For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்னங்களைத் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது, அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதின் மூலம் நம் வாழ்க்கையில் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கை. ஆனால் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக ஜோதிடவியல் அடிப்படையில் ஒவ்வொரு திதியிலும் செய்யும் காரியங்கள் வெற்றியடையுமா அல்லது தோல்வியடையுமா என்று அறிந்து கொள்ளலாம். சதுர்த்தி திதியன்று செய்யும் செயல்கள் ஒரே மாதத்தில் தோல்வியடையும் சீரழியும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் விதிவிலக்காக விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படுபவை விருத்தியடைகின்றன. எனவே தான் விநாயகர் சதுர்த்தியன்று திருமணம், கிரகப்பிரவேசம் ஆகியவை சிறப்புற செய்யப்படுகின்றன.

முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினமான இன்று (17-09-2015) விநாயகரை வழிபடுவதின் மூலமாக நம் துன்பங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

Ganesha Chaturthi celebration

விநாயகரின் பெருமை :

"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது'
என்கிறார் வள்ளுவர். ஆழி என்றால் கடல் இங்கு பிறவாழி என்று குறிப்பிட்டுள்ளது
அன்பு, ஆசை, பாசம், நோய் போன்றவை. ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்து கிறோம் என்றால் அது அன்புக்கடல். அந்த அன்பு மிகுதியாகும்பொழுது வருவது ஆசை. அது மிகுதியாகும்போது ஆசைக்கடல். அதுவும் மிகுதி யாகும்போது பாசக்கடல்.
அந்த பந்தபாசம் மிகுதியாகும் பொழுது வருவது நோய்க்கடல். இத்தகைய பிற ஆழிகளைக் கடக்கவேண்டுமென்றால் அறவாழி அந்தணனிடம் சரணா கதி அடைவதுதான் வழி. அப்படி யென்றால் யார் அவன்?

தர்மசிந்தனையிலே கடலைப் போன்றவன் அண்ட சராசரங்களை படைக்கின்ற இறைவன். அனைத்து தெய்வங் களும் சக்திவாய்ந்தவைதான். அதேசமயம் முதலில் பிள்ளையார் சுழி போட்டுதான் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவது மரபு. எனவே அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகர். அவரைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடலாம்.

விநாயகர் துதி :

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம், நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
-விவேக சிந்தாமணி-

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
--திருமந்திரம்.

விநாயகர் அகவல் :

"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று ஔவையார் பாடிய விநாயகர் அகவலை கேட்டிருப்பீர்கள். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்ட பாடல் இது.

விநாயகர் அகவல் பிறந்த வரலாறு .:

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.

இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பாட்டி பதில் அளித்தாள்.

ஔவை பிராட்டி 'கயிலை மலைக்கு முன்னமே சென்று, சுந்தரருக்கு சிறப்பான வரவேற்பு புரிதல் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டார். பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.
புன்முறுவல் பூத்த ஸ்ரீகணேச மூர்த்தி 'ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.

இத்தருணத்தில் ஔவையார் பாடி அருளியது தான் 'விநாயகர் அகவல்' என்னும் ஒப்பற்ற பாடல் தொகுப்பு. எழுபத்தியிரண்டு வரிகளைக் கொண்டது. பாராயணம் புரிய மிகவும் எளிதானது.
அகவல் துதியால் பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைப் பற்றித் தூக்கி, ஒரு நொடியில் கயிலை மலையில் சேர்ப்பித்து அருளினார். இந்நிகழ்வு நடந்தேறி வெகுநேரம் சென்ற பின்பே, சுந்தர மூர்த்தி சுவாமிகள் கயிலை மலை ஏகினார். ஔவை பிராட்டியும் வரவேற்றுப் பேருவகை கொண்டார். முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ?

கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் ஔவை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.

விநாயகரின் வடிவங்கள் :

மகா கணபதியை பல்வேறு வகைகளில் அலங்கரித்து கண் குளிரப் பார்த்தால் பாவங்கள் பொடிப்பொடியாகும்;அறிவு வளரும்;இறைவன் திருவடி சித்திக்கும்.

ஆனைமுகனின் அற்புத பதினாறு வடிவங்களும் அவற்றை வழிபடுவதால் ஏற்படும் பலன்களும்:

01.பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் எல்லா தோஷங்களும் நீங்கும்.
02.தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முக வசீகரம் உண்டாகும்.
03.பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் உபாசனை நன்கு அமையும் தெய்வ அருள் கிடைக்கும்.
04.வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், வீரம், தன்னம்பிக்கை உண்டாகும்.
05.சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
06.துவிஜ கணபதி: நான்கு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும் செல்வ வளம் அதிகரிக்கும்.
07.சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்கும் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. இவரை வழிபடுவதால் சகல காரியங்களும் சித்தியாகும்.
08.உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் விருத்தி, உயர் பதவிகளை பெறலாம்.
09.விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும் பயிர் விளைச்சல் அதிகரிக்கும்.
10.க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள் புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
11.ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, கல்வி, சகல வித்தைகளிலும் புகழ் பெறுவார்கள்.
12.லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள், செல்வம் அபிவிருத்தியாகும்.
13.மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தியான வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் வியாபாரம் விருத்தியாகும்.
14.புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் வழக்கு விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.
15.நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதிரம் ஜொலிக்கும் ஆறாவது கையான துடக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் ஆனந்த நடனமாடும் இவர் நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
16.ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். பச்சை நிற மேனியுடன் விளங்கும் தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை:

விநாயகர் சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது.
இலைகளும் அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும் பின் வருமாறு:
01.முல்லை இலை : அறம் வளரும்
02.கரிசலாங்கண்ணி இலை : இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
03.வில்வம் : விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
04.அறுகம்புல் : அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். இருபத்தியொறு அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது.
05.இலந்தை இலை : கல்வியில் மேன்மையை அடையலாம்.
06.ஊமத்தை இலை : மனதில் பெருந்தன்மை அதிகரிக்கும்.
07.வன்னி இலை : பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
08.நாயுருவி : முகப் பொலிவும், வசீகரமும் அழகும் கூடும்.
09.கண்டங்கத்தரி இலை : வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10.அரளி இலை: எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.
11.எருக்கம் இலை : கருவிலுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு உண்டாகும். ஊனமின்றி குழந்தை பிறக்கும்.
12.மருதம் இலை : மகப்பேறு கிட்டும்.
13.விஷ்ணுகிராந்தி இலை : நுண்ணறிவு கைவரப்பெறும்.
14.மாதுளை இலை : பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15.தேவதாரு இலை : மனோ தைரியம் அதிகரிக்கும்.
16.மருக்கொழுந்து இலை : இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17.அரசம் இலை : உயர்பதவியும், பதவியால் புகழும் கிட்டும்.
18.ஜாதிமல்லி இலை : சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
19.தாழம் இலை : செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20.அகத்தி இலை : கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. செண்பகம் இலை : நல்ல வாழ்க்கைத் துணை அமையப்பெறும் .

இருபத்தொரு வகையான இலைகளுக்கும் உரிய தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்.
மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.

English summary
Ganesha Chaturthi is the Hindu festival celebrated in honour of the god Ganesha, the elephant-headed. The festival, also known as Vinayaka Chaturthi, is observed in the Hindu calendar month of Bhaadrapada, starting on the shukla chaturthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X