அமெரிக்கா-இலினாய்ஸ் பல்கலையில் துப்பாக்கி சூடு-4 மாணவிகள், 1 மாணவன் பலி

Subscribe to Oneindia Tamil

University
இலினாய்ஸ்: அமெரிக்காவின் வடக்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 5 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 22 மாணவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளனர்.

ஜியாலஜி வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் 3 துப்பாக்கிகளுடன் ஒருவன் அங்கு வந்தான். ஆசிரியரின் அருகே போய் நின்ற அவன், வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 4 மாணவிகளும் ஒரு மாணவனும் அங்கேயே குண்டு பாய்ந்து பலியாயினர்.

மற்ற மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் 22 பேர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பின்னர் தன்னைத் தானே அந்த நபர் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட நபரும் அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று தெரிகிறது. எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினான் என்று தெரியவில்லை.

இச் சம்பவத்தையடுத்து வடக்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. யாரும் அறைகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஹாஸ்டல் மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களை பல்கலைக்கழகத்தின் கீழ்கண்ட இணையத் தள பக்கத்தில் காணலாம்.


http://www.niu.edu/index.shtml

Please Wait while comments are loading...