For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைச் சுவரும்... கருப்பட்டி நினைவுகளும்!

Google Oneindia Tamil News

பள்ளி வயதில்.. எனக்கு ஏனோ
அத்தனை ஆர்வம்... கறி வெட்டுவதை காண..!

கவுண்டரின் முறுக்கிய மீசையா..?!
இல்லை.. வெட்டு அருவாளா..?!
தெரியவி்லை..
அவரைப் பார்த்தா எப்பவும் பயம் தான்..!

அண்ணா.. ஆத்தா நல்ல
நெஞ்சு எலும்போட அரைக் கிலோ
வாங்கியார சொல்லுச்சு..!

டவுசர தூக்கி விட்டு..
கசங்கிய சில்லறை நோட்டை
நீட்டினேன்..!

வெட்டுவதை நிறுத்தி..
பணத்தை மரப்பெட்டியில் போட்டார்..
ஆறுச்சாமி கவுண்டர்.!

Reader's poem

அவர் சிரித்தபடி தொங்கிய ஆட்டில்
மும்மரம் ஆக..

நான் இமைக்க மறந்து
வெட்டு மரம் பார்த்தேன்.

ஈ குடும்பத்தோட நோம்பி
கொண்டாடி கொண்டு இருந்தது.
அதுக்கு தினம் திருவிழா தான்..!

கவுண்டரை சுத்தி பல குரல்கள்..
நல்ல தொடைக்கறி கவுண்டரே..
நல்லி எலும்பா போடுங்க...
வாட்டுன ஆட்டுகால் இருக்கா?..

எல்லாருக்கும் கண்ணு...
வெட்டு மரத்திலும்..
தொங்கிய ஆட்டு மேலேயும் தான்.!

தாமரை இலையில் பொதிந்த
கறியை கையில் திணித்து...
"பத்திரம்டா... கழுகு கொத்த போகுது.."
மீசை நீவி சிரித்தார்..!

"தண்டபாணி சில்க்ஸ்" மஞ்சப்பையில் போட்டு
தலை தெறிக்க ஓடினேன்.. வீடு நோக்கி.!

கறி சமைக்கிற நாள்
எனக்கு எப்பவும் தீவாளி நோம்பி தான்..!

அம்மா ஆட்டுக்கல்லில் எத எதயோ
லொட.. லொடவென ஆட்ட..
கறி மணக்குது டோய்...!
சத்தம் பக்க சுவரில் பட்டு தெறித்தது..!

பித்தம் தலைக்கு ஏற...
தோட்ட கிணற்றில் தலைகிழாய் குதித்தேன்..!
சாப்பிடும் நிமிடத்தை எண்ணி கொண்டே..!

அடித்த நீச்சலில் வயிறு பெரும்
குரலெடுத்து அலற..பம்பு செட்டில்
காயப் போட்ட துணி எடுத்து
பறந்தேன்... நாலு கால் பாச்சலில்.!

விறகு அடுப்பு மண்சட்டியில் குழம்பு கொதிக்க..
அடுக்களை பரபரத்தது..!
கொல்லையில் கறவை கத்த...

எப்பம்மா சாப்டலாம்?.. ஆவலானேன்..!
கதிரு..! பத்து நிமிசம் கண்ணு..
அப்பாவோட கூடத்துல உக்காரு.. வரேன்..!

வானம் இருட்டு கட்ட.. திண்ணை ஓரம்
திரிந்த கோழி
குஞ்சுகளோடு கூடம் வந்தது..!

அப்பத்தா ஆட்டுக்கு கீரையிட்டு
"தெக்கத்தி மழ சாமீ.."
என அதோடு பேசிச் சிரிக்க..
நான் பொறுமை இழந்து நேரமானது..!

கறி வெய்த்த சட்டியில்
பிசைந்த சோற்றை உருட்டி
தோட்டத்து வாழையில் அம்மா வெய்க்க..

நான் தொண்டைக்குள் வேகமாய்
தள்ளி வெகுநேரமானது..!
விக்கினேன்..!..மெதுவாடா கண்ணு..!

பித்தளை சொம்பு நீர் உள்செல்ல
வாஞ்சையோடு தலை கோதினாள்..!

வெளியே மழை பொத்து திறக்க...
இதைவிட நல்ல நாள் இனி
இல்லை எனத் தோன்றியது..!..

ஆர்டர் செய்ய மெனு பார்த்தேன்..
கண்ணில் முட்டிய நீரில்
எதுவும் சரியாக தெரியவில்லை ..!

- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின், டெக்சாஸ்.

English summary
This is a reader's poem on his childhood memories.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X