For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இராக்கில் இன்னொரு பின் லேடன்: என்ன செய்யப் போகிறது அமெரிக்கா?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

கடந்த இரு வாரங்களில் உலகளவில் நடந்த ஒரு மிகப் பெரிய சம்பவம் இந்திய பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்தியாக வெளிவரவில்லை.

சதாம் ஹூசேனின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து இராக்கில் அமெரிக்கப் படையினரின் ஆட்சி நடந்தது. பெயரளவுக்கு அங்கு ஒரு அரசும் இருக்கிறது. இராக் விவகாரத்தில் தவறாக காலை வைத்துவிட்ட அமெரிக்கா அங்கிருந்து 3 ஆண்டுகளுக்கு முன் தப்பியோடுவிட்டது.

வெளியேறிய அமெரிக்கா..

வெளியேறிய அமெரிக்கா..

இராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்துவிட்டோம், இனி அவர்கள் நாட்டை பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டு அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறிவிட்டனர்.

ஆனால், இராக்கின் சமூக- பொருளாதார கட்டமைப்பை முழுமையாக நொறுக்கி சேதப்படுத்திய அமெரிக்கா அங்கு பெயரளவுக்கு சில ஆயிரம் பேருக்கு பயிற்சி தந்து ராணுவ உடையும் தந்து, இது தான் ராணுவம்.. ஒரு தீவிரவாதியும் இனி தலைகாட்ட முடியாது என்று கூறிவிட்டு நாட்டை விட்டு ஓடியது.

ஷியா, சன்னி, குர்து...

ஷியா, சன்னி, குர்து...

இராக் என்பது ஷியாக்கள் அதிகம் வசிக்கும் நாடு. இங்கு சன்னி பிரிவினர் மைனாரிட்டி தான். ஆனால், சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் ஹூசேன் ஷியாக்களை ஒடுக்கித் தான் ஆட்சியில் தொடர்ந்தார். சன்னி இனத்தினரையும் குர்து பழங்குடி இனத்தினரையும் அடக்க வன்முறையைக் கையாண்டார். அவர்களை கொன்று குவித்தார்.

ஷியாக்களுக்கு அண்டை நாடான ஈரான் உதவி செய்ய, அந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தார் சதாம். பேராசை பெருக்கெடுக்க குவைத்தை ஆக்கிரமித்ததோடு சவுதி பக்கமும் பார்வையைத் திருப்பவே முதல் வளைகுடா போர் நடந்தது. குவைத்திலிருந்து சதாம் வெளியேற பிரச்சனையை அத்தோடு விட்டது அமெரிக்கா.

ஜார்ஜ் புஷ் நாடகம்...

ஜார்ஜ் புஷ் நாடகம்...

ஆனால், அடுத்து வந்த ஜார்ஜ் புஷ் இராக்கில் சதாம் ஹூசேன் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய் சொல்லிக் கொண்டு அனாவசியமாக ஒரு போரைத் தொடுத்து அந்த நாட்டை சின்னா பின்னவாக்கினார். தொடர்ந்து அங்கு தேர்தல் நாடகம் எல்லாம் நடத்தி ஷியா பிரிவினரை ஆட்சியில் அமர்த்தினார்.

இனரீதியில் பிளவு...

இனரீதியில் பிளவு...

ஆனால், இந்த ஆட்சியாளர்களை செளதி சந்தேகக் கண்ணோடு பார்க்க, ஷியா ஆட்சியாளர்களுக்கு ஈரான் உதவி செய்ய உள்ளுக்குள் இராக்கில் சமூக அளவில் பிரிவினைகள் மீண்டும் தலைதூக்கின. அமெரிக்கப் படையினரின் கண் முன்னே சன்னி பிரிவினரை கொன்று குவித்த ஷியா தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாதில் வசித்த சன்னி பிரிவினரை நகரை விட்டு கொத்து கொத்தாக வெளியேற்றினர். இதனால் பாக்தாத் இப்போது கிட்டத்தட்ட சன்னி நகராகிவிட்டது. வெளியேற்றப்பட்ட சன்னி பிரிவினர் மொசுல் உள்ளிட்ட பகுதிகளில் குடியேறினர்.

