகள் தெரியவரும், ஒவ்வொரு தமிழரும் ஒரு வேற்று மொழியினருக்காவது இந்த சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்க நூல்களை வழங்க வேண்டும் என்று பால்பாண்டியன் விருப்பம் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த புத்தகங்கள் பரவலாக கிடைக்கச் செய்வதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.

உலகெங்கும் பயிலரங்கங்கள்

டல்லாஸில் நடைபெற்ற பயிலரங்கள் போல் உலகம் முழுவதும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக வைதேகி தெரிவித்தார். இதுவரையிலும் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கூடத்தில் மட்டுமே முடங்கிகிடந்த சங்க இலக்கிய நூல்களை அனைத்து தமிழர்களும் படித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த இன்றளவும் சிறந்த வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும். தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.www.learnsangamtamil.com என்ற இணையத் தளத்தில் அவருடைய அனைத்து புத்தகங்களும் இலவசமாக கிடைக்கின்றன.

தூத்துக்குடியிலிருந்து

தன்னார்வத்துடன் தமிழ்ப்பணி ஆற்றிவரும் வைதேகி ஹெர்பர்ட் தூத்துக்குடி நகரின் பாரம்பரியமிக்க 'ஸ்பின்னிங் மில்' குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை தூத்துக்குடியில் பிரபல கல்வி நிறுவனங்களை நிறுவியவர் ஆவார். அமெரிக்காவில் குடியேறினாலும், தந்தை வழியில் வைதேகியும், தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு பள்ளியை நிறுவியுள்ளார்.

English summary
Vaidegi Herbert, a Tamil laurate from Tuticorin is now teaching Sangam Tamil to US based Tamils through workshops and translating all Sangam Tamil books in to English
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X