மணப்பாறை மருத்துவமனைக்கு சீல்;டாக்டர் தம்பதி சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:15 வயது சிறுவன் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய மணப்பாறை மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட டாக்டர் தம்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது மகனைத் தேடி சென்னைக்கு போலீஸ் படை விரைந்துள்ளது.

மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன், டாக்டர் காந்திமதி தம்பதியின் 15 வயதாகும், 11வது வகுப்பு படிக்கும் மகன் திலீபன் ராஜ் சமீபத்தில் முருகேசனின் உறவுக்காரப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

Dileepanraj

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. விசாரணையின் இறுதியில் கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் டாக்டர் தம்பதியைக் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து டாக்டர் முருகேசன், டாக்டர் காந்திமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவர் மீதும் ஆவணங்களைத் திருத்தியது, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் எழிலரசியின் உத்தரவின் பேரில் இன்று முருகேசனின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 உள்நோயாளிகளும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். புற நோயாளிகளுக்கு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் திலீபன் ராஜ் ...

இந்த நிலையில், தலைமறைவாகி விட்ட சிறுவன் திலீபன் ராஜ் தனது நண்பருடன் சென்னையில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனிப்படை போலீஸார் சென்னைக்கு விரைந்துள்ளனர். ஓரிரு நாட்களில் திலீபன் ராஜ் கைது செய்யப்படுவான் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்