இந் நிலையில் தான் சன்னி பிரிவினரைக் காக்க அல்-கொய்தா அமைப்பு இராக்கில் ஊடுருவ, இவர்கள் வந்தால் தான் ஈரானை கட்டுப்பாட்டில் வைப்பார்கள் என்று, அந்த ஊடுருவலை கண்டுகொள்ளாமல் விட்டது அமெரிக்கா.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு...

இந்த சூழலில் தான் கடந்த இரு வாரங்களுக்கு முன் அல் கொய்தா ஆதரவு பெற்ற சன்னி பிரிவைச் சேர்ந்த Islamic State of Iraq and Syria (ISIS) அமைப்பு மொசுல் நகரை இராக் அரசிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. அபு பக்கர் அல் பாக்தாதி என்பவரின் தலைமையிலான இந்த அமைப்பில் 10,000 போராளிகள் வரை உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிரியாவில் அல் பஸார் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் தீவிரவாதிகள். இவர்களுக்கு ஆயுதம் தந்தது அமெரிக்கா தான். அல் பஸார் ரஷ்யாவின் உதவியோடு இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்கி வருவதால், இவர்கள் அப்படியே இராக் பக்கமாக வந்துள்ளனர்.

வீழ்ந்தன அரசுப் படைகள்...

வீழ்ந்தன அரசுப் படைகள்...

ஏற்கனவே இராக்கின் பலூஜா நகர் ஐஎஸ்ஐஎஸ் வசம் தான் உள்ளது. மொசுல் நகரில் பாதுகாப்புப் பணியில் இருந்த அமெரிக்காவால் பயிற்சி தரப்பட்ட இராக் ராணுவத்தினர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை தாக்குதலை எதிர்த்துக் கூட போராடாவில்லை. ஆயுதங்கள், தளவாடங்களை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு பாக்தாதுக்கு ஓடி வந்துவிட்டனர். இதனால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ஏராளமான ஆயுதங்களும் இலவசமாகக் கிடைத்துள்ளன. ராணுவத்தின் பல கிடங்குகளைக் கூட அவர்கள் கைப்பற்றிவிட்டனர்.

கொத்து கொத்தாக சுட்டுக் கொன்று...

கொத்து கொத்தாக சுட்டுக் கொன்று...

அடுத்ததாக எண்ணெய் வளம் மிக்க திக்ரித் நகரையும் பிடித்துள்ளதோடு பாக்தாதை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளனர், திக்ரித் தான் சதாம் ஹூசேனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கும் நகரோடு சேர்த்து ராணுவ தளவாடங்களையும் கைப்பற்றிவிட்டது ஐஎஸ்ஐஎஸ்.

அத்தோடு ஷியா இனத்தினரை கூட்டம் கூட்டமாக லாரிகளில் சிறை பிடித்துச் சென்று வரிசையாக நிற்க வைத்து கொத்து கொத்தாக சுட்டுக் கொன்று அந்தப் படங்களையும் இன்டர்நெட்டில் போட ஆரம்பித்துள்ளது ஐஎஸ்ஐஎஸ்.

இராக், சிரியாவைப் பிடிப்பது...

இராக், சிரியாவைப் பிடிப்பது...

இவர்களது நோக்கம் இராக்கை மட்டுமல்ல, சிரியாவையும் பிடிப்பது தான். சிரியாவில் இப்போது உள்நாட்டுப் போரை சந்தித்து வருகிறார் அதிபர் அல் பஸார். இவர் ஷியாவில் ஒரு பிரிவைச் சேர்ந்த சலாபி பிரிவைச் சேர்ந்தவர். இந்த நாட்டில் சன்னி பிரிவினர் இவரை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு செளதி, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன. அமெரிக்காவும் மறைமுகமாக ஆயுத உதவி செய்து வருகிறது. ஆனால், அல் பஸாருக்கு ரஷ்ய அதிபர் புடின் நேரடியாகவே முழு அளவில் உதவி வருவதால் அவரை வீழ்த்த முடியவில்லை. போராளிகள் கைப்பற்றிய பல இடங்களையும் அல் பஸார் ஆதரவுப் படையினர் திரும்ப மீட்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் போராட்டம் என்பது இராக்கிலும் சிரியாவிலும் ஆட்சியில் உள்ள ஷியா பிரிவினருக்கு எதிரான போராட்டமே. இப்போது சிரியா, இராக் என அழைக்கப்படும் இந்த நாடுகளும் 400 ஆண்டுகள் ஒட்டமான் பேரரசின் (Ottoman Empire) ஒரு அங்கமாக இருந்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இராக் மூன்றாக பிளவுபடும் அபாயம்...

