லண்டன்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்ஸா ஜோடி வெற்றி பெற்றது. அதேசமயம், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - மகேஷ் பூபதி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது மகளிர் இரட்டையர் பிரிவு 2வதுசுற்று ஆட்டத்தில் சானியா - அமெரிக்காவின் பெத்தானி மேட்டக் ஜோடி, ரஷ்ய-இத்தாலிய ஜோடியான மரியா கிரிலென்கோ-பிளேவியா பென்னட்டாவை எதிர்கொண்டது. இப்போட்டியில், மரியா ஜோடியை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி எளிதில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது. இரட்டையர் பிரிவில் வென்ற சானியா, கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியை சந்தித்தார். கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா - மகேஷ் பூபதி ஜோடி, ரஷ்யாவின் இகர் ஆன்ட்ரீவ் - மரியா கிரிலென்கோ ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடியை, ரஷ்ய ஜோடி 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், லியாண்டர் பயஸ் - ஸ்டப்ஸ் ஜோடி, ஸ்வீடன்-ஆஸ்திரேலிய ஜோடியான ஜோனஸ் போர்க்மென் - அலிசியா மோலிக் ஜோடியும் மோதின. இதில் பயஸ் ஜோடி 3-6, 6-3, 3-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.