For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 5: நானும் கடவுளும்

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வழக்கமாக வாசகர்கள் எனக்கு எழுதும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு கடிதங்களாவது கடவுளைப் பற்றி இருக்கிறது. கடவுளைப் பற்றி நிறைய கேட்கிறார்கள்.

அதில் சில கேள்விகள் கிண்டலாக இருக்கும். சமீபத்தில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி இது.

பல பெயர்களிலும் பல உருவங்களிலும் கடவுள்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்தக் கேள்வியைப் படித்ததும் எனக்கு காஞ்சி ஸ்ரீ சரஸ்வதி ஸ்வாமிகள் சொன்ன வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தன.

"கடவுள் ஒருவரே... ஆனாலும் பல பெயர்களிலும் பலவித உருவங்களிலும் கடவுளை வழிபடுவது கேலிக்குரிய ஒன்றல்ல. ஒரு பிள்ளையை அவனுடைய அம்மா ஒரு பெயரிலும், அப்பா இன்னொரு பெயரிலும், நண்பர்கள் பிறிதொரு பெயரிலும் அழைப்பார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேறு ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார். அந்தப் பிள்ளையோ ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு உடையாக அணிந்து செல்லும். விதவிதமாய் அலங்கரித்துக் கொள்ளும். இத்தனைக்கும் ஆள் மாறுபடுவதில்லை. பெயர் மாறும், உடை மாறும்.

Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal -5

அதைப் போலத்தான் பலப்பல பெயர்களிலும் உருவங்களிலும் இருந்தாலும் கடவுள் ஒருவரே! ஒவ்வொருவரும் எப்படியும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடவுளுக்கு பல உருவங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் இந்த உருவ வழிபாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகத்தை படைத்து நடத்துகிற ஒரு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி, கசிந்து உருகிய மனதோடு ஒருவன் 'பகவானே! உன்னுடைய உருவம் எது என்று எனக்குத் தெரியாது. எனக்கு உன்னுடைய உண்மையான உருவத்தைப் பார்க்க ஆசை. என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்ற வேண்டும்' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தால் சர்வ நிச்சயமாய் கடவுள் ஏதாவது ஒரு வகையில் கனவிலாவது தோன்றி தன் உருவத்தைக் காட்டுவார். கடவுள் எல்லாவற்றையும் அறியும் தன்மை கொண்டவர். சிறு துரும்பு கீழே விழும் சத்தத்தையும் அவர் அறிவார். எனவே உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் சர்வ சத்தியமாய் அவர் காதுகளில் விழும்.

சிலருக்கு மனிதனைப் படைத்தது கடவுள்தானா என்பதில் சந்தேகம். ஒரு வீட்டை வடிவமைத்துக் கட்டியது ஒரு எஞ்ஜினியர் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளும் நாம், மனிதனைப் படைத்தது இறைவன்தான் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து விஞ்ஞானம் பேசுகிறோம். கடவுள் மனிதனைப் பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கிறான்.

ஒரு சாண் வயிறு, பார்க்க இரண்டு கண்கள், கேட்க இரு காதுகள், சுவாசிக்க நாசி, உணவு உண்ண வாய், பற்கள், நாக்கு, பேசக் குரல் நாண்கள். இந்த ஆச்சர்யங்களைக் காட்டிலும் பெரிய ஆச்சர்யம் எது என்றால், உரலில் அரசி போட்டு தண்ணீர் விட்டு ஆட்டுவார்கள். ஆனால் நாம் சாப்பிடும்போது, நமது உணவை வாயில் அரைப்பதற்கு நீர் எங்கிருந்து வருகிறது? அந்த உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது இறைவன் அல்லவா! இறைவனின் படைப்பில் மனிதன் மட்டும் அதிசயமானவன் கிடையாது. அவன் படைத்த எல்லாமே அதிசயமானது, பாதுகாப்பானது.

