தேவர் சிலை அவமதிப்பு: 24ம் தேதி பந்த்-கார்த்திக்

Karthik
மதுரை: தேவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வலியுறுத்தியும் வரும் 24ம் தேதி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியி்ன் சார்பில் பந்த் நடத்தப்படும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதையடுத்து தென் மாவட்டங்களி்ல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று மதுரை வந்தார். கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு சென்று சந்தனம் மற்றும் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தெய்வமாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவ வெண்கல சிலையில் களங்கம் ஏற்படுத்தி இருப்பது மிகவும் வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

யார் இந்த தவறை செய்தார்கள் என்று தெரியவில்லை. தேவரின் நூற்றாண்டு விழா தொடங்கி 6 மாதத்தில் 6 முறை தேவர் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஒரு தடவை செய்தால் மன்னிக்கலாம். 2 தடவை செய்தால் மன்னிக்கலாம். 3 தடவை செய்தாலும் மன்னிக்கலாம். தொடர்ந்து இதுபோன்று அவமதிப்பு செய்வதை மன்னிக்க முடியாது.

சிலை அவமதிப்பைத் தொடர்ந்து நேற்று நடந்த சம்பவங்கள் வேண்டுமென்றே நடத்தப்பட்டதல்ல. மக்கள் உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் இதுபோன்று நடந்து விட்டது.

இனிமேலும் தேவர் சிலை அவமதிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் நாங்கள் இதையே சொல்லி வருகிறோம்.

சிலை அவமதிக்கப்படுவதற்கு உள்நோக்கம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். இதன் மூலம் வன்முறை வெடிக்கும் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது. இந்த தேவர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலீசாரின் கடமை.

மாநில அரசும், காவல் துறையும் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் பார்வர்டு பிளாக் இயக்கம் அதுபற்றி முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு வரும்.

தேவர் சிலை அவமதிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுத்து முற்றுப்புள்ளி வைக்கவும் அகில இந்திய பார்வர்டு பிளாக் வரும் 24ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளோம். தேவர் சிலை உள்பட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். முடியாவிட்டால் பாச கயிற்றால் இணைக்கப்பட்டுள்ள நாங்களே பாதுகாப்பு கொடுப்போம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார் கார்த்திக்.

Please Wait while comments are loading...

Videos