For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீட்டு குட்டீஸ் படிப்புல சுட்டி ஆகணுமா? வித்யாகாரகன் புதனை விடாம பிடிங்க!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே. ஆர். சுப்ரமணியன்

கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று வான்புகழ் வள்ளுவர் கூறியுள்ளார். பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும்.

கல்வியறிவு பெற்றவர்கள்தான் தங்களது கல்வித் திறமையால் பெரும் கோடீஸ்வரர்களாக விளங்குகிறார்கள். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்லாமல் செழிப்பும் உண்டாகிறது. நம்மிடம் இருக்கும் கோடிக்கணக்காண பணத்தைக் கூட ஒருவர் கொள்ளையடித்துச் சென்று விடலாம். ஆனால் கல்விச் செல்வத்தை யாரும் திருடி விட முடியாது.

ஒரு சில மாணவர்கள் ஓரளவு படித்தாலே நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள். மற்றவர்கள் எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மதிப்பெண்ணும் குறைகிறது. கடின உழைப்பு, விடா முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை.

கோடி கோடியாய் சொத்து வைத்திருப்பவர்கள் கூட தன் மகன் நன்றாக படித்து பெரிய அறிவாளி என்று பெயரெடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள். படிப்பு எவ்வளவு செலவு செய்தாலும் சரியாக படிப்பு வரமாட்டேங்குதே? என்ன செய்யலாம் என்று ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் கேட்கப் போவார்கள். ஒருவரின் கல்வி நிலையைக் கணிப்பதில் ஜோதிட சாஸ்திரத்தின் பங்கு மகத்தானது. கல்விக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு தெரிந்து கொள்வோம்.

வித்யாகாரகன் புதன்

வித்யாகாரகன் புதன்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்' என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம்இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.

கல்விக்கு அதிபதி

கல்விக்கு அதிபதி

கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால்பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாகபார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன்.

புதன் கொடுக்கு புத்தி

புதன் கொடுக்கு புத்தி

சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங்,பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம். புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.

எந்த துறையில் வாய்ப்பு

எந்த துறையில் வாய்ப்பு

ஒருவருடைய ஜாதக கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் லக்னம் என்று இருக்கும். இதுவே முதல் கட்டம். இந்த கட்டத்தில் இருந்துதான் ஒன்று, இரண்டு என்று எண்ணவேண்டும். இதில் லக்னம் மிக முக்கியமானது. அதற்கு உரிய கிரகம் எதுவோ அந்த கிரகமே லக்னாதிபதி. லக்னத்தில் ஒன்பது கிரகங்களில் எந்த கிரகம் நிற்கின்றதோ, அந்த கிரகத்தின் ஆதிக்கம் அவர்களுக்கு ஏற்படும். எனவே நாம் லக்னத்தையும் கவனிக்க வேண்டும். ஆரம்ப கல்வியான இரண்டாம் வீட்டையும் கவனிக்க வேண்டும். உயர்கல்வியான நான்காம் வீட்டையும் கவனிக்க வேண்டும். கல்விக்குரிய புதனையும் கவனிக்க வேண்டும். ஆக இத்தனை அம்சங்களையும் கவனித்தோமென்றால் ஒருவர் எந்த துறையில் பிரகாசிக்க முடியும் என்பதைச் சொல்லி விட முடியும்.

புதன் என்ன சொல்றார்?

புதன் என்ன சொல்றார்?

கல்வி, வித்தைக்கு அடித்தளம் அமைக்கும் கிரகம், வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதன் கிரகமாகும். ஜாதகத்தில் புதன் ஏதாவது ஒரு விதத்தில் பலம் பெறுவது அவசியம். பலம் என்பது லக்னத்துக்கு 2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் நல்ல கிரக சேர்க்கை பெற்று இருப்பதாகும். லக்னத்தில் இருப்பது மிகவும் சிறப்பு.

நான்காம் இடம்

நான்காம் இடம்

அதற்கடுத்து உயர்நிலை கல்வி வரை பேசக்கூடிய இடம் நான்காம் இடம். ஒருவர் வக்கீலுக்குப் படிப்பாரா? இன்ஜினியருக்குப் படிப்பாரா? டாக்டருக்குப் படிப்பாரா? ஆடிட்டருக்கு படிப்பாரா அல்லது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற படிப்புகளைப் படிப்பாரா என்பதை நான்காம் இடத்தை வைத்துக் கொணடு சுலபமாக சொல்லி விடலாம். எனவே இந்த பாவத்தை சிறப்பாக அறிய வேண்டும்.

