For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார பெருமந்தம்: சமாளிப்பது எப்படி?

By Staff
Google Oneindia Tamil News

Ravindran (a) Sendalal Ravi
-செந்தழல் ரவி

2000ம் ஆண்டு. இப்போது உள்ளது போல அந்த வருடமும் தகவல் தொழில் நுட்ப துறையினருக்கு ஒரு கடினமான ஆண்டு தான்.

ஒய் டூ கே பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறையை அடித்து துவைத்து காயப்போட்டு அயர்ன் செய்திருந்தது.

எனக்குத் தெரிந்த சென்னையை ஒரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் ஜாவாவை அப்டெக்கில் பழகிவிட்டு டாலர் கனவுடன் அமெரிக்கா சென்றது இதற்கு முந்தைய ஆண்டு. அவர் உட்பட என்னுடைய நன்பர்கள் பலர் அமெரிக்கா ரிட்டர்ன்களானார்கள்.

மருத்துவர் மறுபடியும் ஸ்டெத்தை எடுத்தார். வேறு தெழில் தெரியாதவர்கள், உப்புமண்டி வைக்கலாமா, உறைந்த தயிரை பாக்கெட்டில் அடைத்து விற்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்த நேரம்...

அந்த ஆண்டு படித்து முடித்து வேலையில் சேரும் கனவுடன் நிறுவனங்களின் கதவை தட்டினால் வாட்ச்மேனை தாண்டி உள்ளே போக முடியவில்லை.

காஸ்ட் கட்டிங், லே ஆப் என்ற புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை டிக்சனரியில் தேட ஆரம்பித்திருந்தார்கள் சென்னையை சேர்ந்த தகவல் தொழில்நுட்பவியலாளர்கள்...

நான் அப்போது அம்பத்தூரில் இருந்து திருவாண்மியூர் வரை 47D யில் அலைந்து பல கம்பெனிகளுக்கு என்னுடைய ரெஸ்யூமை பிட் நோட்டீஸ் போல விநியோகித்தும் பலனில்லை.

ஒரு கம்பெனி வரும் ரெஸ்யூம்களை பழைய பேப்பர் கடையில் போட்டு டீ செலவை பார்த்துக் கொள்ளும்படி வாட்ச்மேனை சொல்லிவிட்டது. அதனால் அந்த வாட்ச்மேன் மட்டும் ரெஸ்யூம் கொடுத்தால் அன்போடு வாங்குவார். மற்றவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா..

அந்த சூழ்நிலையை இப்போது உள்ள உலகளாவிய பொருளாதார பெருமந்த சூழ்நிலையினை அப்படியே பொருத்திப்பார்க்கலாம்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடி வெறுத்துப்போன ஒரு சூழலில்...அமைதி தேடி ஒருமுறை திருவண்ணாமலை ரமணாஷ்ரம் சென்றிருந்தேன்...

மாலை நேரம். ரம்மியமான அந்த சூழலில் ஒரு சிறிய படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். பக்கத்தில் காவி உடை அணிந்த ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.

வாட்டமான என்னுடைய முகத்தை கண்டு "என்ன தம்பி கவலை" என்று விசாரித்தார்.

என்ன இது திடீரென்று ஒருவர் வந்து நம்மிடம் பேசுகிறாரே, அதுவும் அதிரடியாக நமக்கு உள்ள கவலையை கேட்கிறாரே என்று கொஞ்சம் கூச்சப்பட்டேன்.

அப்புறம் அவர் அழுத்தி கேட்கவும்...பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன்.

அப்புறம் அவர் பேச்சை மாற்றி, "என்ன பண்றீங்க" என்றார்...

"சும்மாத்தான் இருக்கேன்" என்றேன்...

"சும்மா இருக்கேன்னு சொல்லாதீங்க தம்பி...வேலை தேடிக்கிட்டிருக்கேன்...அல்லது தொழில் செய்ய முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்...அல்லது படிச்சுக்கிட்டிருக்கேன்...என்று சொல்லுங்க..."

உங்களை போன்ற இளைஞர்களின் வாயில் இருந்து "சும்மா இருக்கேன்" என்ற வார்த்தை வரக்கூடாது தம்பி...என்றார்...

சுர்ர்ர்ர்ர்ர்...என்று கோபம் வந்து, விருட்டென அங்கிருந்து எழுந்து வந்துவிட்டேன்.

திரும்ப ஊருக்கு வரும்போது அவர் சொன்னது மனதை விட்டு அகலாமல் சுற்றிச்சுற்றி வந்தது.

