For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு சரிவு-பலம் பெறும் அதிமுக: ஐபிஎன் கணிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Rajdeep
டெல்லி: கூட்டணியைப் பொறுத்தே மக்கள் வாக்களிக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு சரிவு ஏற்படும். மாறாக, அதிமுக கூட்டணிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாக ஐபிஎன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஐபிஎன் மற்றும் சி.எஸ்.டி.எஸ் இணைந்து இந்த கணிப்பை வெளியிட்டுள்ளன.

ஐபிஎன் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயும், சிஎஸ்டிஎஸ்ஸின் யோகேந்திர யாதவும் இதுகுறித்து விளக்கியுள்ளதாவது ..

யார் வென்றாலும் பிரமாண்டம்..

மிகப் பெரிய அளவில் மாற்றங்களை சர்வசாதாரணமாக தருவது தமிழ்நாடு. கடைசி வரை கணிக்கவே முடியாத அளவுக்கு தமிழக வாக்காளர்களின் மன நிலை உள்ளது.

எனவே இங்கு யார் வெற்றி பெற்றாலும் அது பிரமாண்ட வெற்றியாகவே இருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

கடந்த தேர்தலைப் போலவே, தமிழக தேர்தல் முடிவுகள்தான் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை முடிவு செய்யும் கருவியாக இருக்கும். இது 1996ம் ஆண்டு முதலே நிலவி வருகிறது.

யாருக்கு கிடைக்கும் 5% கூடுதல் வாக்குகள்...?:

தமிழகத்தைப் பொறுத்தவரை 30 சதவீத வாக்குகளை திமுகவும், அதிமுகவும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் 4 முதல் 5 சதவீத வாக்குகளை யார் கூடுதலாக பெறுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி.

முன்பு காங்கிரஸ் கட்சிதான் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இருந்து வந்தது. அவர்கள் தமிழகத்தில் யாருடன் கூட்டணி அமைக்கிறார்களோ அந்த அணியே வெற்றி பெறும் நிலை இருந்தது.

ஆனால் தற்போது அது மாறி விட்டது. காங்கிரஸ் கட்சியின் இடத்தை விஜய்காந்த் உள்ளிட்டோர் பங்கு போட ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா பொது தேர்தலில் திமுக கூட்டணிக்கு 57 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிமுக கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைத்தன. இடைவெளி 22 சதவீதமாகும்.

2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் வாக்கு சதவீத இடைவெளி வெகுவாக குறைந்து 5 சதவீதமாக சுருங்கியது.

திமுக கூட்டணிக்கு 45 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இருந்தன. அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இருந்தது.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக அமைத்த மெகா கூட்டணியே அதன் பெரும் வெற்றிக்குக் காரணம். இருப்பினும், சட்டசபைத் தேர்தலின்போது அதன் கூட்டணி பலம் குறைந்து போய் விட்டது. காரணம், அப்போது பாமகவும், காங்கிரஸும் மட்டுமே திமுக கூட்டணியில் இருந்தன.

தற்போதைய லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இதுவரை திமுகவுடன் இருந்து வந்த மதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை வந்து விட்டன.

2006 முதலே திமுகவுக்கு சரிவு...

கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணியின் சரிவு 2006ம் ஆண்டு முதலே தொடங்கி விட்டது.

வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே முக்கிய கட்சி. காங்கிரஸின் வாக்கு பங்கு 10 சதவீதம்தான்.

அதேசமயம், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவற்றின் வாக்கு பங்கு 3 சதவீதம். பாமகவின் வாக்கு பங்கு 6 சதவீதம். இதுதவிர மதிமுகவும் இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக மொத்தமாக ஓரம் கட்டப்பட்டு விட்டது. தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

2004 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி பெற்றது. அதிமுகவுக்கு பூஜ்ஜியமே கிடைத்தது.

திமுக அரசு நல்லரசை நடத்தவில்லை. குடும்பச் சண்டைகள், ஊழல் புகார்கள், முக்கியப் பிரச்சினைகளை சரிவர கையாளாதது ஆகியவை திமுகவுக்கு எதிராக போகும்.

திமுகவைப் பொறுத்தவரை இதுவரை கருணாநிதி மட்டுமே ஒரே தலைவராக இரு்நதார். ஆனால் தற்போது அந்த இடத்திற்கு மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கிடையிலான போட்டியும் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கை குறைத்துள்ளது.

பாமகவின் சாமர்த்தியம் அதிமுகவுக்கு உதவும்..

முக்கிய வாக்கு வங்கியான வன்னியர் சமுதாயத்தினரின் ஆதரவைப் பெற்றுள்ள கட்சியாக பாமக விளங்குகிறது. இது அதிமுகவுக்கு பெரும் பலமாகும்.

அதேசமயம், பாமகவின் செல்வாக்கு முன்பு போல இல்லை, அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தங்களிடம் உள்ள ஆதரவை வாக்குகளாக திருப்பும் சாமர்த்தியம் பாமகவிடம் உள்ளது. இதுதான் முக்கியமானது.

விஜயகாந்த்தால் யாருக்கு நஷ்டம் அதிகம்..?

விஜயகாந்த் போன்ற அரசியல் தலைவர்களால் தமிழகத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் இருமுனை அரசியலுக்கு பேராபத்து வந்துள்ளது. தனது ஆதிக்கத்தால் மும்முனைப் போட்டியாக சமீபத்திய தேர்தல்களை மாற்றி வருகிறார் விஜயகாந்த். அதனால்தான் யாருடனும் அணி சேருவதை அவர் தவிர்த்து வருகிறார்.

இலங்கை விவகாரம் பெரிதாக இருக்குமா?

இலங்கை, விடுதலைப் புலிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி உதட்டளவோடு நின்று கொண்டுள்ளன. உணர்வுப் பூர்வமாக இரு கட்சிகளும் வெவ்வேறு குரல்களில் பேசினாலும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

தீர்ப்பு...

கடந்த தேர்தல்களில் தனக்குக் கிடைத்திராத அளவுக்கு தற்போது கிடைத்துள்ள பெரிய கூட்டணி என்ற சாதகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.

மொத்தத்தில், திமுகவுக்கு இது களத்தை இழக்கும் சண்டையாக மாறியுள்ளது. தற்போதைக்கு ஜெயலிலதாவின் கையே ஓங்கியுள்ளது. அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.

தமிழகத்தில் கடைசி கட்டமாகத்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே கடைசி நேரத்தில் வாக்காளர்கள் மனதில் ஏற்படும் மாற்றங்களால் வாக்குப் பகிர்வில் மாற்றம் ஏற்படக் கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X