For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூவாகம் விழா முடிந்தது: தாலி அறுத்துஒப்பாரி-வெளிநாட்டு அரவாணிகள் வியப்பு

By Staff
Google Oneindia Tamil News
The winner Rasika (centre) with 2nd runner up Jyothika and 3rd runner up Aishwarya

விழுப்புரம்:கூத்தாண்டவர் கோவிலில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அரவாணிகள் தாலிகளை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். அத்தோடு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த சித்திரைத் திருவிழா முடிவுக்கு வந்தது.

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து பெரும் திரளான அரவாணிகள் கலந்து கொள்வார்கள்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நடைபெறும். இந்த விழாவையொட்டி கூவாகம் மற்றும் விழுப்புரத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று இரவு அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரவாணிகள் அனைவரும் பட்டுச் சேலை உள்ளிட்ட நல்ல ஆடைகளைக் கட்டிக் கொண்டு, தலை நிறைய பூ வைத்துக் கொண்டும் வரிசையாக நின்றனர்.

அவர்களுக்கு கோவில் பூசாரி தாலி கட்டினார். ஆயிரக்கணக்கான அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டதால் பெரும் விழாக் கோலமாக கூத்தாண்டவர் கோவில் காணப்பட்டது.

அதன் பின்னர் இரவு முழுவதும் அரவாணிகள் ஆடிப் பாடி கொண்டாடினர். இன்று காலை அரவாண் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அரவாணிகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு கட்டப்பட்ட தாலியை பூசாரிகள் கத்தியால் அறுத்து எறிந்தனர். இதையடுத்து அரவாணிகள் கூட்டம் கூட்டமாக கூடி ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுதனர். இத்துடன் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.

முன்னதாக அரவாணிகள் பங்கேற்ற அழகு ராணிப் போட்டி விழுப்புரத்தில் நடந்தது. நேற்று மிஸ் கூவாகம் போட்டி நடந்தது. இதில் ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு சவால் விடும் வகையில், படு அழகான தோற்றத்துடன், படு பரவசமான ஆடைகளுடன் கேட் வாக் செய்தும், நடனம் ஆடியும், பாட்டுப் பாடியும் அரவாணிகள் அசத்தினர்.

இறுதியில், சேலத்தைச் சேர்ந்த ரசிகா மிஸ். கூவாகம் ஆக தேர்வு பெற்றார். 2வது இடத்தை ஈரோடு ஜோதிகாவும், 3வது இடத்தை ஈரோடு ஐஸ்வர்யாவும் பெற்றனர்.

மிஸ். கூவாகம் ஆக வெற்றி பெற்ற ரசிகா, பார்ப்பதற்கு நயனதாராவைப் போல இருந்ததால் அரவாணிகள் மத்தியில் அவருக்கு பலத்த வரவேற்பு காணப்பட்டது.

ரசிகாவுக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகள் கவிதா கணேஷ், கிரீடம் சூட்டி, பரிசுகளை வழங்கினார். பாமக எம்.பி. தன்ராஜ், விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவர் ராதா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அரவாணிகள் கூவாகத்தில் குழுமியிருந்தனர். எங்கு பார்த்தாலும் அரவாணிகள் கூட்டமாக காணப்பட்டது. அவர்களைப் பார்க்க ஏராளமான இளைஞர்களும் கூவாகத்தில் முகாமிட்டிருந்தனர்.

இவர்கள் தவிர ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அரவாணிகள் விழாவைப் பார்க்க திரண்டிருந்தனர். இதனால் கூவாகம் கிராமம் மனிதத் தலைகளாக காணப்பட்டது.

இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு அரவாணிகளும் கூவாகம் வந்திருந்தது விசேஷமானது. கூவாகம் விழா குறித்து அவர்கள் இந்திய அரவாணிகளிடம் பேசி தகவல் சேகரித்தனர்.

இந்திய அரவாணிகள் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் முகத்தில் வெட்கம் குடி கொள்ள பேசி மகிழ்ந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சிம்மன்ஸ் என்பவர் அரவாணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அவரும் இம்முறை கூவாகம் வந்து அரவாணிகளுடன் பேசி தனது ஆய்வு தொடர்பான தகவல்களை சேகரித்தார்.

இவர்கள் தவிர சிங்கப்பூர், பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டு அரவாணிகளும் கூவாகம் வந்திருந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி என்கிற அரவாணி கூறுகையில், அமெரிக்காவில் லெஸ்பியன்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்.

ஆனால் அரவாணிகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. வித்தியாசமாக பார்க்கிறார்கள். இந்தியாவில் அரவாணிகளை மதிப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். மேலும் கூவாகம் விழா குறித்தும் கேள்விப்பட்டேன். அதனால்தான் இங்கு வந்தேன் என்றார்.

அரவாணிகள் சேர்ந்து கொண்டாடிய இந்த திருவிழாவை வெளிநாட்டு அரவாணிகள் படு வியப்பாக பார்த்து ரசித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X