For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாபம் போக்கும் ஸ்தல சயன பெருமாள்: கடன் பிரச்சினை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் என எத்தனையோ சாபங்களும், தோஷங்களும் மனிதர்களை பாதிக்கின்றன. இதே போல கடன் பிரச்சினையும் மனிதர்களை கலங்க வைக்கும், எத்தனையோ பேருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது கடன். இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கும் ஆலயம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது.

மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோவில். இது 108 வைணவ திருத்தலங்களில் 63வது தலமாகும். திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார்.

Sthala Sayana perumal temple in Mamallapuram

14ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலை கட்டி முடித்துள்ளான்.பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரைக் கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன.

இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும்.

Sthala Sayana perumal temple in Mamallapuram

படுத்த நிலையில் பெருமாள் காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957ம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு 1997 ல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேரும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட ஸ்தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர்.

Sthala Sayana perumal temple in Mamallapuram

ஸ்தல சயன பெருமாள்

இந்த ஆலயத்தில் ஸ்தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு.

சாபம் கொடுத்த வரலாறு

மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7-வது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர்.

Sthala Sayana perumal temple in Mamallapuram

முதலையாக மாறிய மன்னன்

இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்' என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் முதலையாக இருப்பாய்' என்று சாபம் கொடுத்து விடுகின்றனர்.

சாபம் நீக்க வேண்டுதல்

அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார்.குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்' என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான்.

1000 தாமரை மலர்கள்

அதற்கு முனிவர், நீ மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு' என்று கேட்க, அவனும் பறித்து கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்து கொண்டிருந்த ஸ்தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார்.

மகரியின் கோரிக்கை

அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும் என்றார்.

Sthala Sayana perumal temple in Mamallapuram

மல்லேஸ்வரரின் சாபம்

மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்' என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார். பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

மாசி மக உற்சவம்

இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.

புண்ணியம் கிடைக்கும்

மேலும் நம் முன்னோர்களுக்கு இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மகாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, ராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.

பிரச்சினைகள் தீர வழிபாடு

கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

கடன் தொல்லை தீரும்

லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.

பிரச்சினை தீரும்

மானிடராக பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும்.

Sthala Sayana perumal temple in Mamallapuram

வீடு நிலம் வாங்கலாம்

இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடல் மிகச் சிறப்பு. இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் இந்த அலயம் அமைந்துள்ளது.

English summary
Sthala Sayana perumal temple is among the 108 divya desams of SriVaishnavas and is a part of the tondai naadu divyadesams. The presiding diety here is in sleeping posture like Lord Vishnu’s form in Thirupaarkadal. The utsavar perumal is known as ulaguyya ninraan. Pundarika rishi can be seen sitting at the lord’s feet in the temple. This place is the birth place of Boothathalwar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X