நானா சதிகாரன்?- கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

சென்னை: பாமகவுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம். ஐந்து வருட காலமும் திமுக ஆட்சி நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என கூறிய நானா, இந்த அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டும் சதிகாரன் என முதல்வர் கருணாநிதிக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தி உடனடியாக அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

அப்போது டாக்டர் ராமதாஸ் பேசுகையில், கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது; ஈழத்தமிழினம் முற்றாக அழிந்து விட்டது என்று சிலர் மமதையுடன் கூறி வருகிறார்கள்.

ஆனால், தமிழக தமிழர்களும், உலக தமிழர்களும் நிச்சயம் அதனை நம்ப மாட்டார்கள். தமிழனுக்கு வீழ்ச்சியில்லை. தமிழனுக்கு தோல்வியும் இல்லை. இங்கே உள்ள சிலர் ஈழத்தமிழர்கள் அழிய வேண்டும்; சிங்களர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்இன உணர்வுள்ள யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். 1958ம் ஆண்டு ஐ.நா மன்றம் ஒரு கொள்கையை வகுத்து மொழியால், இனத்தால், பண்பாட்டால் பிரிந்துள்ளவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடலாம் என்று கூறியுள்ளது. அதற்கேற்பவே ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அங்கு நடைபெறுவது ஈழத் தமிழர்களின் உரிமைப்போர்.

அங்கு நடைபெறும் கொடுமைகளை பார்த்தால் கல்நெஞ்சம் கொண்டவர்களும் ஏற்க மாட்டார்கள். ஈழத்தமிழர்கள் அந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள் என்பதை இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் அறிவார்கள்.

மதுரை டெசோ மாநாட்டில் பங்கேற்ற வாஜ்பாய், பகுகுணா போன்ற தலைவர்கள் முதற் கொண்டு தற்போதைய அத்வானி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் இந்த உண்மை தெரியும்.

இலங்கை தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் பாரம்பரிய உறவு உண்டு. அந்த அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

உலக நாடுகளும் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஜப்பான் நாட்டு தூதுவரும் நாளை இதற்காக இலங்கை செல்விருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

நார்வே நாடு இருதரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூட, ராணுவ தீர்வு கூடாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், போரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டு அனுப்பினோம். 2 முறை சர்வக்கட்சிகளையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். முதல்வர் தலைமையில் நான் உட்பட எல்லா தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்டோம்; பிரணாப் முகர்ஜியை அனுப்புவதாக உறுதி அளித்தார்கள்.

முகர்ஜி வேண்டாம் - எண்ணம் போதும் ...

ஆனால், இதுவரை போரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைக்கு பிரணாப் முகர்ஜியை கூட அனுப்ப வேண்டாம். போரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கு வந்தாலே போதும். ஒரு தொலைபேசியின் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவித்தாலே போரை நிறுத்தி விடலாம்.

ஆனால், ராஜபக்ஷேவை சந்திக்க சிவசங்கர்மேனனை அனுப்பினார்கள். இவர் அங்கு சென்று இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மிக நெருக்கமான, மிக ஆழமான உறவு இருப்பதாக கூறிவிட்டு வந்துள்ளார்.

மேனன் கொடுமையை என்னவென்று சொல்வது ...

தமிழர்களை அழித்து வரும் இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவை பாராட்டி விட்டு வந்திருக்கிறார். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது.

இதற்காக சர்வக்கட்சிகளும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் சொன்னால் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்கிறேன் என்று சொல்கிறார்கள்.

ஆட்சியில் பங்கு வேண்டாம்; திமுக ஆட்சி 5 ஆண்டுகளும் நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என்று சொன்ன நானா, ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் சதிகாரன்; நிச்சயமாக யார் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.

ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர ஆதரவு என்ற வாக்குறுதியில் இருந்து நாங்கள் மீற மாட்டோம். இலங்கை தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியலை பற்றியும், கூட்டணி பற்றியும், தேர்தல் பற்றியும் சிந்திப்பவர்கள் தமிழர்களே அல்ல.

காப்பாற்ற வழி காணுங்கள், பின்னால் நிற்கிறோம் ...

நீங்கள் (கருணாநிதி) தமிழக முதல்வர் மட்டுமல்ல. உலகத் தமிழர்களின் தலைவர். எனவே நீங்கள் தான் ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற ஏதாவது வழி காண வேண்டும். உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம் என்று மீண்டும், மீண்டும் வேண்டுகோள் விடுகிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் அனைத்து தரப்பினரும் அறவழியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement