For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா-புலிகள் சந்திப்பு: நார்வே மீது இலங்கை பாய்ச்சல்

By Sridhar L
Google Oneindia Tamil News

கொழும்பு: நார்வே முயற்சியினால் நடந்த ஐ.நா. பிரதிநிதிகள், விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பால் இலங்கை கடுப்பாகியுள்ளது. நார்வே நாட்டுத் தூதரை அழைத்து இலங்கை அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க சர்வதேச பிரதிநி குமரன் பத்மநாதனுக்கும், ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் தலைவர் ஜான் ஹோம்ஸுக்கும் இடையே நார்வே முயற்சியால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நார்வே முயற்சியால்தான் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும் இலங்கை அரசு இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை தூக்கிப் போட்டு விட்டு கடும் போரில் குதித்தது.

இதையடுத்து நார்வே அமைதிக் குழுவினர் இலங்கையை விட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் ஐ.நா. அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதி சந்திக்க நார்வே ஏற்பாடு செய்ததால் இலங்கை கடுப்பாகியுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சம், கொழும்பில் உள்ள நார்வே நாட்டு தூதர் டோர் ஹாட்ரமை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் எப்படி இத்தகைய ஏற்பாட்டை செய்யலாம் என்று நார்வே தூதரிடம் இலங்கை அரசு கேட்டுள்ளது.

மேலும் பல புகார்கள் குறித்தும் நார்வே தூதரிடம் விளக்கம் கேட்டதாம் இலங்கை அரசு.

ஜான் ஹோம்ஸுக்கும், பத்மநாதனுக்கும் இடையிலான சந்திப்புக்கு தனது நாட்டு அரசுதான் ஏற்பாடு செய்தது என்று அப்போது ஹாட்ரம் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை ஏற்காத இலங்கை அரசு, இது தூதரக ரீதியிலான உறவுகளை சீர்குலைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு கண்டிப்பாக இலங்கையை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று இலங்கை தரப்பில் கூறப்பட்டதாம்.

சமீபத்தில், ராஜபக்சே கட்சியின் கூட்டாளிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணி என்ற சிங்கள இனவாத கட்சி, நார்வே நாட்டுடனான உறவை இலங்கை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கடும் சண்டை..

இதற்கிடையே இலங்கைப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடைய வடக்கில் கடும் சண்டை நடந்து வருகிறது.

படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை தொடுத்துள்ளதாகவும், இதில் இலங்கைப் படைகளுக்கு கடும் சேதம் விளைந்துள்ளதாகவும் புலிகள் தரப்பு இணையதளம் தெரிவிக்கிறது.

வன்னிப் பகுதியில், பல முனைகளிலும் விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருவதால் ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.

இதற்கிடையே புதன்கிழமை நடந்த கடும் சண்டையில் 21 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பு கூறுகிறது.

இருப்பினும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் தங்களது தாக்குதலில் இறந்து போய் விட்டதாக புலிகள் தரப்பு கூறுகிறது.

'30 நிமிஷத்தில் புலிகளை அழிக்க முடியும்':

இந் நிலையில் விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு அரை மணி நேரம் போதும். ஆனல் அவர்கள் வசம் உள்ள அப்பாவி மக்களின் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே.

இதுகுறித்து இலங்கை சுதந்திரா கட்சியின் கூட்டம் ஒன்றில் விக்கிரமநாயகே பேசுகையில், விடுதலைப்புலிளை அரை மணி நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அழித்து விடக் கூடிய திறமை எங்களது படைகளிடம் உள்ளது.

ஆனால் ராணுவம் அப்படிச் செய்ய விரும்பவில்லை. காரணம், விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள அப்பாவி மக்களை நாங்கள் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கை வளம் பெற நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதத்தை முழுமையாக அழித்துக் கொண்டிருக்கும் நேரம் இது.

இந்த வேலை முடிந்து விட்டால், நமது தாயகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மக்களும், அரசும் இணைந்து செயலாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்றார் விக்கிரமநாயகே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X