For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 8

By Shankar
Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

முன்கதைச் சுருக்கம்:

விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்க்கொடி வேளச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து வெட்டி கோரமாக கொலை செய்யப்படுகிறாள்.
விவேக்கும் விஷ்ணுவும் உடனே விசாரணையில் இறங்குகிறார்கள். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டிற்குள் சுடர்கொடியின் அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்கிறார்கள். இதற்கு இடையில் மேலிடத்திலிருந்து விவேக்கிற்கு இந்த சுடர்க்கொடி கொலை விவகாரத்தை டீப்பாக விசாரிக்கக் கூடாது என்ற கட்டளை வருகிறது. ஆனாலும் விவேக், விஷ்ணு இருவரும் விசாரணையில் தீவிரம் காட்டுகிறார்கள். விவேக் விஷ்ணுவிடம் திலீபனும், சுடர்கொடியும் அண்ணன் தங்கை அல்ல, அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல, அதிர்கிறான் விஷ்ணு.

இந்த நேரத்தில் சுடர்கொடி கொலை விஷயத்தில் தனக்குத் தெரிந்த சில ரகசியங்களைச் சொல்ல வருவதாக போன் செய்கிறாள் சுடர்கொடியின் தோழி ஜெபமாலை. ஒரு ரெஸ்டாரன்டுக்கு மாலையில் வருவதாகச் சொல்கிறாள். ஆனால் அந்த நேரத்தில் அவள் வரமாட்டாள் என கணிக்கிறான் விவேக்...

Rajeshkumars One + One = Zero -8

இனி.....

விஷ்ணு உச்சபட்ச அதிர்ச்சியோடு கேட்டான்.

"என்ன பாஸ் சொல்றீங்க .... அந்த ஜெபமாலை செவன்த் டேஸ்ட் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரமாட்டாளா ?"

"மாட்டா..."

"எப்படிச் சொல்றீங்க.... ?"

"ஏதோ சொல்லணும்ன்னு தோணிச்சு.... சொல்றேன்....." விவேக் சொல்லிவிட்டு டீ பாயின் மேல் இருந்த ரிமோட் கண்ட்ரோலை எடுத்து சேனலை மாற்ற முயல, ரூபலா அதைப் பறித்து டி.வி.யின் திரையை இருட்டாக்கினாள்.

"என்னங்க இது ......! ஒரு சென்ஸ்டீவான மேட்டரை இவ்வளவு அலட்சியமாய் டீல் பண்ணிட்டு இருக்கீங்க..... ? சுடர்கொடி ஏன் கொலை செய்யப்பட்டாள் என்கிற விஷயம் ஜெபமாலைக்கு மட்டும்தான் தெரியும். அவளும் உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றதுக்காக போன் பண்ணியிருக்கா. நீங்களும் அவளும் பெசன்ட் நகரில் இருக்கற ஒரு ரெஸ்டாரெண்டில் சந்திச்சுப் பேச ஏற்பாடாகியிருக்கு. புறப்படற நேரத்துல அந்த ஜெபமாலை வரமாட்டான்னு சொன்னா இதுக்கு என்ன அர்த்தம்?"

"அவ வரமாட்டான்னு அர்த்தம்?"

"அப்படீன்னா அவ பொய் சொல்லியிருக்காளா?"

"ஆமா அப்படிதான் தெரியுது"

"அவ சொன்னது பொய்ன்னு உங்களுக்கு எப்ப.... தெரிஞ்சது"

"ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான்"

"எப்படி.....?"

"மனசுக்குப் பட்டது." விவேக் சொல்ல ரூபலா விஷ்ணுவைப் பார்த்தாள்.

"டேய் விஷ்ணு... உன்னோட பாஸுக்கு என்னாச்சுடா....?"

