ராஜுவுக்காக விதிகளை காற்றில் பறக்கவிட்ட ரெட்டி!

Y S Rajasekhara Reddy and Ramalinga Raju
ஹைதராபாத்: சத்யம் ராமலிங்க ராஜுவுக்கும் அவரது சகோதரர் ராமராஜுவுக்கும் தனது அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாகப் பேசி வந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அடுத்த பக்கம் இப்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளது.

ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், ஆந்திரா மாநிலம் முழுக்க தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. இதற்காக எல்லா மாவட்டங்களிலும் பல நூறு ஏக்கர் நிலங்களை சத்யம் அதிபர் ராமலிங்கராஜூ வாங்கினார். இதில் பெரும் பாலனவை ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களாகும்.

இந்த நிலங்களை சந்தை விலையை விட பல மடங்கு குறைவாக சத்யம் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது சாட்சாத் ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான ஆந்திர அரசுதான் என்ற உண்மை இப்போது புலனாய்வில் தெரியவந்துள்ளது.

சில இடங்களில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியே நேரில் தலையிட்டு நில ஒதுக்கீடுக்கு உதவியுள்ளார்.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் 50 ஏக்கர் அரசு நிலத்தை சத்யம் நிறுவனத்துக்கு முதல்வர் ராஜசேகர ரெட்டி விசேஷ உத்தரவு பிறப்பித்து ஒதுக்கியிருப்பதை புலனாய்வு ஏஜென்ஸிகள் கண்டுபிடித்துள்ளன.

இந்த 50 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கர் நிலம் காவல் துறைக்கு சொந்தமானது. அதில் காவல் துறையினர் கமாண்டோ பயிற்சி மையம் ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனராம். மீதி 25 ஏக்கர் நிலம் விசாகப்பட்டினம் ஊரக மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமாகும். இந்த நில மாற்றத்துக்கு காவல் துறையும் ஊரக மேம்பாட்டுத் துறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன.

ஆனால் சத்யம் நிறுவனத்துக்கு மொத்தமாக ஒரே இடத்தில் 50 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், விசாகப்பட்டணத்தில் அந்த அளவு நிலம் வேறு எங்கும் இல்லாததால், இதையே சத்யம் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்குதாகவும் கூறி, அந்த 50 ஏக்கரை ஒதுக்கினாராம் ரெட்டி.

ராஜசேகர ரெட்டி கொடுத்த நிலத்தின் ஒவ்வொரு ஏக்கரும் 4 முதல் 5 கோடி ரூபாய் மதிப்புடையவை. ஆனால் சத்யம் நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது அரசு.

இதனால் 50 ஏக்கருக்கும் சத்யம் நிறுவனம் 5.01 கோடி ரூபாய் கொடுத்தது. விலை குறைத்து கொடுக்கப்பட்ட காரணத்தால் விசாகப் பட்டினம் ஏரியாவில் மட்டும் ஆந்திர மாநில அரசுக்கு ரூ.195 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படி குறைந்த விலையில் நிலத்தை வாங்க, சில கோடிகளை வேண்டியவர்களுக்கு அன்பளிப்பாக ராஜு கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு நிலங்களை சத்யம் நிறுவனம் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

விசாகப்பட்டின நில விவகாரத்தில், சத்யம் நிறுவனத்துக்காக ராஜசேகர ரெட்டி பிறப்பித்த அரசு ஆணை எண் 1439. இந்த ஆணை ஏதோ சில வருடங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்டதல்ல... ராஜு உண்மைகளை ஒப்புக் கொண்டு ராஜினாமா செய்வதற்கு ஜஸ்ட் ஒரு மாதத்துக்கு (டிசம்பர் 4, 2008) முன் பிறப்பிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

இது ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

நில மோசடி தவிர ஆந்திர மாநில அரசின் பல்வேறு திட்டப்பணி சத்யம் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ஊழல்தான். குறிப்பாக ராஜுவின் குடும்ப நிறுவனமான மேடாஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்கள் மீது மத்திய அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேடாஸ் நிறுவனங்களில் நடைபெறும் புலன் விசாரணைகள் ராமலிங்க ராஜு மற்றும் ராஜசேகர ரெட்டியின் இன்னொரு உலகை வெளிச்சம் போட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

Videos