அதனால் எழுந்த சுய தேடலில் விளைவாக ஒரு சிறிய நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணியில் சேர்ந்து, அதன் பிறகு சில நல்லவர்களின் உதவியால் வேறு நல்ல வேலைக்கு மாறி, என்னுடைய சொந்தக்கதை இப்போது வேண்டாம்...

இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் நிலைமை சீரடைந்து, நிறுவனங்கள் மீண்டும் அழைக்க ஆரம்பித்தன, உலக பொருளாதாரமும் உயர ஆரம்பித்தது.

எனக்கு தெரிந்தவரை, இப்போது அதுபோன்றதொரு நிலைதான் இருக்கிறது என்பேன்.

படித்து முடித்தவர்கள், இளம்பொறியாளர்களுக்கு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரவில்லை..

ஏற்கனவே வேலைக்கான உத்தரவை கொடுத்த நிறுவனங்களில் இருந்துகூட பணி வாய்ப்பை பெற்றவர்களை அழைக்கவில்லை.

நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்து, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆக, நிலைமை அவ்வளவு சுகமாயில்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது.

சரி, இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த பெரு மந்தத்தை எதிர்கொள்வது? என்ன வகையான தயார்ப்படுத்துதல்களை செய்ய வேண்டும்?

1. ஒரு குறிப்பிட்ட துறையில் இருப்பவர்கள், வேறு துறையில் உள்ள நுட்பங்களை பழகவேண்டும். வெப்சைட் டிசைனிங் துறையில் பணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், பைத்தான், பெர்ல், சிஜிஐ போன்றவற்றை பழக வேண்டும். மேனுவல் டெஸ்டிங் துறையா? ஆட்டோமேஷன், சில்க் டெஸ்ட், க்யூடிபி, ரேஷனல் ரோபோ போன்றவற்றை பழக வேண்டும்.

2. சி, ஜாவா? இன்ஸ்டால்ஷீல்ட், யூஎமெல், ஆக்சுவேட், க்ரிஸ்டல் ரிப்போட், பிஸினஸ் ஆப்ஜெக்ட், காக்னோஸ் என்று கரிக்குலத்தை பெரிதாக்குங்க..

3. டேட்டாபேஸ்? டேட்டா மாடலிங், மற்ற ரிப்போட்டிங் டூல்ஸ், எம்.எஸ் ப்ராஜக்ட்ஸ், ஓஓஏடி என்று பழகுங்கள்.

4. டெலகாம் டொமைன்? வீலேன், வைமேக்ஸ், டிசிபி ஐபி, யூஎஸ்பி, ஏடி கமேண்ட்ஸ் என்று விரிவடைந்து கொள்ளுங்கள். கூகிள் அன்ட்ராய்ட், ஜே2எம்.இ எஸ்டிக்கே, ஆப்பிள் எஸ்டிக்கே, சிம்பியன் எஸ்டிக்கே என்று உங்கள் ரெஸ்யூமை கலர்புல்லாக்குங்க...

5. டெக்ட்ரீ போன்ற இணைய தளங்களில் இருந்து இன்றைய நாளைய தொழில்நுட்ப விடயங்களை அறிந்துகொள்ளுங்கள்..

6. குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம்- பயனுள்ள விஷயங்களை- மறுபடி சொல்கிறேன் - பயனுள்ள விஷயங்களை பார்ப்பதில் மட்டும் இணையத்தை செலவிடுங்கள்...

இளம்பொறியாளர்கள், மற்றும் வேலை தேடுபவர்கள், நிறுவனங்களை மட்டும் நம்பியிராமல் மைக்ரோ லெவல் ப்ராஜக்ட்ஸ் தரும் இணைய தளங்களில் ப்ராஜக்ட் எடுக்கலாம்.

கெட் எ ப்ரீலேன்ஸர், ப்ராஜக்ட்ஸ்பார்கையர், ஓடெஸ்க் போன்ற தளங்களில் இருந்து இந்த ப்ராஜக்ட்ஸ் எடுக்கலாம்.

இங்கே ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். இந்த தளங்களில் வெப் டிசைனிங், லோகோ டிசைன் போன்ற சிறிய ப்ராஜக்ட் எடுக்க புகுந்தீர்கள் என்றால் அவ்வளவு எளிதல்ல. ஏன் என்றால் ஏற்கனவே இந்த தளங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், மிகுந்த அனுபவத்துடன் ப்ராஜக்டுகளை தட்டிச் செல்வார்கள்.

