தேர்தல் ஆணைய வழக்கு-வருண் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil
Varun Gandhi
அலகாபாத்: பிலிபித் தொகுதியில் தான் பேசியது தொடர்பாக தன் மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள மத துவேஷ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிய வருண் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டை அணுக பாஜக முடிவு செய்துள்ளது.

பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமாக பேசியிருந்தார் வருண் காந்தி. இதுதொடர்பான சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தேர்தல் ஆணையம், வருண் காந்தி, பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வருண் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உ.பி. தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில், வருண் காந்தி பிலிபித் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி மனு தாக்கல் செய்தார். மேலும் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரைக் கைது செய்ய தடை விதித்தது.

இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தியின் மனுவை இன்று தள்ளுபடி செய்து விட்டது.

முன்னதாக தான் தாக்கல் செய்திருந்த மனுவில், மார்ச் 17ம் தேதி பிலிபித் தொகுதிக்குட்பட்ட பர்கேதா காவல் நிலையத்தில் என் மீது 153ஏ (மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்துதல்), 188 (அரசு ஊழியர் பிறப்பித்த உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125வது பிரிவின் கீழும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வருண் காந்தி கோரியிருந்தார்.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளதால், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

ஆனால் இந்த முன்ஜாமீன் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் வருண் காந்தி கைது செய்யப்படக் கூடியவாய்ப்புகள் உள்ளன.

எனவே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

தாக்கரேவுக்கு வருண் நன்றி...

இதற்கிடையே, தனக்காக குரல் கொடுத்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வருண் காந்தி நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து வருண் காந்தி கூறியதாக சிவசேனாவின் சாம்னா இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பால் தாக்கரேவின் ஆதரவால் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நன்றி கூறுகிறேன் என்று வருண் கூறியுள்ளார்.

பிலிபித்தில் வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது குறித்து தாக்கரே எழுதிய தலையங்கத்தில், வருண் பேசியது தவறே இல்லை. இப்படி ஒரு காந்திதான் நமக்குத் தேவை என்று பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்