For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும்- 24: பின்லேடனும் முன்லேடனும்!

By Shankar
Google Oneindia Tamil News

-சுப வீரபாண்டியன்

சதாம் உசேனுக்கு முன் தொடங்கிப் பின் முடிந்தது, ஒசாமா பின்லேடன் அழித்தொழிப்பு! சதாம் உசேனை விடப் பன்மடங்கு அமெரிக்காவிற்குப் பெரிய அறைகூவலாக இருந்த பெயர் பின்லேடன் என்பது!

சவூதியில் பிறந்து வளர்ந்து, அமெரிக்கப் பின்புலத்தில் உருவாகி, ஆப்கனில் சோவியத்திற்கு எதிராய், முஜாஹிதீன்களோடு இணைந்து களத்தில் நின்ற ஒசாமா பின்லேடன், அமெரிக்காவிற்கே எதிரியாக எப்படி மாறினார்? அது ஒரு சிறிய கதை. அந்தச் சிறிய கதைக்குள்தான், உலகின் பெரிய வரலாறு ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.

ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் வெளியேறிய பின்பு, 1989 பிப்ரவரியில் பின்லேடன், தன் தாயகமான சவூதிக்குத் திரும்பிவிட்டார். ‘பயங்கரவாத'ச் சிந்தனைகள் எவையும் அவரை அப்போது பற்றியிருக்கவில்லை. குவைத் நாட்டிற்குள் ஈராக் படைகள் ஊடுருவிய நேரத்தில், சவூதிக்கும் ஆபத்து வரக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த அச்சத்தில், சவூதி மன்னர் அமெரிக்காவை நாடினார். அது பின்லேடனுக்குப் பிடிக்கவில்லை. மன்னரைச் சந்தித்துத் தன் போன்றவர்களின் கருத்தை எடுத்து வைத்தார். அப்போது அவர் சொல் எடுபடவில்லை.

அமெரிக்கப் படைகள் சவூதியில் வந்திறங்கின. அப்போதுதான், சவூதி அரசையும் எதிர்த்துப் பின்லேடன் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். இரண்டு புனிதத் தலங்களுக்கு (மக்கா, மதீனா) இடைப்பட்ட நிலத்தில், எந்த ஒரு அந்நியப்படையும் காலூன்றி நிற்பதை அனுமதிக்க முடியாது என்றார். அவருடைய குரலுக்கு ஆதரவு பெருகுவதை மன்னரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பின்லேடன் சூடானுக்கு நாடு கடத்தப்பட்டார்.

சூடானில் அவர் வாழ்ந்த சில ஆண்டுகளில், அவராலும் அவருடைய நண்பர் அப்துல்லா அசாமாலும் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ‘அல் காய்தா' (al - Qaeda). ஷரியத் சட்டம் முறையாகவும், கண்டிப்பாகவும் இஸ்லாமியர்களின் நாடுகள் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதும், ‘காபீர்'களுக்கு (அல்லாவையும், இஸ்லாமியச் சட்டங்களையும் ஏற்காதவர்கள்) எதிரான ‘ஜிகாத்' (தியாகப்போர்) தொடங்கப்பட வேண்டும் என்பதும் அவ்வமைப்பின் நோக்கங்கள். மத அடிப்படை வாதமாகவே அது அமைந்தது. அதன் காரணமாகவோ, என்னவோ, அவர்கள் தங்களின் அமைப்புக்குப் பெயரையே, ‘அடித்தளம்' (The Base) எனும் பொருள் தரக்கூடிய அல் & காய்தா என்பதாகச் சூட்டியிருந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சூடான் அரசும் அவரை வெளியேற்றி விட்டது. 1996இல் அவருக்கு அடைக்கலம் தந்த நாடு, தாலிபான்களால் ஆளப்பட்ட ‘ஆப்கானிஸ்தான்'.

1994ஆம் ஆண்டு, முகமது உமரினால் (Mohammed Omar) நிறுவப்பட்ட ‘தாலிபான்' இயக்கம், 96இல் ஆட்சிப் பொறுப்புக்கே வந்துவிட்டது. தாலிபான்கள் என்றால், மாணவர்கள் என்று பொருளாம். இஸ்லாமிய ‘ஷரியத்' சட்டங்களை மிகுந்த கண்டிப்புடன் பயிலும், நடைமுறைப்படுத்தும் மாணவர்கள் என்னும் பொருளில் அவர்கள் அப்பெயரை அமைத்து இயங்கினர். மாணவர்கள் என்று பெயர் சூட்டிக்கொண்ட அவர்கள், பெண்கள் யாரும் படிக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர்.

