For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும் - 22: வியத்நாமில் அவர்களும் ஆப்கனில் இவர்களும்...!

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

அமெரிக்காவிற்கும், சோவியத்திற்குமான பனிப்போர் சில நேரங்களில் வெளிப்படையான போராகவும் வெடித்தது. ஆனால் அப்போர்கள் அவர்களின் நாடுகளில் நடைபெறவில்லை. தங்களின் வலிமையை, தங்களின் நிலங்களில் சோதித்துப் பார்க்க அவர்கள் தயாராக இல்லை. உலகின் வெவ்வேறு நாடுகளைத் தங்களின் போர்க் களங்களாக அவர்கள் ஆக்கிக் கொண்டனர். அதற்குப் பல எழுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம். ஆனாலும், 20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி வரலாற்றில் மறக்க முடியாத போர்கள் இரண்டு. ஒன்று, முப்பது ஆண்டுகள் வியத்நாமில் நடைபெற்ற போர். இன்னொன்று, பத்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானத்தில் நடைபெற்ற போர்.

அமெரிக்க அதிபராக இருந்த கென்னடிக்கு, என்ன காரணத்தாலோ, இந்தியாவில் பெரும் புகழ் கிட்டியது. அவரை ஒரு கதாநாயகனாகவே நம்முடைய தமிழக மக்கள் பார்த்தனர். 60களில் பிறந்த குழந்தைகள் பலருக்கு, இங்கே கென்னடி என்று பெயர் சூட்டப்பட்டது. மிக அழகானவராகவும், மிக நல்லவராகவும் அவர் இங்கே வருணிக்கப்பட்டார். வியத்நாம் போரில் அவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை அறிந்து கொண்டால், அவர் ஒரு ‘அமெரிக்க ராஜீவ் காந்தி' என்பது தெளிவாகத் தெரியும்.

வியத்நாம் போர் 1954ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அப்போது பிரான்சு நாட்டின் காலனி நாடாக அது இருந்தது. பிரான்சை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் அங்கு நடைபெற்றன. அந்த நேரத்தில், பிரான்சுக்கு உதவுவதாகச் சொல்லி, அமெரிக்கா தன் மூக்கை நுழைத்தது. பிறகு பிரான்சை மெதுவாக வெளியேற்றிவிட்டு, தன் பிடிக்குள் அத்தேசத்தைக் கொண்டு வர முயன்றது.

வியத்நாமை ஆக்கிரமிப்பதற்குப் பிரான்சு, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒரே காரணத்தைத்தான் கூறின. வியத்நாமின் வட பகுதியில், பரவிவரும் கம்யூனிச ஆபத்தைத் தடுப்பதற்காகவே நாங்கள் இங்கு வந்து இறங்கியுள்ளோம் என்பதுதான் அந்தக் காரணம்.

வியத்நாம் இரண்டாகப் பிரிந்தது. ஹனாயைத் தலைநகராகக் கொண்டு வடக்கு வியத்நாமும், சைகோனைத் தலைநகராகக் கொண்டு தெற்கு வியத்நாமும் உருவாயின.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், கொரியாவும் இப்படித்தான் வடக்கு, தெற்கு என்று பிரிந்தது. இரண்டு நாடுகளிலும், வடக்குப் பகுதி சோவியத்தின் ஆளுகைக்குள்ளும், தெற்குப் பகுதி அமெரிக்காவின் ஆளுகைக்குள்ளும் வந்து சேர்ந்தன. வடக்கு வியத்நாம், வடகொரியா ஆகிய நாடுகள் கம்யூனிஸ்ட் நாடுகளாகவும், தெற்கு வியத்நாம், தென்கொரியா ஆகிய நாடுகள், கம்யூனிச எதிர்ப்பு நாடுகளாகவும் உருவெடுத்தன.

கம்யூனிசம் மட்டுமின்றி, மத அடிப்படையிலான சிக்கலும் வியத்நாமில் எழுந்தது. தெற்கு வியத்நாமில் கத்தோலிக்கக் கிறித்துவ மதத்தினர் பெரும்பான்மையினராக இருந்தனர். அதனால், வடக்-கு வியத்நாமிலிருந்து 10 இலட்சம் கத்தோலிக்கக் கிறித்துவர்கள், 1956ஆம் ஆண்டு, ‘நாத்திக கம்யூனிசக் கொள்கை'யை எதிர்த்துத் தெற்கு நோக்கி நகர்ந்தனர்.

அப்படி ஒரு மதச் சிக்கலை அங்கு எழுப்பியதும் அமெரிக்காதான். கம்யூனிசம் பரவி விட்டால், மதம் சார்ந்த உரிமைகள் அனைத்தும் நசுக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தைத் திட்டமிட்டு உருவாக்கியது. ஆனால் அதன் விளைவுகளைப் பிற்காலத்தில் தெற்கு வியத்நாம் எதிர்கொண்டது. பௌத்த மதத்தினர், தெற்கிலிருந்து வடக்கிற்குக் கத்தோலிக்கக் கிறித்துவத்தை எதிர்த்துப் புறப்பட்ட காலமும் வந்தது. இப்படி மதமும், அரசியலும் வரலாறு நெடுகப் பின்னிப் பின்னித்தான் கிடக்கின்றன.

