For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிபகவானை கும்பிட திருநள்ளாறு மட்டுமல்ல இங்கும் போகலாம்!

Google Oneindia Tamil News

-ஜோதிட பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

சனீஸ்வர பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இந்த இடப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சோதனையும் ஏற்படும் என்று சோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார்.

Sani Peyarchi : Sani Parihara Temples in TamilNadu

பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.

சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.

சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது.

திருநள்ளாறு

சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து வருகின்றனர்.

சனிபாகவனை தரிசித்து பரிகாரம் செய்த திருநாள்ளாறு மட்டுமல்ல இன்னும் சில ஆலயங்களுக்கும் சென்று வரலாம் என்கின்றனர் ஆன்மீக வல்லுநர்கள். அவரவர் ஊருக்கு அருகில் உள்ள சனீஸ்வரன் ஆலயங்களுக்கு சென்று வரலாம் அவை எங்கெங்கு உள்ளது தெரிந்து கொள்வோம்.

வட திருநள்ளாறு

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.

அந்த லிங்கம் சுயம்புவானது. அகஸ்தியருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத்தலத்தில் காண்பித்தார். சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும்.

சனிபகவானுக்கு பரிகாரம்

சனிபகவான் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து இருந்தார். அது சனி தீர்த்தம் ஆகும். இங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தை வடதிருநள்ளாறு என்றும் சொல்கிறார்கள். திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம்

சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.

சென்னை - பூந்தமல்லி

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள்.

அருங்குளம்

திருவள்ளூர்-திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அருங்குளம். இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர். இவரை தரிசித்தால் சனிபாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சனிபகவானே ஈசனிடம் வரம் பெற்றதாக ஐதீகம்.

ஏரிக்குப்பம் யந்திரசனி

திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் யந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர்.

சிவலிங்க வடிவில் சனி

எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ‘ஷட்கோண யந்திரம்' உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்க்ஷர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

திருவாதவூர் திருமறைநாதர்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது. சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்டவ்ய முனிவரிடம் சாபவிமோசனம் கேட்டனர். அப்போது, மாண்டவ்ய முனிவர், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம். அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும் என்றார். அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர்.

தனி சந்நிதி

திருவாதவூரில் வழிபட்டவரை வருத்தாதே என்று கேட்டுக் கொண்டார். பின்பு, சனீஸ்வர பகவானின் வாதம் நிவர்த்தியாகி,

சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சந்நதியில் காட்சியளிக்கிறார். சனி பகவான் இங்கு தனி சந்நதியில் அருள்கிறார். இத்தலத்து ஈசனை வழிபட சனிபாதிப்பிலிருந்து தப்பலாம். இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோவியலூர்

விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

புதுக்கோட்டை - எட்டியத்தளி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

மொரட்டாண்டி

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறுகரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார். சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளையும் தன்னுடலில் கொண்டு நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளது.

திருக்கோடிக்காவல் பால சனி

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனார் கோயிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இத்தலத்தில் சனிபகவான் குழந்தை வடிவில் தரிசனமளிக்கிறார். எந்த ஜீவராசிகளையும் நான் பார்த்தால் அதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அப்பாவம் கரைய கோடீஸ்வரன் முன் அமர்கிறேன் என சனிபகவான் அரைக்கண்ணை மூடிய நிலையில் யோக நிலையில் அபூர்வ திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

ஸ்ரீ வாஞ்சியம்

ஸ்ரீ கும்பகோணம்-நன்னிலம்-திருவாரூர் வழியில் இத்தலம் உள்ளது. காசிக்கு நிகரான இத்தலத்தில் குப்த கங்கையில் நீராடி, எமதீர்த்தத்திலும் நீராடி, இங்கு அருளும் ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டார் சனிபகவான். மூல இறைவர்களைத் தவிர, இங்கு அருளும் யமதர்ம ராஜனையும் வணங்கினால், சனிபகவானின் அருள் நமக்கு கிட்டும்.

அறையணி நல்லூர்

திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோயிலின் பிராகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார்.

திருநெல்லிக்காவல்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.

இடும்பாவனம்

முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தி யதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.

ஈரோடு - குருமந்தூர்

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன.

பவானி - கொடுமுடி

ஈரோட்டிலிருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம்; சனிபகவான் அருள் கிட்டும்.

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமண தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது. இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக்கிடைக்கிறது என்பது ஐதீகம்.

English summary
Anandavalli Sametha Agastheeswarar Kovil at Pozhichalar is one of the Navagraha Temples around Chennai. This is probably the only Sani Parihara kshetram in Thondai mandalam. The Presiding Deity is known as Lord Agastheeswarar as this is one of the several temples where Sage Agastya worshipped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X