முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல் - அதிமுகவில் சேருகிறார்?

Subscribe to Oneindia Tamil
Kannappan
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் அவர் அதிமுகவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

ஜெயலலிதாவுக்கு அடுத்து சக்தி வாய்ந்த தலைவராக விளங்கினார்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாமல் மீண்டும் அதிமுகவில் சேர விரும்பினார். ஆனால் ஜெயலலிதா அதற்குப் பச்சைக் கொடி காட்டவில்லை. இதையடுத்து 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பதவி தனக்குக் கிடைக்கும் என ஆவலோடு இருந்தார். ஆனால் அமைச்சர் பதவி அவருக்குக் கிட்டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்தார் கண்ணப்பன்.

மேலும் இனியும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்குப் போய் விட்டது. இதனால் தான் சிரமப்பட்டு திரட்டி வைத்துள்ள யாதவ சமூகத்தினரின் நம்பிக்கையை இனியும் வீணடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கண்ணப்பன் திமுகவிலிருந்து விலக முடிவு செய்து இன்று தனது முடிவை அறிவித்தார். எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.

மீண்டும் அதிமுகவில் இணைய ராஜ கண்ணப்பன் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று யாதவ சமூகத் தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அதிமுகவி்ல் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். இங்கு கண்ணப்பனுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. யாதவ சமுதாயத்தினர் கண்ணப்பனை திடமான தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் மட்டுமே யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடிந்தது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

எனவே கண்ணப்பனின் விலகல் திமுகவுக்கு நிச்சயம் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

யாதவ சமுதாயத்திலிருந்து இதுவரை எந்த வலுவான தலைவரும் இல்லை - கண்ணப்பனைத் தவிர என்பதால், அவரும் விலகியிருப்பது யாதவ சமுதாயத்தினரின் வாக்குகளை இடம் மாற்றும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் கண்ணப்பன் திறமையான பீல்டு ஒர்க்கர். களப்பணியாற்றுவதில் திறமையானவர். திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடிப்பவர். காசு, பணம் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவர். அந்த அடிப்படையில்தான் கண்ணப்பனை தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முக்கியப் பொறுப்புகளை கொடுத்து வைத்திருந்தார்.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கண்ணப்பன் போன்ற திறமையான உழைப்பாளிகள் அருகில் இருந்தால் நலமாக இருக்கும், உறுதுணையாக இருக்கும் என்பதால் அவரை நிச்சயம் ஜெயலலிதா சேர்த்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கண்ணப்பனுக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தால் அவர் மேலும் ஊக்கத்துடன் செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணப்பனின் விலகலால் அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்