நீங்கள் இங்கே ப்ராஜக்ட்ஸ் எடுக்கவேண்டும் என்றால் உண்மையில் சரக்கு இருந்தால் தான் முடியும். அதுவும் நீங்கள் மொபைல் அப்ளிக்கேஷன் அல்லது ஆப்பிள் ஐபோனுக்கான டெவலப்மெண்ட் அல்லது கூகிள் எஸ்டிக்கேவான ஆண்ராயிடு பழகியிருந்தீர்கள் என்றால் போட்டி குறைவு..

எளிதாக உங்களது திறமையால் ப்ராஜக்ட்டுகளை தட்டிவிடலாம். மேலும் இந்த தளங்களில் பணம் ஏதும் செலுத்தாமலேயே நீங்கள் பிராஜக்ட் எடுக்கலாம்..

ஒரு சில நல்ல சாம்பிள்கள், அப்ளிக்கேஷன்கள் டெவலப் செய்திருந்தீர்கள் என்றால் அதனை காட்டி உங்கள் திறமையை நிரூபிக்கலாம்..

இருக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து வெற்றி பெறுங்கள்...

அன்பான உறவுகளே...எந்த நிலையிலும் மனம் தளரவிடாமல் உறுதியோடு போராடினால் வெற்றி உங்களுக்குத்தான்...

பல ஆண்டுகளுக்கு முன் அமரர் சுஜாதா அவர்கள் ஜாவா, லினக்ஸ் பழகுங்கள் என்று ஒரு வெகுஜன வார இதழில் எழுதி அது பல இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது...

இன்றைக்கு இந்த பொருளாதார பெருமந்த சூழ்நிலையில் புதிய விஷயங்களை தொலைநோக்கு பார்வையுடன் செய்வதால் மட்டுமே நம்மால் இதில் இருந்து மீண்டு வரமுடியும்...

அம்மாவுடன் ரசத்தில் உப்பில்லை என்பதற்கு சண்டை, டி.வி சீரியலை மாற்றி கிரிக்கெட் வைப்பதற்கும் போட்டி, அப்பாவிடம் ஊர் சுற்ற பைக் பெட்ரோலுக்கு தகறாறு என்பதை எல்லாம் மறந்துவிட்டு, இளையோர்களே, உங்கள் பார்வையை அகலமாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது...

ஆங்கில அறிவை விரிவாக்குங்கள். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே என்று ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு, என்ன என்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியுமோ அத்தனையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வாருங்கள்..

இன்றைக்கு தொழில்நுட்ப உலகம் கணிப்பொறியை சுருக்கி கை அகலத்தில் கொண்டுவர முயல்கிறது. அதனால் தொலைதொடர்பு சம்பந்தமான, அலைபேசி சம்பந்தமான துறைகள், அலைபேசிக்கான விளையாட்டு, அலைபேசிக்கான மென்பொருட்கள் என்று எதையாவது தயாரியுங்கள். குழுவாக தோழர்கள் தோழிகள் இணைந்து இது போன்ற முயற்சிகளில் இறங்குங்கள்.

பொருளாதாரம் ஆறு மாதத்தில் அல்லது ஒரு ஆண்டில் சீரடையும்போது, நேர்முக தேர்வில் "கடந்த ஆண்டு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்" என்ற கேள்விக்கு " வேலை தேடிக் கொண்டிருந்தேன்" என்பதைவிட கூகிள் அல்லது சிம்பியான் அலைபேசிக்கான ஒரு மென்பொருளை/ விளையாட்டை ஒரு குழுவாக இணைந்து தயாரித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்வது எவ்வளவு அற்புதமானதாக இருக்கும்?.

கட்டுரையில் பயன்படுத்திய டெக்னிக்கல் விஷயங்கள் தளங்களுக்கான கீ வேர்டுகளை ஆங்கிலத்தில் கீழே தருகிறேன். நீங்களே கூகிள் 'ஆண்டவரிடம்' கேட்டு பார்த்துக் கொள்ளுங்கள்...

தொழில்நுட்ப சமாச்சாரங்கள்:
1. Google Android
2. Apple SDK
3. Symbion SDK - carbide C++
4. J2ME SDK
5. Python / Perl
6. Ubundu Linux

பணிகள் பெற இணைய தளங்கள்:
1. www.getafreelancer.com
2. www.odesk.com
3. www.projects4hire.com
4. www.elance.com

தொழில்நுட்ப பொது அறிவு தளங்கள்:
1. www.techtree.com
2. http://news.cnet.com/
3. http://www.geeknewscentral.com/

வாழ்த்துக்கள்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X