For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 26

By Shankar
Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள்... அதை நோக்கி விசாரணையைத் தொடர்கிறார்கள்.

Rajeshkumars crime thriller One + One = Zero - 26

இனி...

விவேக்கும் விஷ்ணுவும் அந்தப் புத்தகப் பதிப்பாளர் ஜெகந்நாதனை வியப்பான பார்வைகளால் நனைத்தார்கள்.

விவேக் கேட்டான்.

"நீங்க கேட்ட அந்தக் கேள்விக்கு சுடர்கொடி என்ன பதில் சொன்னா?"

"இந்த மந்திரம் தந்திரம் மூலமாய் ஒருத்தரோட மனசை மாத்தி அவங்களை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டுட்டு வரலாம்ன்னு இது மாதிரியான புத்தகங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது உண்மையா பொய்யான்னு ஒரு ஆராய்ச்சி பண்ணத்தான்னு சொன்னாங்க"

"நீங்க அதுக்கு என்ன பதில் சொன்னீங்க?"

"நான் பதில் சொல்றதுக்கு முந்தி சுடர்கொடிக்கு ஏதோ ஒரு போன் வந்தது. அட்டெண்ட் பண்ணிப் பேசினாங்க. பேச பேசவே லேசாய் டென்ஷன். அப்படியா.... அப்படியான்னு ஆச்சர்யமாய் கேட்டாங்க. அந்த சமயத்துல நான் ஒரு விஷயத்தை நோட் பண்ணினேன் ஸார்"

"என்ன அது?"

"சுடர்கொடி போன்ல பேசிட்டிருக்கும் போதே என்கிட்டே பேனாவும், ஒரு சின்ன பேப்பர் துண்டும் வேணும்ன்னு கேட்டாங்க. நானும் உடனே கொடுத்தேன். சுடர்கொடி போன்ல 'லேண்ட் மார்க் சொல்லுங்க. நொளம்பூர்க்கு பக்கத்துல 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ்... அதுக்கு நேர் எதிர் ரோட்ல 'ரெண்டாவது கட்'ல அது இருக்கா... சரி.. இனி நான் பார்த்துக்கறேன்'னு சொல்லிகிட்டே போனை ஆஃப் பண்ணிட்டு பேப்பர்ல எழுதிக்கிட்டாங்க...."

"அப்புறம்...?"

"அதுக்கப்பறம் சுடர்கொடி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கலை. உடனே கிளம்பிப் போய்ட்டாங்க"

விவேக் யோசிப்போடு கேட்டான். "அந்த லேண்ட் மார்க் என்னான்னு இன்னொரு வாட்டி சொல்லுங்க"

ஜெகந்நாதன் சொன்னார்.

"நொளாம்பூர்க்குப் பக்கத்துல 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ். அதுக்கு நேர் எதிர் ரோட்ல 'ரெண்டாவது கட்'ல அது இருக்கு."

"அதுன்னா... எது?"

"எனக்குத் தெரியலை ஸார்"

இப்போது விஷ்ணு குறுக்கிட்டு கேட்டான்.

"இவ்வளவு நாளைக்கு பின்னும் அந்த லேண்ட் மார்க் விஷயத்தை ஞாபகத்துல வெச்சு இருக்கீங்களே அது எப்படி...?"

"அது என்னமோ தெரியலை ஸார்... அன்னிக்கு சுடர்கொடி எனக்கு முன்னாடி உட்கார்ந்து பேசினது அப்படியே மனசுக்குள்ளே பதிஞ்சு போயிடுச்சு...!"

விவேக் எழுந்தான்.

"ஜெகந்நாதன்"

"ஸார்..."

"நாங்க இந்தப் புத்தகத்தைப் பற்றி உங்க கிட்டே விசாரிக்க வந்தோம். ஆனா இந்த கேஸுக்கு உபயோகப்படற மாதிரி ஒரு முக்கியமான தகவலையும் கொடுத்து இருக்கீங்க... இப்போதைக்கு இதை வெளியே யார்கிட்டயும் சொல்லாதீங்க..."