தாலிபான்களுக்கும், அல் காய்தாவிற்கும் கொள்கை அளவில் இருந்த நெருக்கம், கந்தகாரைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆப்கானிஸ்தானில், பின்லேடன் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உதவியது. எனினும் இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும், அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை. தாலிபான்கள் அரசில், பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கும், ஆப்கனில் பெண்கள் நடத்தப்படும் விதத்திற்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாகிஸ்தான், சவூதி ஆகிய நாடுகள் மட்டுமே மறைமுகமாக ஆதரித்தன.

1998ஆம் ஆண்டு, பின்லேடனின் அல்காய்தா, தன்னுடைய முதல் வெளிப்படையான செயல்பாட்டைத் தொடங்கியது. பிப்ரவரி 23 அன்று, அல் காய்தா வெளியிட்ட "ஃபத்வா"( fatwa- ஆண்டவர் பெயரிலான கட்டளை) உலகையே அதிர வைத்தது. அரபு நாடுகளில் காலூன்றி நிற்கும், பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முழுதாக ஆதரிக்கும் அமெரிக்காவிற்கு எதிரான, கடுமையான கட்டளையாக அது இருந்தது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாகவும், அதனால் அமெரிக்கர்களைக் கொன்று குவிக்குமாறும் ஃபத்வா நிறைவேற்றப்பட்டது. ஏறத்தாழ, அமெரிக்காவுடனான போர் அறிவிப்பாகவே அது அமைந்தது.

எனினும், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அதனை ஒரு மிரட்டலாகவே கருதின. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் குண்டுகள் வந்து விழுந்தபோது, அமெரிக்கா அதிர்ச்சிக்குள்ளாகியது. நைரோபியில், அமெரிக்கத் தூதரகக் கட்டிடம் தரைமட்டமாகவே தகர்க்கப்பட்டுவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை, உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பல அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில், அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள, அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்திற்கு அருகிலும், சுற்றிலும் காவலர்கள் பலர், பகலும் இரவுமாய் இன்றும் காவல் காத்துக் கிடப்பதன் நோக்கம் அதுதான்.

எல்லாவற்றையும் தாண்டி, 2001 செப்டம்பர் 11 அன்று, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது, அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே நடுங்கிப் போய்விட்டன என்று கூறவேண்டும். இன்றைய தலைமுறை நன்றாக அறிந்த, ஒரு பெரும் தாக்குதல் அது.

காட்டு விலங்காண்டித் தனமான மனித நேயமற்ற தாக்குதல் அது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரே இடத்தில், ஒரு சில நிமிடங்களில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட கொடூரம். அந்த நிகழ்வு உலக ஒழுங்கையே மாற்றிப் போட்டுவிட்டது. அதனைக் கண்டிக்காத நாடுகளே இல்லை. என்ன விலை கொடுத்தேனும், பயங்கரவாதத்தை ஒழித்திட வேண்டும் என்று உறுதி எடுத்தன பல நாடுகள்.

எனினும், இந்தப் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் வேர், அமெரிக்காவில்தான் உள்ளது என்பதைப் பல நாடுகள் உணரவில்லை. நிகரகுவா, ஹெய்ட்டி என எத்தனையோ நாடுகளின் மீது அமெரிக்கா தன் விமானங்களின் மூலம் குண்டுகளை வீசியிருக்கிறது. இறுதியில் அமெரிக்காவின் மீது விமானங்களே குண்டுகளாய் வந்து விழுந்துவிட்டன. சரியாகக் கூற வேண்டுமானால், பயங்கரவாதத்தில் ஒசாமா வெறும் பின்லேடன்தான். அமெரிக்காதான் ‘முன்லேடன்'.

எவ்வாறாயினும் தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதலுக்கு உடனே விடை சொல்லியாக வேண்டும் என்று அமெரிக்க அரசு பதைபதைத்தது. பின்லேடனைத் தவிர, வேறு யாரும் இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்று கண்டறிந்த அமெரிக்கா, ஆப்கன் மீது போர் தொடுக்க முடிவெடுத்தது-. தனக்கு நேர்ந்த ஆபத்தை உலகிற்கே நேர்ந்த ஆபத்தாக மொழிபெயர்த்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்னும் அறிவிப்பு அங்கிருந்து வெளியானது.