இராக் மூன்றாக பிளவுபடும் அபாயம்...

இராக்கின் மொசுல், திக்ரித் என நாட்டின் வட பகுதி நகர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில், வட முனையில் உள்ள குர்து இனத்தினர் கிர்குக் நகரின் விமானப் படைத் தளத்தையும் சில ராணுவ தளங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சன்னி பிரிவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போராட ஈரான் ஆதரவுடன் சில ஷியா பிரிவுகளும் போட்டி போராளிக் குழுக்களை உருவாக்கி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன. இதனால் இராக் நாடே ஷியா, சன்னி, குர்து பகுதி என மூன்றாகப் பிளவுபடும் அபாயத்தில் உள்ளது.

ஈரானுடன் கைகோர்க்கும் அமெரிக்கா...

ஈரானுடன் கைகோர்க்கும் அமெரிக்கா...

இதற்கிடையே சன்னி பிரிவு போராளிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஈரான் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த காலத்திலும் ஒத்து வராது என்றாலும், இப்போது ஈரானுடன் இணைந்து செயல்பட்டால் தான் இராக்கைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு அமெரிக்காவே தள்ளப்பட்டுள்ளது.

இராக்கை நோக்கி USS George HW Bush விமானம் தாங்கிக் கப்பல் உள்ளிட்ட சில முக்கிய போர்க் கப்பல்களை அனுப்பியுள்ள அமெரிக்கா, ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

மீண்டும் அமெரிக்க தலையீடு..

மீண்டும் அமெரிக்க தலையீடு..

நேரடியாக இராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினாலும், நிலைமை மோசமானால் மீண்டும் இராக்கில் அமெரிக்கப் படைகள் கால் வைத்தே ஆக வேண்டிய நிலைமை உருவாகலாம். ஆனால், இந்தமுறை ஐ.நா. படை என்ற பெயரில் வேறு சில நாடுகளையும் சேர்த்துக் கொண்டு அமெரிக்கா களம் இறங்கும் நிலை வரலாம்.

ஆப்கானிஸ்தான் வரலாறு திரும்புகிறது...

ஆப்கானிஸ்தான் வரலாறு திரும்புகிறது...

ஆக சிரியாவில் அல் பஸாருக்கு எதிராக போராட மறைமுகமாக அமெரிக்கா தந்த ஆயுதங்களும் போராளிகளும் இப்போது இராக் பக்கமாக திரும்பி வந்து அங்கு அமெரிக்கா ஆட்சியில் அமர்த்திவிட்டுச் சென்ற பொம்மை ஆட்சியை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளன.

இதே வரலாறு தானே ஆப்கானிஸ்தானிலும் நடந்தது. அங்கு சோவியத் யூனியனுக்கு எதிராக போராட பின்லேடனுக்கு ஆயுதம் தந்தது அமெரிக்கா. இறுதியில் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிராகவே போர் தொடுத்தார்.

இன்னொரு பின்லேடன்...

இன்னொரு பின்லேடன்...

இப்போது ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியை இன்னொரு பின் லேடன் என்று அழைக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. மேலும் பாக்தாதியின் தலைக்கு 10 மில்லியன் டாலர் பணத்தையும் அறிவித்துள்ளது.

இந்த அரசியல், மத, இன மோதலில் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவிகளான ஷியா, சன்னி, குர்து இனத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் தான். வீடுகளை மட்டுமின்றி வசித்த ஊர்களையும் விட்டு சின்னஞ்சிறு குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக பல நூறு கிலோமீட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர் இந்த அப்பாவிகள்.

திருந்த வேண்டியவர்கள் தீவிரவாதிகள் மட்டுமல்ல, அமெரிக்காவும் தான்!

English summary
Now an organisation regarded as extreme even by al Qaeda is steamrolling over Iraq — called the Islamic State in Iraq and Syria (ISIS). Western-trained police and troops are abandoning their Western-supplied weapons even before the rebel tribesmen come into sight. The US and NATO do not yet have a response strategy, although air strikes seem likely and the situation is fluid and moving fast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X