உலக செஞ்சிலுவை-செம்பிறை தினம்

World Redcross Day
-புன்னியாமீன்

இன்று மே 08ம் தேதி. உலக செஞ்சிலுவை- செம்பிறை (World Red Cross and Red Crescent Day) தினமாகும்.

உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் ஒரு வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. குறிப்பாக அரபுலக நாடுகளி;ல் சிலுவை எனும் குறியீட்டுக்கும், வார்த்தைப்பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும், வார்த்தைப்பதமும் பயன்படுத்தப்படுகின்றது.. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக செஞ்சிலுவை - செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும்.

இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.

ஜெனீவாவில் பக்தியும் கருணையும் குடிகொண்டிருந்த குடும்பமொன்றில் 1828ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற அனுபவங்கள் காரணமாக சிறுபராயத்திலிருந்தே சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார். சிறிய பராயத்திலே அயலவர் படும் இன்னல் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார்.

1859 ஜுன் 25ல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய, இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணித்தியாலயங்கள் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். இவ்வாறு குற்றுயிராய்க் கிடந்தவர்களிடத்தே எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. இந்தக் காட்சி டியூனண்ட்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது.

பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் ''சோல்பரினோ நினைவுகள்' என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வினையடுத்து நாடு நாடாகச் சென்று யுத்தகளப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார். பிற்காலத்தில் வறுமையின் பிடியில் அவர் சிக்கினாலும் ஈற்றில் நோபல் பரிசுக்குரியவரானார். 1910 அக்டோபர் 30ல் உயிர் நீத்த ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது

1863ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபபட்ட தொண்டர்களை இனங்காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது. 1864ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனிவாவில் மாநாடொன்று இடம் பெற்றது. இம்மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களே ஜெனீவா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மனிதனையும் அவரின் பெருந்தன்மைகளையும் கெளரவிக்கவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதில் தரையில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது கப்பல் உடைந்ததால் பாதிக்கப்பட்ட ஆயுதந்தரித்தோரைக் காப்பாற்றல் யுத்தக் கைதிகளைப் பாதுகாத்தல் பொதுமக்களைக் காத்தல் சர்வதேச ஆயுத மோதல்களினாலும் உள்நாட்டில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாத்தல் என்பன ஜெனீவா சாசனத்தில் காணப்படுகிறது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922ல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.

1934ம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984ல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் உலகிலேயே மிக விரிவாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ சமயத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ளமையினால் இஸ்லாமிய நாடுகளில் அதன் சின்னம் செம்பிறையாகக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தங்களினால் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளன. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

01. மனிதாபிமானம்
02. பாரபட்சமின்மை
03. நடுநிலைமை
04. சுதந்திரத் தன்மை
05. தொண்டு புரிதல்
06. ஒற்றுமை
07. சர்வவியாபகத் தன்மை என்பனவே அவை.

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி, பிரதேச பேதமின்றி இவ்வியக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. முரண்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் எத்தரப்பினரையும் சாராது, அரசியல் வேறுபாடுகளில் அக்கறை காட்டாது, நடுநிலைமையுடனும், சுதந்திரத்துடனும் இது செயற்பட்டு வருகின்றது. அதேவேளை அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே கருமமாற்றுகிறது.

1936ல் இலங்கை மக்களைத் தாக்கிய மலேரியா மற்றும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தவென இலங்கை அரசுக்கு உதவிபுரியும் வண்ணம் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கிளையொன்று இலங்கையில் அமைக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இக்கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமென மாறியது. 1952ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் இலங்கை இணைந்து கொண்டது.

ஆரம்பத்தில் இரத்ததானம் முதற்சிகிச்சை முதலுதவிக்கான பயிற்சி வழங்கல், நடமாடும் சுகாதார சேவை வழங்கல் விபத்துக்குள்ளானவர்களுக்கு உணவு உடை, உறையுள் என்பவற்றை வழங்கல். வரட்சி, வெள்ளப் பெருக்கு, யுத்தம் குண்டு வெடிப்பு, வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கான பயிற்சிகள், போன்ற சேவைகளை வழங்கியது.

இலங்கையில் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் இது முன்னின்று செயற்படுகின்றது. போரின் நிமித்தம் சிறைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடல், தடுப்புக் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையிடல், எதிர்த்தரப்பினரின் தடுப்புக் காவலிலுள்ள இராணுவத்தினரையும், பொதுமக்களையும் பார்வையிடல், காணாமற்போகும் நபர்களைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அக்கறை காட்டுதல், யுத்தப் பிரதேசத்திலுள்ளவர்களை அழைத்து வருதல், குடும்பச் செய்திகளைப் பராமாறுதல் போன்றவற்றுடன் இரு தரப்பினரிடையே சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறது.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் எடுத்துச் செல்லல், நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதியளித்தல், தொழில் மீட்சிக்கு உதவுதல், மருத்துவ உதவி வழங்கல் தற்காலிக கூடரங்களை அமைத்தல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம் அதன் அனுபவத்தையும் சர்வதேச அமைப்புகளின் அனுபவமிக்க தொண்டர்களையும் இலங்கையில் நீண்டகால சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இத் தொண்டர்கள் பாதிப்புக்குள்ளாகியமையும் நோக்கத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் சேவைகள் அண்மைக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போதைய யுத்த நிலையில் மேற்கொண்டு வரும் சேவைகள் எமக்கு கண்கூடான உதாரணங்களாகும்.

Please Wait while comments are loading...

Videos