For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீராத பிணிகள் தீர்க்கும் ஸ்ரீ நாறும்பூநாத சுவாமி

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் திருப்புடைமருதூர் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி அருள்தரும் கோமதி அம்மன் திருக்கோயிலாகும்.

புராணச் சிறப்பு:

முன்னொரு காலத்தில் தேவர்கள் மற்றும் அசுரர்களின் யுத்த முடிவில் அசுரர்களின் வீழ்ச்சியையும் அழிவையும் கண்டு அசுரர்களின் தாயான திதி கவலையும் கடுங்கோபமும் கொண்டார். யுத்தத்தில் தேவர்களால் கொல்லப்பட்ட அசுரனான விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா என்ற மாமுனிவரை பணிந்து யுத்த முடிவையும் அவரது மகன் அவரது மகன் கொல்லப்பட்டதை கூறி வெறியை உண்டாக்கினார் தேவர்களின் அழிவுக்கு வழி செய்யும்படிக் கேட்க மகனை இழந்த மாமுனிவரும் சக்தி மிக்க வேள்விகள் பல செய்தார்.

Sri Narumbunatha Swami Temple, Tirupudayur

வேள்வியிலிருந்து கொடுமையே உருவான பயங்கர சக்தியுள்ள விருத்திரன் என்னும் அரக்கனை உண்டாக்கினார். அவன் தன் தவப்பயனால் பிரம்மாவிடம் வரங்கள் வரங்கள் பல பெற்று தேவர்களை வென்று தேவேந்திரபுரியை அடைந்தான். தோல்வி முகங்கண்ட தேவேந்திரன் தன் குருவான வியாழ பகவானை நினைத்து வழி வேண்டினான்.

வியாழ பகவானும் இந்திரனின் தோல்விக்காண காரணத்தை எடுத்துக்கூறி, பூமியில் தற்பொழுது தவ நிலையிலிருக்கும் ததீசி முனிவர், யுத்தத்தில் அசுரர்களை வெற்றி கொண்ட தேவர்கள் அடைக்கலமாக வைத்திருக்கக் கொடுத்த சக்தி மிகுந்த ஆயுதங்களை தனது உடலுக்குள் அடைத்து வைத்துள்ளார். நீ அவரைப் பணிந்து உதவி பெற்று பின் அசுரனை வெற்றிக் கொள்வாயாக என ஆசி கூறி அனுப்பினார். தேவேந்திரனும் ததீசி முனிவரை பணிந்து உதவி கேட்க முனிவரும் பிரம்மத்தோடு கலந்து கொண்ட தனது சக்தி மிக்க முதுகெலும்பைக் கொடுத்தார். விஸ்வகர்மா செயற்திறத்தால் உருவாக்கப்பட்ட அந்த வச்சிராயுதத்தால் விருத்திரனுடன் போரிட்டு வென்று அவனைக் கொன்றார் இந்திரன்.

விருத்திரனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் இந்திரனைப் பிடிக்க, அல்லல்கள் பல பெற்று இந்திரன் அமராவதி நகரை விட்டகன்று பல புண்ணிய தலங்கள் சென்றார். தோஷம் நீங்கப் பெற்றமையால் பின் குரு பகவான் அருளாசியோடு தாமிரபரணி புண்ணிய நதியில் கடனை என்ற கங்கையின் சங்கமத்தில் நீராடி அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனையும் இறைவியையும் தரிசிக்க எண்ணி எதிர்கரையில் அமைந்துள்ள மித்திரா ஆசிரமத்திற்கு இந்திரன் வந்தார்.

காட்சி தந்த இறைவன் - இறைவி

இந்திராணி தன் கணவனின் பாவம் நீங்க தேவலோகத்தில் இருந்து வெள்ளை நாவல் விதை கொண்டு வந்து மித்திர முனிவரின் ஆசி பெற்று திருப்புடைமருதூரில் வெள்ளை நாவல் மரம் நட்டு வைத்து இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இந்திரனும் இந்திராணியைக் கண்டு மகிழ்ந்து இருவரும் இறைவனை பூஜிக்க இறைவனும் இறைவியும் ரிஷப வாகனத்தில் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் குரு ஹோரையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் காட்சி தந்து வாழ்த்தினார்கள்.

