திருவண்ணாமலை கோவில் கலசங்களைவீட்டுக்கு எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள்!

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இரு தொழிலதிபர்கள் காணிக்கையாக கொடுத்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளிக் கலசங்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பலரும் பல்வேறு வகையான காணிக்கையை அளிப்பது வழக்கம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 2 தொழிலதிபர்கள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிக் கலசங்களைக் காணிக்கையாக கொடுத்தனர்.

இவை முக்கிய விழாக்களின்போது உற்சவரான சந்திரசேகருக்கு அணிவிக்கப்பட்டு காட்சி தருவது வழக்கம். இந்தக் கலசங்கள் கோவில் சிவாச்சாரியார்களின் பொறுப்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் புதிய துணை ஆணையராக வாசுநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையடுத்து புதிய அறங்காவலர் குழுவும் நியமிக்கப்பட்டது.

அறங்காவலர் குழுத் தலைவராக தனுஷு, அறங்காவலர்களாக மணிபாரதி, பானுமதி அருணகிரி, கோவிந்தன், சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் கோவிலின் முக்கிய சாவிகளாக மொத்தம் 155 சாவிகள் ஒப்படைக்கப்பட்டன

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறங்காவலர் குழுவினரும், துணை ஆணையர் வாசுநாதனும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சரியாக இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அப்போது, சிவாச்சாரியார்கள் பொறுப்பில் இருந்த, தொழிலதிபர்கள் கொடுத்த தங்க, வெள்ளிக் கவசங்கள் கணக்கில் வராதது தெரிய வந்தது.

கோவிலுக்குச் சொந்தமான பொருட்களின் பட்டியலிலும் அவை இடம் பெறவில்லை.

இதுகுறித்து சிவாச்சாரியார்களிடம் விசாரித்தபோது, கோவில் மூலமாக அவை தரப்படவில்லை என்றும் நேரடியாக சிவாச்சாரியார்களிடம் வழங்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும் அவற்றை சிவாச்சாரியார்கள் 2 வாரங்களுக்கு முன்பு தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகையை சிவாச்சாரியார்கள் எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம், அவை தற்போது எந்த நிலையில் உள்ளன, எங்கே உள்ளன, இப்படி எடுத்துச் செல்லப்பட்டது அந்த தொழிலதிபர்களுக்குத் தெரியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அருணாச்சலேஸ்வரருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க, வெள்ளிக் கவசங்கள் கோவிலில் இல்லாததும், சிவாச்சாரியார்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றதும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Write a Comment
AIFW autumn winter 2015