திமுகவின் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை- பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள்!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற புதிய குடையின் கீழ் தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைத் தமிழர் நலப் பேரவை

அதில், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும்-அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர் கள், மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு- "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'' என்ற அமைப்பின் பெயரால்-தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, மக்கள் மன்றத்தில் விளக்கி, ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட, தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பிரச்சார விளக்கப்பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் வருகிற 7-ந்தேதி சென்னையிலும், 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத்தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...