For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆலய தரிசனம் - நவ கயிலாயங்கள் - பாபநாசம்

Google Oneindia Tamil News

நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் தரிசிக்கவிருப்பது நவகைலாயங்கள் ஆகும். பொதிகை மலையில் தாமிரபரணி என்னும் பொருநை நதி தோன்றி பல இடங்களில் செழிப்பை வழங்கி கடலோடு கலக்கிறது. ஆற்றின் ஊரங்களில் பல புண்ணியத் தலங்கள் உள்ளன. முனிவர்களும், மன்னர்களும், ஆன்மீகச் சான்றோர்களும் ஆற்றின் கரைகளில் ஆற்றின்கரைகளில் சிவனை வைத்து வழிபட்டு பின்னர் அரசர்களால் கோயிலாகக் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறு உள்ள சில சிவதலங்களைப் பார்ப்போம்.

நவக்கிரக வரிசையில் ஒன்பது கோயிலைக் கட்டி நமது முன்னோர்கள் அவற்றிற்கு நவ கைலாயம் என்று பெயரிட்டு இன்றும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன.

Aalaya dharisanam - Navakailayam - Papanasam

நவகைலாயங்கள்:

நவகைலாயங்கள் ஒன்பதும் பின்வருமாறு:

1. பாபநாசம்
2. சேரன்மாதேவி
3. கோடகநல்லூர்
4. செங்காணி (கீழத்திருவேங்கடநாதபுரம்)
5. முறப்பநாடு
6. ஸ்ரீவைகுண்டம்
7. தெந்திருப்பேரை
8. இராஜபதி
9. சேர்ந்தபூமங்கலம்

மேற்காணும் நவகைலாயங்களில் முதல் மூன்றுகைலாயங்கள் மேலக் கைலாயங்கள் என்றும் அடுத்த மூன்று கைலாயங்கள் நடுக் கைலாயங்கள் என்றும் இறுதியாக உள்ள மூன்று கைலாயங்கள் கீழக் கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

நவகைலாயங்களில் முதல் நான்கு கைலாயங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் அடுத்த ஐந்து கைலாயங்கள் தூத்துகுடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

நவகைலாயம் தோன்றிய வரலாறு:

பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம். அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர்.
சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை வெளிக்கொண்டு வர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார். அகத்தியர் உரோமச மகரிஷியை அழைத்து சிவபெருமானை நவகோள்களாக நினைந்து ஒவ்வொருவரும் வழிபட்டால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது. எனவே நவகோள்கள் வரிசையில் மக்கள் வணங்குதல் வேண்டும். நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய வேண்டுமென்று விரும்பினாய். தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் விரும்பியது கிடைக்கும். தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அங்கு சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் சங்கு முகத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறுகிறார். அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோமச முனிவர் சிவனை வழிபட்டு முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. பிருங்க முனிவரும் நவகைலாயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்து தன் சாபம் நீங்கி இறைவனை அடைந்ததாக ஒரு வரலாறும் உள்ளது.

நவகைலாயம் சான்றுகள்:

நவகைலாயம் பற்றிய சான்றுகள் திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் கலியாண குறடு என்ற சிரு மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றிய செய்திகளும் பெயர்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இது தவிர உரோமச முனிவர் சிலை சேரன்மகாதேவி கோயிலிலும் திருவைகுண்டம் கோயிலிலும் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு செய்திகளும் சான்று கூறுகின்றன.

பாபநாசம்:

நவகைலாயங்களில் முதல் கைலாயம் பாபநாசம். இத்தலத்தின் பெயரில் இருப்பது போலவே நாம் செய்த பாவங்களை நாசம் செய்வதற்கு நாம் செல்ல வேண்டிய தலம் பாபநாசம் ஆகும்.
இத்தலத்தில் சன்னதி எதிரில் உள்ள தாமிரபரணி படித்துறையில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனது.
தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம். இக்கோயில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய கோபுரத்துடன் அமைந்துள்ளது.

புராண வரலாறு:

சிவபெருமானின் திருமணகாலத்தில் வடபுலம் தாழ்ந்ததால் அதை சமநிலையாக்க அகத்தியமாமுனிவரை தென்னாடு செல்லுமாறு இறைவன் பணித்தார்.
பொதிகை மலை அடைந்த அகத்திய முனிவர் சிவபெருமானின் திருமண கோலம் காண விழைந்தார்.
இறைவனும் தேவியுடன் ரிஷப வாகனத்தில் பொதிகை மலைச்சாரலிலுள்ள பாபநாசத்திலே வந்து காட்சி தந்தார்.

வசந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒற்றை மீன் மற்றும் இரட்டை மீன் வடிவங்கள் காணப்படுவதால் இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அமைவிடம்:

இத்திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து சுமார் நாற்ப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு முக்கூடல் வழியாகவும் சேரன்மகாதேவி வழியாக செல்லலாம்.

English summary
History of Navakailasam Temples of Tirunelveli, Deities of Navakailasam Papanasam Navagraha Temple at Tirunelveli
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X