யாரை யார் பார்க்க வேண்டும்

யாரை யார் பார்க்க வேண்டும்

நான்காம் வீட்டு அதிபர் பலம் பெற்றால் உயர் கல்வியை சிறப்பாகப் பூர்த்தி செய்வார். 4ம் வீட்டு அதிபர் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருந்தால் அவருக்கு படிப்பு நன்றாக வரும். அதே போல கல்விக்குரிய கிரகம் புதனாகும். எனவே புதனும் பலம் பெற வேண்டும். புதன் ஆட்சி உச்சம் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் படிப்பு நன்றாக வரும்.

சந்திரன் உடன் குரு துணை

சந்திரன் உடன் குரு துணை

படிப்பு நன்றாக வருவதற்கு சந்திரனின் துணையும், குருவின் துணையும் அவசியம். சந்திரனை மனோகரன் என்று சொல்வார்கள். மனதிற்கு அதிபதி சந்திரன் பலம் பெற்றால் படிப்பதற்கு மனம் செல்லும் இல்லையென்றால் கவனம் வேறு எங்கெல்லாம் செல்லும், குருவை அறிவுக்கதிபதி என்று சொல்வார். ஒன்று சொன்னால் உடனே பிடித்து கொள்வார்கள் எனவே புதன், சந்திரன் குரு ஆகியவை நன்றாக இருந்து, நான்காம் வீட்டு அதிபரும் நன்றாக இருந்தால் படிப்பு நன்றாக வரும்.

கல்வி ஸ்தானம்

கல்வி ஸ்தானம்

பொதுவாக ஜாதக கட்டத்தில் நான்காம் வீட்டின் கிரகமும், ஒன்பதாம் வீட்டின் கிரகமும் நீச்சம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும். கல்வி பயிலும் காலகட்டத்தில் 10 வயது முதல் 21 வயது வரை நல்ல யோகமான திசைகள் நடப்பது மேலும் சிறப்பை தரும். கஷ்டமான அறிவியல், கணித பாடங்களைக்கூட எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். ஒரே ஒரு கிரகத்தை மட்டும் வைத்து படிப்பை முடிவு செய்து கொள்வதை விட அந்த கிரகத்தோடு இணையும் மற்ற கிரகத்தை வைத்தும் கல்வியை முடிவு செய்ய வேண்டும்.

கல்வியில் தடைகள் ஏன்?

கல்வியில் தடைகள் ஏன்?

கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச்ச கிரக திசாபுக்திகளும், 6, 8, 12 ஆகிய கிரக திசை புக்திகளும், பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். படிப்பில் நாட்டம் செல்லாமல் தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் உண்டாகும். படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரக திசைகள் வந்தால் மறதி அதிகரிக்கும். எட்டாம் அதிபதி நான்காம் அதிபதியுடனும், சனி, செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை வந்தால் திடீர் தடைகள் ஏற்படலாம்.

மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி

மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேதஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார். நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.

ஹயக்ரீவர்

ஹயக்ரீவர்

செங்கல்பட்டு அருகில் உள்ள செட்டிபுண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ தலங்கள். இங்கு சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம்.

சரஸ்வதியின் அருள்

சரஸ்வதியின் அருள்

கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும். திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம். தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம்.

புதன் பகவானுக்கு பரிகாரம்

புதன் பகவானுக்கு பரிகாரம்

திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம்மனை பவுர்ணமி அன்று தரிசித்து வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். புதனை வணங்கி பச்சைப் பயறுவேக வைத்து பசு மாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் உங்க வீட்டு குட்டீஸ் பள்ளியில் அதிக ஈடுபட்டுடன் படித்து மதிப்பெண்களை குவிப்பார்கள்.

வரும் வாரங்களில் ஒருவர் என்ன படிப்பு படிக்கலாம்? ஜாதகக் கட்டத்தில் புதன் எங்கிருந்தால் என்ன என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

English summary
Educational achievements can be predicted by analysing the 1st , 2nd , 3rd , 4th , 5th and 9th House of Horoscope and the Lords of the respective Houses. However, the Second House alone cannot give a complete picture regarding this area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X