For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி... பக்தர்கள் வழிபட குரு பரிகாரத்தலங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு கடக ராசியில் இருந்து மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியடைந்துள்ளார்.இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்.

திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு கடகம் ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்.

இந்த குரு பெயர்ச்சியால் மேஷம்,கடகம்,துலாம்,தனுசு,கும்பம், ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மை நடக்கப்போகிறது. ரிசபம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியினருக்கு மத்திமமான பலன்கள் கிடைக்கும். மிதுனம்,கன்னி,மகரம்,மீனம் ராசியினருக்கு பாதகமான பலன்கள் நடைபெறும்.

Guru Peyarchi Guru Parikara Temples

கலங்க வேண்டாம்

ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தாலும், அதற்காகக் கவலைப்படாமல், கலங்கித் தவிக்காமல், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால், குருவின் பேரருளைப் பெறலாம். அதேபோல், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில் குருபகவானை வழிபட்டால், இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

12 ராசிகாரர்களுக்கு குரு பரிகார தலங்கள்

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பலம் வேண்டும் மேஷ ராசிக்காரர்கள், ஆலங்குடிக்குச் சென்று தரிசிக்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் தரிசிக்க வேண்டிய தலம், தென்குடித் திட்டை; மிதுனம் தக்கோலம்; கடகம் இலம்பயங்கோட்டூர்; சிம்மம் திருப்புலிவனம்; கன்னி ராசிக்காரர்கள் பாடி (சென்னை); துலாம் ராசிக்காரர்கள் சுருட்டப்பள்ளி செல்லலாம்; விருச்சிகம் ராசிக்காரர்கள் புளியரை (தென்காசிக்கு அருகில்); தனுசு ராசிக்காரர்கள் உத்தமர்கோவில் சென்று வழிபடுவது சிறப்பு. மகரம் ராசிக்காரர்கள் கோவிந்தவாடி அகரம் சென்று வழிபடவேண்டும். கும்பம் ராசிக்காரர்கள் திருவொற்றியூர் செல்லலாம் மீனம் ராசிக்காரர்கள் மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.

என்ன பரிகாரம்

ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்களுக்கு உரிய இந்தத் தலங்களுக்குச் சென்று, 5 நெய் தீபங்கள் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக் கடலை மாலை அல்லது சுண்டல் சமர்ப்பித்து, முல்லை அல்லது மஞ்சள் நிற சாமந்தி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, சகல நலன்களும் உண்டாகும். குறிப்பிட்ட தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவகிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம்.

பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது பட்டமங்கலம். இக்கோயிலில் 2,000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. அருகிலுள்ள அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை 108முறை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்திரபாக்கியத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அயப்பாக்கம்

சென்னை அயப்பாக்கம், வட குருஸ்தலம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாக திகழ்கிறார்.

ஆலங்குடி

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும்.

குருவித்துறை

குருபகவான் வைகை ஆற்றங்கரையில் தன் மகனுக்காக தவம் புரிந்த தலம், குருவித்துறை. குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உள்ளன.

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத் தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி' ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

தென்குடித்திட்டை

தஞ்சாவூர் - திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது. நின்ற நிலையில் தட்சிணாமூர்த்தி, ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலம். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடை யம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணா மூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.

திருவலிதாயம் (பாடி)

சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார்.

திருப்புலிவனம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இங்கு சிம்ம குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். ஒரு காலை வழக்கம்போல முயலகன் மீதும், மற்றொரு காலை சிங்க வாகனத்தின் மீதும் வைத்துள்ளார். ‘அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி' என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

வேதபுரி

தேனி - மதுரை வழியில் உள்ள வேதபுரியில் பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அன்னதானம் செய்யலாம்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீன ராசிக்காரர்கள் இங்கே தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு குரு ஸ்தலத்துக்கு சென்று வியாழன்தோறும் வழிபட்டு வருவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பசுவுக்கு கேரட், முள்ளங்கி, அகத்திக்கீரை தரலாம். அன்னதானம் செய்வது சிறப்பு.

English summary
Guru Peyarchi on July 14th 2015, Tuesday morning 6.23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X