குடியரசு தின விழா-தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை:  குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பட்டினப்பாக்கம் எம்ஜிஆர் நகரில் உள்ள குற்ற ஆவன காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய சிபிசிஐடி போலீசாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போலீஸ் டிஜிபி கே.பி.ஜெயின் பங்கேற்று தலைமை தாங்கினார். திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற 37 போலீசாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அப்போது நிருபர்களிடம் பேசிய ஜெயின்,

தங்ககாசு மோசடி வழக்கு விசாரணையில் சில முறைகேடு நடைபெற்றதாக தகவலை கிடைத்ததையடுத்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமை காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சிபிசிஐடி போலீசார் சிறப்பாக பணியாற்றி பல வழக்குகளில் வெற்றி கண்டுள்ளனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருப்பது தீவிரவாத அச்சுறுத்தலுக்காக கிடையாது. வேறு ஒரு வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புப் படையின் மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு குழுவினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர் என்றார் டிஜிபி ஜெயின்.

Write a Comment