தெற்கு வியத்நாம் அதிபர் டயம் (Ngo Dinh Diem)என்பவரை, அமெரிக்க அரசு போற்றிப் புகழ்ந்தது. 1961இல் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த ஜான்சன் (Lyndon B.Johnson), ஆசியாவின் ‘வின்சென்ட் சர்ச்சில்' என்று டயமைப் புகழ்ந்தார். அமெரிக்கா சொல்லும் விதத்தில் எல்லாம் நடந்து கொண்டதற்காகத்தான், தெற்கு வியத்நாம் அதிபருக்கு சர்ச்சில் பட்டம் கிடைத்தது.

ஐசனோவர் காலத்திலேயே வியத்நாமிற்குள் அமெரிக்கா இராணுவம் சென்றுவிட்டது என்றாலும், கென்னடி அதிபராக இருந்தபோதுதான், கூடுதல் படைகள் அங்கு அனுப்பப்பட்டன. அமெரிக்காவின் இராணுவ அதிகாரிகள் மட்டுமே 16,000 பேர் 1960களில் வியத்நாமில் இருந்தனர். அப்படியானால், படையினர் எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க முடியும். ஓர் ஏழை, வேளாண்மை நாடு, பல்லாயிரக்கணக்கான அந்நியப் படையினரால், முப்பது ஆண்டுகள் தாக்குதலுக்கு உள்ளாயிற்று என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

1941ஆம் ஆண்டு, ‘வியத்நாம் மக்கள் படை' என்னும் அமைப்பை உருவாக்கி, பிரான்ஸ் படையை வெற்றி கண்டு, 1945இல் வடக்கு வியத்நாம் அரசை நிறுவியவர் ஹோ சி மின். அவரே அந்நாட்டின் முதல் பிரதமரும், முதல் அதிபரும் ஆவார். அவரைப் போற்றிப் பின்தொடர்ந்த வியத்நாம் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், அமெரிக்க வல்லரசு தடுமாறியது.

வயல் வெளிகளில் தாழப்பறந்த அமெரிக்க விமானங்களை, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த உழவர்கள், தங்களின் கையெறி குண்டுகளால் தகர்த்தனர். களத்தில் போராடிய வடக்கு வியத்நாம் மக்களுக்கு, சோவியத் தன் முழு ஆதரவை வழங்கியிருந்தது. குருஷேவைத் தொடர்ந்து சோவியத் அதிபராகப் பொறுப்பேற்ற பிரஷ்னேவும் (Leonid Brezhnev), வியத்நாம் மக்களின் போராட்டத்தை ஆதரித்தார்.
இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதல் கென்னடி காலத்தில் மிகக் கூடுதலாக இருந்தது. அவர் கொல்லப்படுவதற்கு 20 நாள்களுக்கு முன்பு, தெற்கு வியத்நாம் அதிபரும் சைகோனில் சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற ஜான்சன், வியத்நாமை ஒடுக்குவதில் கென்னடியைப் போலவே செயல்பட்டார். எனினும் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை.

அமெரிக்க அதிபர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். வியத்நாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் மாறவே இல்லை. அடுத்த அதிபர் நிக்சன் காலத்தில் அது மேலும் வலுவடைந்தது. அதிபரின் ஆலோசகர் கிஸ்ஸிங்கர், வியத்நாமை அழிக்கப் பல்வேறு வழிகளை முன்வைத்தார்.

1969இல் ஹோ சி மின் மரணமடைந்தபின், அமெரிக்கா தன் தாக்குதலை மேலும் மூர்க்கமாக ஆக்கியது. 1972 டிசம்பரில் நடைபெற்ற, கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல், பல்லாயிரக்கணக்கான வியத்நாமியர்களின் உயிரைப் பறித்தது. ஆனால் அதுவே அமெரிக்க அரசுக்குப் பெரும் ஆபத்தாகவும் முடிந்தது.
உலகம் முழுவதும் அமெரிக்காவின் செயலுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தன் சொந்த மக்களாலேயே வெறுக்கப்படும் அரசாக அமெரிக்கா ஆகியது-. வாஷிங்டன் நகரில், பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் அமைதியாகக் கைகோத்து நின்று, (மனிதச் சங்கிலிப் போராட்ட வடிவத்தின் தொடக்கம்), ‘அமெரிக்கப் படையே நாடு திரும்பு, வியத்நாம் மக்களைக் கொல்லாதே' என்று குரல் கொடுத்தனர்.