"தெரியலை மேடம்.... அவர் பேசறது தமிழ் பாஷையாய் இருந்தாலும் ஏதோ ஒரு அந்நிய பாஷையில் பேசற மாதிரி கொஞ்சம் புரியுது... நிறைய புரியாமலும் இருக்கு... இது ஒருவகையான ஜென் நிலை மேடம்... பாஸ் மாதிரி இருக்கற அறிவு ஜீவிகளுக்குத்தான் இப்படிப்பட்ட ஞானோதயமெல்லாம் தோணும்.... இக்கட்டான இதுமாதிரியான சமயங்களில் பிரச்சனையை எப்படி கையாளனும்ன்னு எனக்குத் தெரியும் மேடம்....!"

"எப்படி....?"

"பாஸைக் காட்டிலும் கொஞ்சம் புத்திசாலித்தனம் அதிகமாய் இருக்க ஒருத்தரை ஒரு ரெண்டு நிமிஷம் அவர்கிட்டே பேச வெச்சா போதும் மேடம்"

"அப்படிப்பட்ட ஒருத்தர் இப்ப எங்கடா கிடைப்பார்?"

"ஏன் மேடம் 73 கிலோ வெயிட்ல நான் ஒருத்தன் உங்க முன்னாடி விஸ்வரூபம் எடுத்த பெருமாள் மாதிரி நின்னுட்டு இருக்கேனே..... உங்க பார்வைக்குத் தட்டுப்படலையா....? பாஸ் ஜென் நிலைக்கு போயிட்டா அவரை எப்படி ஒரு சாதாரண நிலைக்குக் கொண்டு வர்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் மேடம்."

ரூபலா எரிச்சலோடு விஷ்ணுவைப் பார்த்தாள். இவன் ஒருத்தன் என்று முனகியவள் .

"சரி... அவர்கிட்டே பேசு...!" என்றாள்.

"அவர்கிட்டே பேச்சு வார்த்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு லெமன் டீ வேணும் மேடம்"

"யார்க்கு?"

"எனக்குத்தான் மேடம்.... ஒரு லெமன் டீ உள்ளே போனாத்தான் என்னோட புத்திசாலித்தனம் பூஸ்ட் ஆகும். அப்படி ஒரு சாபம் எனக்கு. நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன் மேடம்!"

"உனக்கு இது மாதிரி நிறைய சாபம் இருக்குன்னு எனக்குத் தெரியும். ஒரு அஞ்சு நிமிஷத்துல லெமன் டீயோடு வர்றேன்....!"

"டீயோடு அப்படியே ஒரு இலவச இணைப்பும் இருக்கட்டும் மேடம்!"

"இலவச இணைப்பா.... ?"

"ரெண்டு பிஸ்கெட்டைச் சொன்னேன் மேடம்"

ரூபலா விஷ்ணுவை ஒரு அமிலப் பார்வையில் நனைத்துக் கொண்டே சமைலறைக்குள் போனாள். விவேக்கிடம் திரும்பினான் விஷ்ணு.

"இப்ப சொல்லுங்க பாஸ்... என்ன பிரச்னை?"

"உனக்குத் தெரிஞ்ச டாக்ஸி டிரைவர் ஒருத்தர் இருக்கறதாய் சொன்னியே.... அவர் பேர் என்ன ?"

"ராம ஜெயம்"

"அவரை இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு... நீயும் நானும் ஒரு இடத்துக்கு போகப் போறோம்"

"நம்ம கார் இருக்கும் போது எதுக்கு பாஸ் டாக்ஸி ?"

"பேசாம சொன்னதைச் செய்....!"

"ஓ.கே . பாஸ்... விஷயம் ஏதோ சீரியஸ்ன்னு தெரியுது. இப்ப போன் பண்ணி ராமா ஜெயத்தை வரச் சொல்லிடறேன்." விஷ்ணு தன் செல்போனை எடுத்துக் கொண்டு ராமஜெயத்தின் செல் நெம்பரைத் தேடிக் கொண்டு இருக்க விவேக், "ஒரு நிமிஷம் விஷ்ணு!" என்றான்".

"சொல்லுங்க பாஸ் "

"டாக்ஸி நம்ம வீட்டுக்குப் பின்னாடி இருக்கற சந்தில் விநாயகர் கோயில் பக்கத்தில் நிக்கட்டும்!"

"ஏன் பாஸ் !"

