வீரன் சுந்தரலிங்கம் சிலை அகற்றம் - மதுரை அருகே பதட்டம்


மதுரை: மதுரை திருமங்கலம் அருகே வீரன் சுந்தரலிங்கம்  சிலையை போலீசார் அகற்றியதால் 30 பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம்  நிலவுகிறது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்ன உடைப்பு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள், நள்ளிரவில் அருப்புக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே மண்டேலா நகரில் 4 அடி உயரம் கொண்ட சிமெண்டால் ஆன வீரன் சுந்தரலிங்கம்  சிலையை  ஊர் நடுவில் வைத்தனர்.

தகவல் அறிந்த பெருங்குடி போலீசார், திருப்பரங்குன்றம் டிஎஸ்பி கணேசன் ஆகியோர்  விரைந்து சென்று சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். அந்த வழியே வந்த 30க்கும் மேற்பட்ட பஸ்களை அடித்து உடைத்தனர். பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஒட்டம் எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மதுரை தெற்கு தாசில்தார் கொம்பையன் அப் பகுதி மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் மக்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிலர் வேனில் ஏற மறுத்து மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனல் அங்கு குழப்பமும், அமளியும் நிலவியது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் சார்பாக தாசில்தார் கொம்பையனிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் மதுரை விமான நிலையத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்க வேண்டும். போலீசார் அகற்றிய சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை தாசில்தார் அரசின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், அவனியாபுரம் பகுதியில் அம்பேத்கர் சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. அதேபோல் அனுப்பானடி பகுதியில் தேவந்திரகுல அமைப்பு, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக, 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

Please Wait while comments are loading...

Videos