For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரையும் குத்தாத கத்தி!

By Super
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

கடந்த ஓரிரு மாதங்களாகவே ஒரு 'கத்தி'ச் சண்டை இங்கு நடைபெற்றது. சண்டையின் முடிவில், சண்டையில் கலந்து கொள்ளவே இல்லாத ஒருவர் கழுத்தில் வெற்றி மாலை விழுந்தது. அத்துடன் படத்திற்கு 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள்! நாம் திரையில் பார்த்த கதை இது. திரைக்குப் பின்னால் நடந்த முழுக் கதையையும் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டு ரசிக்கலாம்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில். நடிகர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம், சுபாஷ்கரன் என்னும் ஈழத் தமிழரால் தயாரிக்கப்படுகிறது என்றாலும், அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. 'செந்தமிழன்' சீமான்தான் முதலில் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைக்கு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர், முருகதாசும், விஜய்யும் தமிழர்கள் என்பதைக் கண்டுபிடித்து, தான் சண்டைக்கு வருவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

சீமான் எதிர்க்கவில்லை என்றால் படம் வெளிவந்துவிடுமா என்ன, இதோ நான் இருக்கிறேன் என்று எழுந்தார் பண்ருட்டி வேல்முருகன். அவர், தனியரசு, பூவை மூர்த்தி என ஆளும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து, தமிழ் அமைப்பினர் பலரையும் இணைத்து, 'தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு' என உருவாக்கி, கத்தியை முறித்துப் போட்டுவிட்டுத்தான் ஓய்வோம் என்றார்கள். பெரும் கத்திச் சண்டை நடக்கப் போகிறது, என்ன ஆகுமோ என்று பார்வையாளர்கள் பயந்துகொண்டே படம் பார்த்தார்கள்.

இதில் ஒரு நகைச்சுவைக் காட்சியும் தொடர்ந்து இடம்பெற்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான ராஜபக்ஷே ஆதரவாளர் சுபாஷ்கரன் என்பதால் அவர் தயாரிக்கும் படத்தை எதிர்க்கிறோம் என்றனர் நம் நண்பர்கள். ஆனால் ஈழத் தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் சுபாஷ்கரன் மற்றும் அவரது லைக்கா நிறுவனத்தை எதிர்க்கவில்லை. ராஜபக்ஷேவுடன் உறவு வைத்திருந்தாலும் லைக்கா நிறுவனம் எங்களுக்கும் உதவியாகத்தான் இருக்கிறது என்கின்றனர் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். உண்மைதான்....அங்கிருந்து வெளிவரும் பல தமிழ் இதழ்களில் லைக்கா நிறுவன விளம்பரத்தை நான் பார்த்துள்ளேன். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் மிகப்பலர் லைக்கா நிறுவனத் தொலைபேசியைத் தான் பயன்படுத்துகிறார்கள். அண்மையில், அக்டோபர் முதல் வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற ஈழத் தமிழர்களின் கருத்தரங்கிற்கு விளம்பரதாரரும் (ஸ்பொன்சர் ) லைக்கா நிறுவனம்தான். ஆக, அவர் ராஜபக்ஷே, ஈழத் தமிழர்கள் எல்லோருக்கும் நல்லவர். இப்போது தமிழ்நாட்டுத் தமிழ் அமைப்புகளுக்கும் நல்லவராகி விட்டார்.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு எப்படி திடீரென்று தீபாவளிக்கு முதல் இரவு சமாதானம் அடைந்து, படம் வெளிவர இசைந்தது என்பது ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பானது.

தீபாவளிக்கு முதல் நாள் கூட, கூட்டமைப்பின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் காரசாரமாக ஒரு அறிக்கை விட்டார். அதில் சில ரகசியங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சுபாஷ்கரன் என்பவர் ராஜபக்சேவுக்கு வேண்டியவர் மட்டுமில்லை, லைக்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹேஷ்டிங்ஸ் 2007 ஆம் ஆண்டே, ராஜபக்ஷேவின் அக்கா மகன் ஹிமல் லீலந்திர என்பவருக்கு விற்கப்பட்டுவிட்டது. அதனால், லைக்கா நிறுவனமே ராஜபக்சேவுடையதுதான். இந்த உண்மையை வெளியிட்ட காரணத்தால்தான் சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் வசந்த விக்கிரம துங்க படுகொலை செய்யப்பட்டார் என்கிறார் வேல்முருகன். அது மட்டுமல்லாமல் தமிழர்களாலும், தமிழக அரசினாலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட காமன்வெல்த் மாநாட்டின் தங்க விளம்பரதாரரே சுபாஷ்கரந்தான் என்பதால், "கத்தி படத் தயாரிப்பிலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறும்வரை எங்கள் போராட்டம் ஓயாது" என்று திட்டவட்டமாக அவர் தன் அறிக்கையில் கூறியிருந்தார். வேல்முருகனின் உறுதி கண்டு நாடே புல்லரித்துப் போயிற்று.