"இப்போதைக்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்காதே... பேசாமே நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்....!"

"புரியுது பாஸ்....! ஏதோ... ஐ. ஸி. யூனிட்டில் இருக்கற விஷயம் போலிருக்கே... நான் இப்போ ராம ஜெயத்துக்கு போன் பண்ணிடறேன் பாஸ்....!" சொன்ன விஷ்ணு அந்த ராமா ஜெயத்தை செல்போனில் பிடித்து பேசிவிட்டு விவேக்கை ஏறிட்டான்.

"அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளே டாக்ஸி வந்துடும் பாஸ்...!"

அதே வினாடி விவேக்கின் செல்போன் மென்மையாய் சிணுங்க விவேக் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

டி.ஜி.பி.யின் பி.ஏ. தியோடர் பெயர் டிஸ்ப்ளேயில் தெரிந்தது.

செல்போனை இடது காதுக்குக் கொடுத்த விவேக், சலனமில்லாத குரலில் 'குட் ஈவினிங்' என்றான்.

"ஸே! வெரி வெரி வொர்ஸ்ட் ஈவினிங்.. மிஸ்டர் விவேக். டிவியில் நியூஸ் பார்த்தீங்களா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேன் ஸார்"

"இப்ப பாருங்க... எல்லா டிவி சானல்களும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொல்லப்பட்ட சுடர்கொடியோட மேட்டரும், அவளுடைய அண்ணன் வீட்ல தூக்குல தொங்கின மேட்டரும்தான் பரபரப்பா போயிட்டிருக்கு..."

விவேக் டிவியை ஆன் செய்து சேனல் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு, "எஸ் ஸார்... எல்லா சேனல்களிலும் இந்த விஷயம் நெருப்பாட்டம் இருக்கு...", என்றான்.

"என்ன பண்ணலாம்..."

"இப்போதைக்கு மீடியா பீப்பிளை ஒண்ணும் பண்ண முடியாது ஸார். இன்னும் ஒரு வாரத்துக்கு அவங்களுக்கு இந்த விஷயம்தான் மூணு வேளையும் சாப்பாடு. எனக்கு சில விஷயங்கள் கிடைச்சிருக்கு ஸார். அதை நோக்கித்தான் ட்ராவல் பண்ணிட்டிருக்கேன்".

"பி... கேர்ஃபுல்.. நான் சொன்ன விஷயத்தை மறந்துட வேண்டாம். இந்த மர்டர்ஸ் சம்பந்தப்பட்ட விசாரணை வெளிப்பார்வைக்கு நுனிப்புல் மேயற மாதிரி இருக்கணும். அதே நேரத்துல கொலையாளியைக் கண்டுபிடிக்கிற விஷயத்தில் வேகமும் ஆழமும் வேணும்..."

"நான் அந்த விஷயத்தை மறக்க மாட்டேன் ஸார். உங்க கிட்ட நான் 168 மணி நேரம் அவகாசம் கேட்டேன். அதாவது ஒரு வாரத்துக்குள்ள கொலையாளியை நெருங்கிடுவேன்."

"நெருங்கியாகணும்... இல்லன்னா இன்னொரு விபரீதம் நடந்துடும்..."

"இன்னொரு விபரீதமான விஷயமா?"

"ஆமா மிஸ்டர் விவேக்... சுடர்கொடி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது ஸ்டேஷனில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் பழுதடைஞ்சு போயிருந்ததால அந்த காமிராக்களில் கொலை செய்யப்பட்ட அந்த நிகழ்வு பதிவாகலை. ஆனா ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த ஒரு ஹோட்டலின் முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராவில் ஒரு காட்சி பதிவாகியிருக்கு அது எது மாதிரியான காட்சி தெரியுமா மிஸ்டர் விவேக்?"

"சொல்லுங்க சார்...."