ஜெகந்நாதன் சரி என்கிற பாவனையோடு சற்றே மிரட்சி பரவிய விழிகளோடு தலையாட்டி வைத்தார்.

........................................................

மத்தியானம் ஒரு மணி.

சென்னை வெயில் அமிலமாய் மாறி உச்சந் தலைகளை பொசுக்கிக்கொண்டிருந்தது.

விவேக் காரை ரோட்டோரமாய் நிறுத்திவிட்டு விஷ்ணுவிடம் திரும்பினான்.

"வெஸ்ட் முகப்பேர் வந்துட்டோம்.... இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் போனா நொளாம்பூர் வந்துடும். அந்த 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ் எங்கே இருக்குன்னு அது அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போய் ட்ரைவர்ஸ் கிட்டே கேட்டுட்டு வா...."

"ஒவ்வொரு ஆட்டோ ட்ரைவரும் ஒரு கூகுள் மேப்புக்கு சமம் பாஸ்... அஞ்சு நிமிஷத்துக்குள்ளே தகவலோடு வர்றேன் பாஸ்"

விஷ்ணு காரினின்றும் இறங்கி ரோட்டை கிராஸ் செய்து எதிர்பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்டை நோக்கிப் போனான். விவேக் தன செல்போனை எடுத்து ஓர் எண்ணைத் தேடித் தேய்த்து விட்டு மெல்ல குரல் கொடுத்தான்.

"ஸார்... குட் ஆஃப்டர் நூன்..."

"குட் ஆஃப்டர் நூன் மிஸ்டர் விவேக்.... எனக்கு நீங்களே போன் பண்ணியிருக்கிங்க.... எனிதிங்க்.... இம்பார்ட்டண்ட் ?" மறுமுனையில் தியோடர் ஒரு மெலிதான சிரிப்போடு கேட்டார்.

"எஸ்... ஸார்... ஐ ஹவ் காட் ஏ க்ளூ. அதை நோக்கித்தான் ட்ராவல் பண்ணிட்டிருக்கேன்...."

"குட்.... அது இதுமாதிரியான 'க்ளூ'ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா....?"

"எனக்கே இன்னும் அது பிடிபடலை ஸார். ஒரு மணி நேரம் கழிச்சு நானே உங்களுக்கே போன் பன்றேன்"

"இட்ஸ் ஓ.கே.... வெயிட்டிங் ஃபார் யுவர் கால்"

விவேக் குரலைத் தாழ்த்தினான். "ஸார்.. பை..த...பை... அந்த ஜெயவேல் இன்னும் போலீஸ் சர்ச் ஸ்க்வாட் கிட்டே மாட்டலையே?"

"நாட் யெட்.... ஆனா இன்னிக்கு ராத்திரிக்குள்ளே ஜெயவேலை எப்படியும் போட்டுத் தள்ளிடுவாங்க... மொதல்ல சுட்டுத் தள்ளற கமாண்டோ ஆபீஸருக்கு அடுத்த வாரமே புரமோஷன்...."

"ஸார்.... இது சரியில்லை....."

"சரியில்லைதான்... நீங்களும் நானும் என்ன பண்ணமுடியும்.....? ஜெயவேல் உயிரோட இருக்கணும்ன்னா உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்கணும்.... நம்ம 'போலீஸ் ஸ்க்வாட்' வேகத்தைப் பார்த்தா நாளைக்குக் காலையில் ஜெயவேலோட டெட்பாடி ஜி.ஹெச்சோட மார்ச்சுவரியில் இருக்கும்ன்னு என்னோட மனசுக்குப் படுது"

"அப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது ஸார்"

"நடக்கக் கூடாதுன்னா உண்மையான குற்றவாளி பிடிபடணுமே மிஸ்டர் விவேக்...?"

"எனக்கு நம்பிக்கை இருக்கு ஸார்"

"ஆல் த பெஸ்ட்.... ஜெயவேல் உயிரோட இருக்கறதும் இல்லாததும் இப்ப உங்க கையில்..." தியோடர் சொல்லிவிட்டு செல்போனை அணைத்துவிட விவேக்கும் ஒரு பெருமூச்சோடு செல்போனின் டிஸ்ப்ளே ஸ்கிரீனை இருட்டாக்கினான்.