Subavee's Arinthum Ariyamalum - Part 25

அது மட்டுமின்றி,அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் "கத்தி படத்தை எதிர்த்து, எந்த வன்முறைக்கும் இடம் தராமல், அற வழியில் போராட வேண்டும்" என்றும் மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அன்று இரவே, சென்னையின் மைய்யப் பகுதில் உள்ள சத்யம், உட்லண்ட்ஸ் ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தீபாவளி வெடி என்று நினைத்தோ என்னவோ காவல்துறையினரும் அமைதியாக இருந்துவிட்டனர்.

தாடியை வைத்திருப்பதா, எடுத்து விடுவதா என்ற கவலையில் மூழ்கியிருந்ததால், தமிழக அமைச்சர்களும் கத்திச் சண்டையில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையில், தே மு.தி.க. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் (தமிழ்த் திரைப்படத் துறையில் தொடர்புள்ளவர்கள்) வேல்முருகனிடம் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்ததாகச் சில 'விவரம் இல்லாதவர்கள்' கூறினார்கள். அது ஏதாவது உலக நாடுகள் பிரச்சினை குறித்ததாக இருக்கும், கத்தி பற்றியா அவர்கள் பேசப் போகிறார்கள் என்று பார்வையாளர்கள் எண்ணிக்கொண்டனர்.

ஆனால் திடீரென்று தீபாவளிக்கு முதல்நாள் இரவில் எல்லாம் சுபமாக முடிந்துவிட்டது. படத்தின் 'டைட்டிலில்' லைக்கா நிறுவனம் பெயர் போடுவதில்லை என்று ஒப்பந்தம் ஆகிவிட்டதாம். போராட்டக் குழு தன் போராட்டத்தைக் கைவிட்டு விட்டது. அந்தப் படத்தைத் தயாரித்தது யார் என்று உலகுக்கெல்லாம் தெரியும் ஆனால் அந்த ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று போராட்டக் குழு கேட்டுக் கொள்ள, லைக்காவும் அதனை ஏற்றுக் கொண்டு விட்டது. வேறென்ன வேண்டும்? அந்தப் படத்தில் வரும் லாபம் எல்லாம் அந்த நிறுவனத்திற்குத்தான் போய்ச் சேரும். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. பெயர் போடக் கூடாது என்பதுதான் நமது லட்சியம்.

இதனை சாதாரணமாகக் கருதாதீர்கள், இது ஒரு அடையாள வெற்றி என்று தொலைக் காட்சியில் தியாகு சொல்லிவிட்டார். காரல் மாக்ஸின் மூலதனத்தையே மொழிபெயர்த்தவர் சொல்லிவிட்ட பிறகு, எதிர்த்துப் பேச நமக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?

இந்த கட்டத்தில்தான், புரியாத புதிராக ஒரு செய்தி வந்தது. அதுதான் கத்திச் சண்டைப் படத்தின் உச்சகட்டம். நடிகர் விஜய் "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்றி" என்று ஒரு அறிக்கை விட்டார். அம்மாவுக்கும், நடைபெற்ற கத்திச் சண்டைக்கும் என்ன தொடர்பு? ஏன் அம்மாவுக்கு அவர் நன்றி சொல்கிறார்? எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள்.இது எங்கள் அம்மா குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறதே என்று தோன்றிற்று.

தோழர் தியாகுவுக்குத் தொலைபேசி என் ஐயத்தைக் கேட்டேன். உலகச் செய்திகள் எதைப் பற்றிக் கேட்டாலும் உடனே விடை சொல்லக் கூடிய அவர், ' அவர் ஏன் அம்மாவுக்கு வாழ்த்து சொன்னார் என்று எனக்கும் தெரியவில்லை" என்று கூறிவிட்டார் ‘அப்பாவி' தியாகு.

சரி போகட்டும்......எல்லாம் 'நல்லபடியாக' முடிந்துவிட்டது. கத்தி கடைசியில் யாரையுமே குத்தவில்லை. எல்லோரும் 'உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி'யைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் ஒரே ஒரு எச்சரிக்கையுடன் இந்தக் கட்டுரையை முடிக்க வேண்டியுள்ளது. ராஜபக்ஷே உள்பட யார் வேண்டுமானாலும் இங்கு படம் எடுக்கலாம், பணம் சம்பாதிக்கலாம். ஆனால் பெயரை மட்டும் போடவே கூடாது. மீறிப் பெயர் போட்டால், 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மீண்டும் 'அற வழியில்' போராடும்

English summary
Subhavee's special article about Vijay's starrer Kaththi and politics behind the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X