"அந்த சி.சி.டி.வி. காமிராவில் ஒரு இளைஞன் பதிவாகியிருக்கிறான். கையில் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ். முகத்தில் அளவுக்கு அதிகமான பதட்டம். ஸ்டேஷனை விட்டு வெளியே வேகமாய் வர்றான். அந்த நபர்தான் சுடர்கொடியை வெட்டியா கொலையாளியாய் இருக்க முடியும்ன்னு நம்ம டிபார்ட்மெண்ட் ஒரு முடிவுக்கு வந்திருக்கு. ஆனா அந்த வீடியோ பதிவைப் பார்த்த எனக்கு அந்த இளைஞன் கொலையாளியாய் இருக்க முடியாதுன்னு மனசுக்குப் பட்டது."

"நீங்க அப்படியொரு முடிவுக்கு வர காரணம் என்ன ஸார்...?"

"அந்த இளைஞன் கையில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒரு கனமான சூட்கேஸ். அவன் அதைத் தூக்கிட்டு வரும்போதே தெரியுது. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது இருபதடி நடக்கறதுக்குள்ளே ஒரு தடவை அந்த சூட்கேஸை கீழே வெச்சுட்டு பத்து விநாடி ஆசுவாசப்படுத்திட்டு அதுக்கப்புறம் அதைத் தூக்கிட்டு வர்றான். இப்படி மூணு தடவை சூட்கேஸை வெச்சு வெச்சு எடுத்திட்டு வர்றான். ஒரு பெண்ணைக் கொலை செய்யப் போறவன் அப்படியொரு ஹெவி லக்கேஜ்ஜை தூக்கிட்டு வருவானா என்ன...?"

"டி.ஜி.பி கிட்டே அந்த பாயிண்டை சொன்னீங்களா ஸார்...?"

"சொன்னேன்"

"வாட் வாஸ் த ரிப்ளை ?"

"நீங்க சொல்றது சரிதான் தியோடர். அந்த இளைஞன் ஸ்டேஷனை விட்டு அவசர அவசரமாய் வெளியே வந்தான் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அவன்தான் கொலையாளியாய் இருக்க முடியும்ன்னு என்னால ஒத்துக்க முடியலை. ஆனா எனக்கு மேலிடத்திலிருந்து ஒரு ப்ரஷர் வந்துட்டேயிருக்கு. யாரையாவது ஒரு நபரை கொலையாளியாக்கி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்றாங்க..."

"யார் ஸார் அது...?"

"ஒரு பவர்ஃபுல் பொலிடிகல் பர்சன்"

"அது யார்ன்னு உங்களுக்குத் தெரியாதா ?"

"தெரியாது"

"டி.ஜி.பி க்கு?"

"அவர்க்கும் தெரியாதுன்னு சொல்றார். இது ஒரு ஷேடோ ஆர்டர். தமிழில் சொல்லணும்ன்னா நிழல் கட்டளை...."

"ஸார் யார் ஆட்சிக்கு வந்தாலும் போலீஸ் போலீஸ் மாதிரிதான் இருக்கணும். யார்க்கும் அடிபணியக் கூடாது!"

"அப்படி இருக்கத்தான் ஆசைப்படறோம். அது நடைமுறையில் சாத்தியப்படறது இல்லை...! இப்ப நம்ம டிபார்ட்மெண்ட்டோட அடுத்த கட்ட வேலை என்ன தெரியுமா மிஸ்டர் விவேக் ?"

"என்ன ஸார்?"

"வேளச்சேரி ஸ்டேஷனை விட்டு அவசர அவசரமாய் வெளியே வந்த அந்த இளைஞன் உண்மையாகவே கொலையாளியா இல்லையா என்று நமக்குத் தெரியாது. இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. அவன் கொலையாளியாய் இருக்கலாம். ஒருவேளை அப்பாவியாய் இருந்தால் சட்டம் தடம் புரண்டுவிடும். ஸோ உங்களுக்கு பொறுப்பு இதில் அதிகம். உண்மையான குற்றவாளியை நீங்க சீக்கிரம் நெருங்கியாகணும் விவேக்... BALL IS IN YOUR COURT. YOU HAVE TO PLAY"

"நான் ஏற்கனவே விளையாட ஆரம்பிச்சுட்டேன் ஸார்"

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 8th chapter of Rajeshkumar's One + One = Zero crime series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X