For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல தலைமுறைகளுக்கு நிம்மதி கிடைக்கும் பித்ரு தர்ப்பணம்

பித்ருகளுக்கு தர்ப்பணம் அளித்தால் தலைமுறைகள் செழிக்கும் நிம்மதி கிடைக்கும் என்கின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள்.

தேஜஸ் - வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

Pithru Tharpanam - Satisfying the ancestors

பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

முன்னோர்கள் ஆசி

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் நம்மை தேடி பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.

பித்ரு கடன்

இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பித்ரு் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.

மிகப்பெரிய நன்மை

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

சூரியனும் சந்திரனும்

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் நமக்குத் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் "பித்ரு காரகன்" என்றும், சந்திரனை "மாதுர் காரகன்" என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

அமாவாசை

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிப்பட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

தடைகள் நீங்கும்

இந்தப் புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரணதோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

பித்ரு தோஷ பரிகாரங்கள்

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட ஸ்ரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். திருப்புவனத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள்.
காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி

திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.

பித்ரு தோஷம் நீங்க

பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பணம், ஸ்ரார்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

English summary
Pithru Tharpanam means satisfying the ancestors. Rituals that are connected to satisfy your ancestors remove the curse on your family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X