நேரடியாகவே ஆப்கானிஸ்தானத்தில் இருந்த தாலிபான்கள் அரசுடன் அமெரிக்கா பேசியது. அங்கே தங்கியிருக்கும் பின்லேடனை உடனடியாகத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரியது. உரிய ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டனர் தாலிபான்கள். அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஆதரவாக உலகிலுள்ள 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஒருங்கிணைந்தன. எந்த நேரமும் போர் மூளக் கூடும் என்னும் தருணத்தில், ஆப்கன் அரசு ஒரு சிறிய சமாதானத்திற்கு முன்வந்தது. ஆதாரங்களைக் காட்டினால், ஷரியத் சட்டப்படி பின்லேடனைத் தாங்கள் தண்டிப்பதாகவும், இல்லையெனில் பொதுவான ஒரு மூன்றாவது நாட்டில் அவரை ஒப்படைப்பதாகவும் கூறியது. ‘21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதுதான் நல்ல நகைச்சுவை' என்று கூறியது அமெரிக்கா.

tower

நகைச்சுவையை ஏற்காத அமெரிக்கா, சோகச் சுவையைத் தொடங்கியது. 2001 அக்டோபர் 7, ஆப்கன் நாட்டின் மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போர் அறிவிப்பை வெளியிட்டன. ஆப்கன் அரசை அகற்றிவிட்டு, புதிய ஜனநாயக அரசை அமைப்பது, பின்லேடனை அழித்தொழிப்பது, உலகில் பயங்கரவாதம் பரவாமல் தடுப்பது என மூன்று அடிப்படைகளில் போர் தொடுப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

ஆப்கானிஸ்தானம் ஏறத்தாழ அழிந்துபோய்விட்டது. ஆனால் பின்லேடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, போர் தொடரும் என்பதே அமெரிக்காவின் நிலையாக இருந்தது.

இதற்கிடையில், வேறு சில நாடுகளில் அல் காய்தாவின் தாக்குதல் நடைபெற்றது. குறிப்பாக, 2002 அக்டோபர் 12ஆம் நாள் இந்தோனேசியாவில் நடைபெற்ற, வெடி குண்டுத் தாக்குதல் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அந்நாட்டில் உள்ள பாலித் தீவில் (Bali island) அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன. ஒன்று, தற்கொலைத் தாக்குதல், இரண்டாவது கார் வெடிகுண்டுத் தாக்குதல், மூன்றாவது ஜெலட்டின் குச்சிகளின் தாக்குதல். 38 இந்தோனேசியர்கள் உள்பட 202 பேர் அதே இடத்தில் மாண்டு போயினர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், பிரித்தானியர்கள் உள்ளிட்ட பல நாட்டினர் அடங்குவர்.

‘எங்களின் மீது போர் தொடுத்து எங்களை வேரோடு அழிக்க நினைத்த அமெரிக்கா உள்ளிட்ட, நாட்டினர் பலர் மீது நாங்கள்தான் குண்டுகளை வீசினோம்' என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய பின்லேடன் பேசினார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், பின்லேடனும் இறந்திருக்கக் கூடும் என்னும் ஐயப்பாட்டை அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி துடைத்தெறிந்தது.

அமெரிக்காவின் கோபம் குறையாமல் கொழுந்து விட்டு எரிவதற்கு அது அடித்தளமிட்டது. ஆனாலும், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அமெரிக்கா தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, 10 ஆண்டுகள் அந்நாடு காத்திருக்க வேண்டியதாயிற்று. 2001இல்தான் அந்த எண்ணம் ஈடேறியது. இஸ்லாமாபாத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, அபோதாபாத் (Abbothabad) என்னும் இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடனும், அவரைச் சார்ந்தவர்களும், 2011 மே 1ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வெறும் 20, 25 அமெரிக்க இராணுவ வீரர்கள் மட்டுமே அங்கு சென்று, பாகிஸ்தான் அரசுக்குக் கூட அறிவிக்காமல், பின்லேடனைச் சுற்றி வளைத்து, அனைவரையும் அழித்தொழித்தனர்.

ஒசாமாவை அழிக்க, அமெரிக்கா ஒபாமா காலம் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இனியேனும் உலகில் எந்த மூலையிலும் அமெரிக்காவுக்கு எந்த ஓர் எதிரியும் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? முடியாது.

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புக்கு: ([email protected] , www.subavee.com)

English summary
The 24th part of Subavee's Arinthum Ariyamalum discusses about the rise and fall of Bin Laden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X