புளி பிசுபிசுப்பாக உள்ள ஒரு பொருள். அது மரத்திலிருந்து கீழே விழுந்தால், அந்த பிசுபிசுப்பில் மண் ஒட்டிக் கொண்டு யாருக்குமே உபயோகப்படாமல் போய்விடுமே என்பதற்காக அதற்கு ஒரு உறையைக் கடவுள் போட்டுள்ளார். உயரத்தில் காய்க்கின்ற தேய்ங்காய்க்கு கெட்டியான ஓடு, அந்த ஓட்டுக்கு மேல் 'ஷாக் அப்சர்வர்' மாதிரி கெட்டியான நார். இவையெல்லாம் ஏன் தெரியுமா? தேங்காய் எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் உடையாமல் இருப்பதற்காகத்தான். இப்படி நாள் முழுக்க இறைவன் படைத்த பொருள்களையும், அந்தப் பொருள்களுக்கு அவன் செய்து வைத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் என்னுடைய பனிரெண்டாவது வயதிலேயே இந்த உலகத்தில் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அந்தக் கடவுள் ஒரு தாயின் அம்சமாக இருந்து அருள்பாலிக்கத் தயாராக இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டேன். கோவையில் தெப்பக் குளம் மைதானம் என்ற இடம் மிகவும் பிரசித்தமானது. காரணம், கோவையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால், எந்த அரசியல் கட்சியாவது விருப்பப்பட்டால் கைகொடுக்கக் கூடிய ஒரே இடம் இந்த தெப்பக் குளம் மைதானம்தான். இந்த மைதானத்தில் மைக் பிடித்துப் பேசாத அரசியல் கட்சித் தலைவர்களே கிடையாது. தங்களை நாத்திகவாதிகள் என்று பெருமையாய் சொல்லிக் கொண்டவர்கள், பிள்ளையார் சிலைகளை போட்டு உடைத்ததும் இந்த தெப்பக் குளம் மைதானத்தில்தான். பின் அதே நாத்திகவாதிகள், மார்கழி மாத பஜனையில் கலந்து கொண்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை சத்தம் போட்டுப் பாடி வந்ததையும் அதே மைதானத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த தெப்பக்குள மைதானத்தில்தான் எனக்கு வீடு. மைதானத்தின் மேற்குப் பகுதியில் அன்னை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரியின் கோயில் அமைந்து இருந்தது.

என்னுடைய பனிரெண்டாவது வயது வரையிலும் இந்தக் கோயில் என்னைப் பொறுத்தவரைக்கும் பிரசாதம் வழங்கும் இடம். நவராத்திரி நாட்களில் புளியோதரை, சுண்டல், மார்கழி மாத காலைகளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கள். அமாவாசை நாட்களில் இலைபோட்டு அன்னதானம், ஏகாதசி, சிவராத்திரி நாட்களில் தொன்னைகளில் பால் பாயாசம். இந்த மெனு எனக்கு மட்டுமல்ல, அந்த நாட்களில் என் வயதையொத்த எல்லாருக்குமே மனப்பாடம்.

பிரசாதங்களைப் பெற்று சாப்பிடுவதற்காக மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்த நான், என் பனிரெண்டாவது வயதில் முதல் முறையாக ஒரு பர்சனல் கோரிக்கையோடு, அம்பாளைக் கும்பிடப் போனேன்.

அம்பாளிடம் நான் வைத்த பர்சனல் கோரிக்கை இதுதான்: "அம்மா தாயே.. இப்ப எனக்கு கணக்குப் பாடம் சொல்லித் தர்ற வாத்தியார் ரொம்ப கோவக்காரர். கணக்கை தப்பா போட்டுட்டால் கண் மண் தெரியாமல் அடிக்கிறார். வகுப்புக்குப் போகவே பயமாய் இருக்கு. அந்த கோபக்கார கணக்கு வாத்தியாருக்கு பதிலாக வேறு ஒரு நல்ல கணக்கு வாத்தியாரை அனுப்பி வைக்கக் கூடாதா...? அப்படி நீ அனுப்பி வச்சா, இந்த கோயிலுக்கு தினசரி வந்து உன்னைக் கும்பிடறேன்!'

இப்படி பிரார்த்தனை செய்து விட்டு மறுநாள் காலை பள்ளிக்குப் போனேன். 11 மணிக்கு கணக்கு வகுப்பு. நம்பினால் நம்புங்கள். அந்த முரட்டுக் கணக்கு வாத்தியார் வரல. அவருக்குப் பதிலாக சிரிக்கச் சிரிக்கப் பேசும் புது கணக்கு வாத்தியார் கணக்குப் பாடம் எடுத்தார். அவர் கணக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் முறையும் சுலபமாக இருந்தது. எல்லா மாணவர்களும் 'ஹோம் ஒர்க்கை' ஒழுங்காகச் செய்து முடித்தால், பீரியட் முடிவில் ஒரு பத்து நிமிஷம் ஒரு குட்டிக் கதை சொல்வார்.