விஷ்ணு இப்போது ஆட்டோ ட்ரைவர்களிடம் விசாரித்துவிட்டு ரோட்டை க்ராஸ் செய்து காருக்குள் ஏறி உட்கார்ந்தான்.

"போலாம் பாஸ்"

"பார்க் வியூ அப்பார்ட்மெண்ட்ஸ் எங்கேன்னு கேட்டியா?"

"கேட்டேன் பாஸ்... இன்னும் ஒரு கிலோ மீட்டர் போகணுமாம். டார்க் ப்ளூ பெயின்டிங் பூச்சு. ஏழுமாடி கட்டிடம்"

விவேக் காரை நகர்த்தினான். விஷ்ணு மெல்லிய குரலில் கூப்பிட்டான்.

"பாஸ்"

"சொல்லு...."

"நொளம்பூர்க்குப் பக்கத்துல பார்க் வியூ அப்பார்ட்மெண்ட்ஸ். அதுக்கு நேர் எதிர் ரோட்ல 'ரெண்டாவது கட்'ல அது இருக்கு. அந்த அதைத் தேடி சுடர்கொடி வந்து இருப்பான்னு நினைக்கறீங்களா?"

"கண்டிப்பாய்...! அது எதுன்னு சுடர்கொடி தெரிஞ்சுக்கிட்டதாலதான் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தை அவளோட ரத்தத்தால குளிப்பாட்டியிருக்காங்க...."

"சுடர்கொடிக்கு அது எதுன்னு தெரியும். நமக்கு அது தெரியாது. அதை நாம எப்படி கண்டுபிடிக்கப் போறோம் பாஸ்?"

"மொதல்ல அந்த ரெண்டாவது கட்டுக்குப் போவோம். அங்கே யார் யார் இருக்காங்க... அது இதுமாதிரியான இடம்ன்னு பாப்போம். ஆனா ஒரு விஷயத்தை நாம மறக்கக்கூடாது விஷ்ணு"

"எதைச் சொல்றீங்க பாஸ்?"

"இப்பவும் எதிரிகள் உன்னையும் என்னையும் ஒவ்வொரு வினாடியும் கண்காணிச்சுட்டுதான் இருக்காங்க...! நாம அவங்களை நெருங்கிட்டோம்ன்னு தெரிய வரும்போது சுடர்கொடிக்கு ஏற்பட்ட நிலைமை உனக்கும் எனக்கும் ஏற்படலாம்...."

"பா.. பாஸ்..."

"என்ன பயமாய் இருக்கா?"

"அந்தக் கடவுளே காவலுக்கு இருக்கும்போது பூசாரிக்கு என்ன பயம் பாஸ்?"

"நீ என்னடா சொல்றே?"

"நீங்க பக்கத்துல இருக்கும்போது எனக்கென்ன பயம் பாஸ்....?"

விவேக் காரின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே குனிந்து பார்த்தான். சற்றுத் தொலைவில் அடர்த்தியான நீல வண்ண பெயிண்டில் அந்த ஏழு மாடிக் கட்டிடம் தெரிந்தது. கட்டடத்தின் உச்சியில் 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ் என்னும் ஆங்கில எழுத்துக்கள் வெய்யிலில் பளிச்சிட்டன.

அடுத்த சில வினாடிகளில் கார் அப்பார்ட்மெண்டை நெருங்கி நின்றது. விவேக்கும், விஷ்ணுவும் எதிர்ப்பக்கமாய் தெரிந்த ரோட்டைத் திரும்பிப் பார்த்தார்கள்.

ஒரு சிதிலமான மண்ரோடு பார்வைக்குத் தட்டுப்பட்டது.

"விஷ்ணு! அந்த ரோடுதான்னு நினைக்கிறேன்"

"ஆமா... பாஸ்"

"போலாமா....?"

"நான் எப்பவோ ரெடி பாஸ்"

விவேக் அந்த மண் ரோட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
26th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X