நீங்கிய பாவம்

இந்திரனும் இந்திராணியும் தீர்த்தவாரியாடி பாவங்கள் நீங்கப் பெற்றனர். சூரியன் சந்திரன் இருக்கும் வரை திருப்புடைமருதூரில் உள்ள இந்த மோட்ச தீர்த்தத்தில் நீராடி அருள்மிகு நாறும்பூநாத சுவாமி உடனுறை கோமதி அம்மனை வணங்குபவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கப் பெற்று புண்ணியங்கள் பெருகும் என வாழ்த்தி இருவரும் தேவேந்திரபுரி சென்றனர்.

வரலாற்றுச் சிறப்பு

முன்னொரு காலத்தில் மருத வனமாக இருந்த இடத்தில் மான் வட்டைக்கு வந்த மன்னன் ஒரு மான் மீது அம்பு எய்தான். அம்பு பட்ட அந்த மான் மருத மரத்தின் அடிப்பகுதியில் ஓடி மறைந்தது. மறைந்த இடத்தில் கோடாரியால் வெட்டும் போது சிவலிங்கம் தென்பட்டது. சிவலிங்கத்தைக் கண்ட மன்னன் வணங்கி நின்றார், அப்போது அங்கு கோயில் கட்டுமாறு ஒர் அசரீரி கேட்டது. அந்த அசரீரி வாக்கின்படி அந்த இடத்தில் கோயில் கட்டினார் கோடாரி வெட்டுபட்ட தழும்பு, அம்பு பட்ட இடம் ஆகியவற்றை சுவாமியின் திருமேனியின் மீது இருப்பதைக்காணலாம். அம்மன் திருமேனி சிற்பியால் செதுக்கப்படாத ருத்ர திருமேனியாகும்.

தனிச் சிறப்பு

கருவூர்ச் சித்தர் சுவாமியை தரிசிக்க வரும்போது ஆற்றில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இறைவனை தரிசிக்க இயலாதோ என்று மனம் வருந்தி வடகரையில் நின்று நாறும்பூவின் மணத்தில் இருக்கும் நாதனே என்று சுவாமியை அழைக்க தாமிரபரணி வழிவிட்டது அங்கே சுவாமி சாய்ந்த நிலையில் இருந்ததை கண்டு திகைத்த கருவூர்ச் சித்தர் இறைவனிடம் காரணம் வினவ, நீ அழைத்ததால் உன் குரலுக்கு செவி சாய்த்துக் கேட்டேன் என்றார் கருவூராரும் இனி வருகின்ற பக்தர்களுக்கும் செவி சாய்த்தருளுமாறு இறைவனை வேண்டினார். அதன்படி இன்றளவும் சுவாமி சாய்ந்த நிலையிலேயே அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்

இத்திருத்தலம் வீரவநல்லூரிலிருந்து முக்கூடல் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. வீரவநல்லூர் மற்றும் முக்கூடலிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

திருவிழா:

தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, புத்திரதோஷம் அகல, தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெருகவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தியடையவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு ஆடைகள் சாத்தி ஆராதனைகள் செய்யலாம். அம்பாளுக்குப் புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயசம் படைத்தும் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றலாம்.

இறைவன் : அருள்மிகு நாறும்பூநாதர்
இறைவி : அருள்மிகு கோமதி அம்மன்
தீர்த்தம் : சுரேந்திர மோட்ச தீர்த்தம், முனி தீர்த்தம்
தல விருட்சம் :
மருதமரம்

English summary
Sri Narumbunatha Swami Temple, Tirupudayur, Tirunelveli district. Lord Shiva, a swayambumurthi graces leaning on a side slightly. There are scars of a sickle cut on the head and a hit of deer on the chest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X