அந்தப் போராட்டம், தேச பக்திக்கான புதிய விளக்கத்தை உலகிற்குத் தந்தது. தன் சொந்த நாடு என்பதற்காக, அது எந்தச் செயலில் ஈடுபட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு அதனை ஆதரிப்பதுதான் தேச பக்தி என்னும் மூடத்தனத்தை அப்போராட்டம் உடைத்தது. தன் நாடாகவே இருந்தாலும், தவறான செயல்களில் ஈடுபடும்போது அதனைக் கண்டிப்பதே அறம் என்னும் புத்துணர்வை அந்த மனிதச் சங்கிலி தந்தது. அமெரிக்கப் படைகளை எதிர்த்து அமெரிக்கர்களே அன்று எழுப்பிய குரலை, இந்திய அமைதிப் படையை எதிர்த்து இந்தியக் குடிமக்களாகிய தமிழர்களே ஈழச் சிக்கலில் எழுப்பிய குரலோடு இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அந்தப் போராட்டமும், அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் எழுந்த கண்டனக் குரல்களும் அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைத்தன. சமாதான உடன்பாட்டினை அமெரிக்கா ஏற்றது. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட 27.01.1973 முதல் அமெரிக்கப் படைகள் தாயகத்திற்குத் திரும்பத் தொடங்கின. முப்பதாண்டு காலப் போர் முடிவுற்றது.

‘பலப் பரிட்சை' என்று வழங்கப்படும் வலிமைப் போராட்டம் ஆப்கானிஸ்தானத்திலும் நடைபெற்றது. இங்கே வல்லரசுகள் இடம்மாறி நின்றன. ஆளும் அரசை சோவியத் ஆதரித்தது. விடுதலைக்குப் போராடியவர்களை அமெரிக்கா ஆதரித்து நின்றது. எவ்வாறு தெற்கு வியத்நாமில் ஒரு பொம்மை அரசை அமெரிக்கா இயக்கியதோ, அவ்வாறே ஓர் அரசை ஆப்கனில் சோவியத் இயக்கியது. ஆப்கன் அரசை எதிர்த்து இருபெரும் போராட்டக் குழுக்கள் எழுந்தன. ஒரு குழுவிற்கு ஈரானிலும், இன்னொரு குழுவிற்குச் சீனா, பாகிஸ்தானிலும் இராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இரண்டு குழுக்களுக்கும் தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா அள்ளிக் கொடுத்தது.

1979 முதல் 89 வரை பத்தாண்டுகள், ஆப்கனில் உள்நாட்டுப் போர் நடந்தது. வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்தன.

1985ஆம் ஆண்டு, அப் போர் மிகக் கடுமையான கட்டத்தை அடைந்தது. அந்த ஓர் ஆண்டில் மட்டும், 1,08,800 பேர் கொல்லப்பட்டனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
அந்தப் போராட்டத்தின் போதுதான், ஒரு புதுமுகம் உலக அரங்கில் அறிமுகமானார். அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். பெரும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளை. ஆப்கனில் சோவியத்தின் தலையீட்டைக் கண்டு சினமுற்று எழுந்த இளைஞர்களில் அவரும் ஒருவர். அவருடைய கோபத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. சோவியத்திற்கு எதிராக அந்த இளைஞரை களமிறக்கியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மனிதர்தான் அமெரிக்காவிற்கு எதிரான பெரும் போரைத் தொடுத்தார்.
அவர் பெயர் ஒசாமா பின்லேடன். ஆப்கனில் முஜாஹிதின்களோடு இணைந்து போராடிக் கொண்டிருந்த அவர், பின்னாளில் தோற்றுவித்த இயக்கம்தான் அல் காய்தா (Al Qaeda).

Subavee's Arinthum Ariyamalum - Part 22

ஒருவரையொருவர் அழித்துக் கொள்வதற்காக, இரு நாடுகளும் உருவாக்கிய பயங்கரவாதிகள் பின்லேடனைப் போன்ற பலராவர். இறுதியில் 1989ஆம் ஆண்டு ஆப்கன் போர், ஒரு முடிவுக்கு வந்தது. வியத்நாமில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அதே அனுபவம், ஆப்கனில் சோவியத்திற்கு ஏற்பட்டது. சோவியத் படைகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.

கோர்ப்பசேவ் சோவியத் அதிபரான பின்பு, ‘கிளாஸ்நாஸ்ட்' என்னும் பெயரில் வெளிப்படையான விவாதங்களுக்கு வழிவகுத்தார். விவாதங்கள் பீறிட்டுக் கிளம்பின. பல்வேறு தேசிய இனங்கள் சோவியத்தை விட்டுப் பிரிந்து போக விரும்பின. இறுதியாக 1990இல் சோவியத் நாடு 14 துண்டுகளாய் உடைந்தது.

பொதுவுடைமைக் கோட்பாட்டின் வீழ்ச்சி என்று அதனைச் சிலர் தவறாகக் கருதினர். அது நடைமுறையில் ஏற்பட்ட பின்னடைவே தவிர, சித்தாந்தத்தின் வீழ்ச்சி இல்லை என்பதைப் பிறகு உலகம் உணர்ந்தது.

ஆனாலும், இரு பெரும் வல்லரசுகள் என்ற நிலை மாறி, அமெரிக்கா என்னும் ஒற்றை வல்லரசின் கீழ் உலகம் வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புக்கு: ([email protected] , www.subavee.com)

English summary
The 22nd part of Subavee's Arinthum Ariyamalum discusses about the Vietnam and Afgan wars conducted by US and Russia as the parts of their cold war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X