பாஜகவிலிருந்து கல்யாண் சிங் விலகல்-மகனுக்கு சமாஜ்வாடி சீட்?

லக்னெள: உ.பி. மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். அவரது மகனுக்கு சமாஜ்வாடி கட்சியில் லோக்சபா சீட் தரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கல்யாண் சிங். உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர். அத்வானிக்கும், கல்யாண் சிங்குக்கும் நெடுங்காலமாகவே கடும் உரசல் இருந்து வந்தது.

இந் நிலையில் சமீபத்தில் திடீரென டெல்லியில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை கல்யாண் சிங் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தினார். இதற்கு அமர்சிங் ஏற்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து கல்யாண் சிங் பாஜகவிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகி விட்டதாக கல்யாண் சிங் இன்று அறிவித்தார்.

லக்னெளவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவில் எனக்கு அவமானமே மிஞ்சியது. அங்கு இருந்த இத்தனை காலமும் மூச்சுத் திணறல் அவஸ்தையை நான் சந்தித்தேன்.

எனக்கு உரிய மரியாதை கொடுக்காத பாஜகவில் இனியும் இருப்பதால் எந்தப் புண்ணியமும் இல்லை. எனவேதான் பாஜக அடிப்படை உறு்பினர் பொறுப்பு முதல் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி விட்டேன்.

எனது ராஜினாமா கடிதத்தை அத்வானிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

தனிக் கட்சி தொடங்கி நடத்தி வந்த நான் மீண்டும் பாஜகவுக்கு வந்தது மிகப் பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்துள்ளேன்.

புதிய கட்சி எதையும் நான் தொடங்கப் போவதில்லை. அதேபோல புதிய கட்சி எதிலும் இணையவும் போவதில்லை என்றார் கல்யாண் சிங்.

இருப்பினும் அவர் சமாஜ்வாடி கட்சியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், கல்யாண் சிங்கின் மகனுக்கு சமாஜ்வாடி கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது.

பாஜகவுக்கு பின்னடைவு:

கல்யாண் சிங் விலகியுள்ளது உ.பி.யில் பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

உ.பி. மாநிலத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்களில் கல்யாண் சிங்கும் ஒருவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் பாஜகவின் பலம் வாய்ந்த முகமாக விளங்கியவர்.

ஆனால் பாஜகவிலிருந்து பிரிந்து தனிக் கட்சி நடத்தி வந்த அவர் பின்னர் மீண்டும் பாஜகவுக்கு திரும்பியது முதலே, அவருக்கு பழைய மரியாதையும், கெளரவமும் பாஜகவில் கிடைக்கவில்லை என கல்யாண் சிங் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அத்வானிக்கும், கல்யாண் சிங்குக்கும் நாளுக்கு நாள் உரசல் முற்றிக் கொண்டே வந்தது. இந்த நிலையில்தான் சரியான நேரமாக பார்த்து சமாஜ்வாடி வீசிய வலையில் கல்யாண் சிங் விழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கல்யாண் சிங்கின் விலகல், லோக்சபா தேர்தலில் உ.பியில், பாஜகவுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை கொடுக்கும் என்றும் உ.பி. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

Videos