என் வேண்டுகோளை ஒரு நாளில் நிறைவேற்றி வைத்த அம்பாள் கோயிலுக்கு அன்று முதல் மாலை வேளைகளில் செல்ல ஆரம்பித்தேன். அதன்பிறகு, நான் அம்பாளிடம் வைத்த சின்னச் சின்ன கோரிக்கைகள் எல்லாம், கோரிக்கைகள் வைத்த அடுத்த சில நாள்களிலேயே நிறைவேறின. இப்போது நான் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் நினைத்துப் பார்த்தால், அவைகளில் பொதிந்து இருந்த ஒரு உண்மை பிடிபட்டது.

நான் அம்பாளிடம் வைத்த எல்லா கோரிக்கைகளிலும், ஒரு தார்மீக நியாயம் இருந்தது.

"கடவுள் ஒருவர் நிச்சயமாய் இருக்கிறார்" என்று நான் ஆணித்தரமாய் நம்புவதற்கு இன்னொருவரும் காரணமாயிருந்தார். அவர் வேறு யாருமில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அப்போது பள்ளிக்குப் பின்புறம் இருந்த மைதானத்தில் ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு, அங்கே வாரியார் ஸ்வாமிகளின் மஹாபாரத கதாகாலட்சேபம் தினசரி நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. (மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும்)

வாரியார் ஸ்வாமிகள் கதாகாலட்சேபம் நடத்தும்போது அவருக்கு முன்பாய் பத்து பதினைந்து சிறுவர்கள் எப்போதும் உட்கார்ந்து இருப்பார்கள். அவர் ஏதாவது ஒரு கேள்வி கேட்டுவிட்டு சிறுவர்களிடம் பதில் என்ன என்று கேட்பார். சரியான பதில் சொல்லும் சிறுவனுக்கு அவர் ஒரு சிறிய பாக்கெட் சைஸ் கந்தர் சஷ்டி புத்தகத்தைக் கொடுப்பார். நானும் அந்த கும்பலில் இருப்பேன். ஆனால் ஒரு தடவை கூட பரிசு வாங்கியது கிடையாது. ஆனால் வாரியார் சுவாமிகள் 'கடவுள் இருக்கிறார்' என்பதற்கு அவர் சொல்லும் எளிமையான உதாரணங்கள் என்னுடைய மனதுக்குள் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும்.

Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal -5

அவர் ஒரு முறை இப்படிச் சொன்னார்.

"சில பேர் கோயிலுக்குப் போவாங்க. விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. கும்பிடும்போதே மனசுக்குள் ஒரு சந்தேகம் லேசா எட்டிப் பார்க்கும். கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா இல்லையாங்கற சந்தேகம்தான் அது. என்னோட தலைக்கு மேல வெளிச்சம் கொடுத்துக்கிட்டிருக்கிற இந்த ட்யூப் லைட்டை மாட்டினது யார்னு கேட்டா உடனே எலக்ட்ரீஷியன்னு பதில் வரும். இந்த பதிலை நாம் எல்லோரும் நம்பறோம். ஏன்னா அது உண்மை. இந்த இடத்துக்கு மட்டும் வெளிச்சம் தர்ற ட்யூப்லைட்டை மாட்டினது ஒரு எலக்ட்ரீஷியன்னு சொன்னா நம்பற நாம், இந்த உலகம் முழுவதற்கும் வெளிச்சம் தரக்கூடிய சூரியனை உயரத்திலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் பொருத்தி வச்சிருக்கிறது கடவுள்னு சொன்னா ஏன் நம்ப மாட்டேங்கறோம்?"

இப்படி அவர் சொன்ன எத்தனையோ விஷயங்கள் என்னை நிரம்பவே கடவுளிடம் நெருங்க வைத்தது. போகப் போக, வயது ஏற ஏற இன்னொரு உண்மையும் புரிந்தது.

வெறுமனே கோயிலுக்குப் போய், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்துக் கொண்டு கடவுளைக் கும்பிடுவதால் மட்டுமே அவனுடைய அருள் கிடைத்துவிடாது. நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே தவர, புண்படுத்தக் கூடாது. பெற்றவர்களையும் பெரியோர்களையும் மதிக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வமாய் நினைக்க வேண்டும். நம் நிலை உயரும்போது பணிவு கொள்ள வேண்டும். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்று எண்ண வேண்டும்.

நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த இறையருளே தவிர, வேறு ஒரு காரணமில்லை. 'நீ எழுது!' என்று இறைவன் எனக்கு இட்ட பணியை நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். நான் என் கையில் 'பேனா' பிடிப்பதோடு சரி.

என்னை எழுத வைப்பதும்...
அதை வாசகர்களைப் படிக்க வைப்பதும்..
அந்த இறையருள் மட்டுமே.

-மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை...

English summary
Here is the 5th episode of Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X